கொன்றை சிங்கராஜாவுக்குக் கலைகளின் மீது ஈடுபாடு அதிகம்.
அன்று மயிலின் ஓவியக் காட்சி. பக்கத்துக் காடுகளில் இருந்தும் ஓவியக் காட்சியைக் காணப் பலர் வந்திருந்தனர். பலரும் மயிலின் ஓவியத் திறமையைக் கண்டு வியந்தனர்.
மாலையில் முத்து சிங்கராஜா தன் பரிவாரங்களுடன் ஓவியக் காட்சியைக் காண வந்தது. “இந்த ஓவியங்கள் பிரமாதம்! ஆனால், எங்கள் குரங்கு இன்னும் சிறப்பாக ஓவியங்களைத் தீட்டும்.” “அப்படியா! ஓவியம் வரையச் சொல்லுங்களேன், நாங்களும் கண்டுகளிப்போம்” என்றது கொன்றை சிங்கராஜா.
“குரங்கே, ஓவியம் தீட்டுகிறாயா?” “மன்னிக்கவும் மன்னா. என்னால் சும்மா வரைய முடியாது. நம் காட்டுக்கும் அவர்கள் காட்டுக்கும் போட்டி வைத்தால் பங்கேற்கிறேன்” என்றது குரங்கு.
“என்ன ஆணவம்?” என்றது மயில். “நான் கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பவன். எல்லாரும் ஒரே மாதிரியான திறமையுடன் இருக்க முடியாது. நீயா, நானா என்கிற போட்டி வேண்டாமே?” என்றது கொன்றை சிங்கராஜா.
“மன்னா, இவர்களுக்கு என்னுடன் போட்டிப் போட்டு வெல்ல இயலாது என்கிற பயம்” என்றது குரங்கு. உடனே மயில், ”மன்னா, போட்டிக்கு நான் தயார்” என்றது. “என்னுடன் இரண்டு பேர் மோதலாம். இருவரில் ஒருவர் வென்றாலும் நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்” என்றது குரங்கு.
“முதலில் யார் போட்டியிடப் போவது?” “வேறு யார், மயில்தான்.” “எனக்கு ஓவியம் வரைய ஐந்து நாள்கள் தேவைப்படும். இந்த ஐந்து நாள்களுக்குள் மயிலும் ஓவியத்தை வரைந்து முடித்துவிட வேண்டும். நாளை காலை போட்டி ஆரம்பமாகும்” என்றது குரங்கு.
“சரி, நாங்கள் ஐந்தாவது நாள் மாலை வருகிறோம்” என்றது முத்து சிங்கராஜா. “மன்னா, வீண் அலைச்சல் வேண்டாம். அடுத்த வாரம் வாருங்கள். இரண்டாவது போட்டியும் முடிந்திருக்கும். கலை ஆர்வம் மிக்க கொன்றை சிங்கராஜா ஏராளமான பரிசுகளை அளிப்பார்! அவற்றை எடுத்துச் செல்ல யானைகளை அனுப்பி வையுங்கள்” என்றது குரங்கு.
மறுநாள் காலை போட்டி ஆரம்பமானது. “குரங்கு திறமைசாலிதான். நேர்த்தியாக வரைந்து கொண்டிருக்கிறது. மயில் ஏதோ பதற்றத்தில் இருக்கிறது போலிருக்கே.”
“ஆமாம், போட்டியில் வென்று நம் காட்டுக்குப் பெருமைத் தேடித் தர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்தானே?” “ஆனாலும் மயில் ஓவியத்தை நிறைவு செய்யும்போது சிறப்பாகச் செய்துவிடும். இதுதான் அதனுடைய வழக்கம்.”
இப்படி மான், முயல், கழுதை எல்லாம் பேசிக்கொண்டன. போட்டியின் இறுதி நாள். நடுவராகப் பனைக்காட்டிலிருந்து சிறுத்தை வந்திருந்தது. இரண்டு ஓவியங்களையும் பார்வையிட்டது. விலங்குகளும் பறவைகளும் முடிவைக் கேட்க ஆர்வமாகக் காத்திருந்தன. “குரங்கும் மயிலும் மிகச் சிறந்த ஓவியர்கள். மிகக் குறைவான மதிப்பெண்ணில் குரங்கு வெற்றி பெற்றுள்ளது” என்று அறிவித்தது சிறுத்தை.
மயிலுக்கு ஏமாற்றமாக இருந்தது. “இன்னொரு போட்டி வைத்துக்கொள்ளலாமா? இல்லை, இந்தப் போட்டியே போதுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டது குரங்கு. “முன்பே சொன்னதுபோல இரண்டாவது போட்டியும் நடைபெறும்” என்றது கொன்றை சிங்கராஜா.
“மன்னா, இந்த முறை போட்டியை எளிதாக்குகிறேன். நான் வரைவதைப் பார்த்து அப்படியே வரைந்தால் போதும். என் அளவுக்கு வரைந்தால்கூட நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்” என்றது குரங்கு. “சரி, யார் குரங்குடன் போட்டிக்கு வருகிறீர்கள்?” என்று கேட்டது சிங்கராஜா. ஒருவரும் முன்வரவில்லை.
சிரித்தது குரங்கு. “மன்னா, நான் போட்டிக்குத் தயார். பாழடைந்த கண்ணாடி மாளிகையில்தான் போட்டி நடக்க வேண்டும். எனக்கும் குரங்குக்கும் இடையில் ஒரு திரை கட்டியிருக்க வேண்டும்” என்றது மான்.
“ஹா... ஹா... நான் வரைவதைப் பார்த்து வரைய வேண்டும் என்பதுதானே போட்டி?” “உனக்குத் தேவை என்ன? நீ வரையும் இடத்துக்கு எதிரில் உன் ஓவியம்போல் ஒரு ஓவியம் இருக்க வேண்டும் என்பதுதானே?” “ஆமாம்.” “அப்படி என்றால் நான் உன் ஓவியத்தைப் பார்க்காமலே வரைவேன். நான் சொன்னபடி செய்யுங்கள் மன்னா” என்றது மான்.
கண்ணாடி மாளிகையின் ஒரு பக்கம் குரங்கு வரைய ஆரம்பித்தது. இன்னொரு பக்கம் மான் நின்றது. இருவருக்கும் இடையில் ஒரு திரை போடப்பட்டது. குரங்கு வண்ணங்களை எடுத்துச் செல்ல, மானோ நீரை எடுத்துச் சென்றது. இரண்டாவது நாள் எட்டிப் பார்த்த முயலும் வாத்தும் அதிர்ச்சியடைந்தன.
“குரங்கு கால்வாசி ஓவியத்தை முடித்து விட்டது. மானோ அழுக்குப் படிந்த கண்ணாடிச் சுவரையே இன்னும் கழுவிக் கொண்டிருக்கிறதே?” என்றது முயல். “நாம் தோற்பது உறுதி ” என்று வருத்தப் பட்டது வாத்து. ஐந்தாம் நாள் மாலை. இரு காட்டுச் சிங்கராஜாக்களும் வந்தன. முதலில் குரங்கின் ஓவியத்தைப் பார்த்தார்கள். மெய்மறந்தார்கள்.
“அற்புதம்... அற்புதம்...” என்று குரல்கள் கேட்டன. குரங்குக்குப் பெருமையாக இருந்தது. “மானே, உன் ஓவியத்தைக் காணலாமா?” என்று கேட்டது கொன்றை சிங்கராஜா. “இதோ” என்று சொல்லிவிட்டு, திரையை விலக்கியது மான். அங்கே கண்ணாடிச் சுவற்றில் குரங்கு வரைந்த ஓவியம் பிரதிபலித்தது.
“ஆஹா! அச்சு அசலாக வரைந்திருக்கிறது மான்!” என்று எல்லாரும் உற்சாகத்தில் கத்தினர். “இல்லை, இது கண்ணாடியின் பிரதி பலிப்பு...” என்றது குரங்கு.
“நீ வரையும் இடத்துக்கு எதிரே உன் ஓவியம் போல் அச்சு அசலாக இருக்க வேண்டும் என்றுதானே சொன்னாய்? இதோ கண்ணாடியில் ஓவியம் பிரதிபலித்திருக்கிறது” என்றது மான்.
“இல்லை... நான் சொன்னது இதுவல்ல...” “குரங்கே, உன்னை மாதிரி எப்படி இன்னொருவரால் வரைய முடியும்? இதெல்லாம் போட்டியா?” என்று கேட்டது முத்து சிங்கராஜா. “திறமை இருக்கலாம், தலைக்கணம் கூடாது.
மயிலுடன் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற குரங்குக்கு நூறு பொற்காசுகளை அளிக்கிறேன். சாமர்த்தியமாக யோசித்த மானுக்குப் பாராட்டுகள்” என்றது கொன்றை சிங்கராஜா. நன்றி சொல்லிவிட்டுப் பரிசைப் பெற்றுக்கொண்டது குரங்கு.