மலை அருவியைப் பார்த்துவிட்டு ஒத்தையடிப் பாதையில் கீழே இறங்கி வந்ததால் ஜிமாவுக்குக் கால்கள் வலித்தன. சாபிராவும் களைத்திருந்தாள். “நீலி, கொஞ்சம் ஓய்வெடுத்துட்டுப் போகலாமா?” என்று கேட்டாள் ஜிமா.
மூவரும் அங்கிருந்த ஒரு பெரிய வன்னி மரத்தடியில் உட்கார்ந்தார்கள். ஜிமா தன் அலைபேசியை எடுத்து எதையோ தேடினாள். நீலி வியப்புடன் அவளையே பார்த்தாள். செண்பகக் காட்டை ஒட்டிய மலைக்கிராமத்தில் நீலி தன் தாத்தாவுடன் வசிக்கிறாள். கோடை விடுமுறையில் நகரில் வசிக்கும் ஜிமா, தோழி களுடன் செண்பகக் காட்டுக்கு வந்துவிடுவாள். நீலியைச் சந்தித்ததிலிருந்து ஜிமாவுக்கு மலைப் பயணம் பிடித்துவிட்டது.
“ஜிமா, நீ இங்க ஏதோ தட்டுற, அங்க யாருக்கோ செய்தி போகுது... அவங்க பதில் அனுப்புறாங்க. இதெல்லாம் எப்படி நடக்குது?” என்று ஆவலோடு கேட்டாள் நீலி. “இது இணையவழித் தொடர்பு நீலி. இதைத்தான் ‘இன்டர்நெட்’னு சொல்வாங்க. பூமிக்கு அடியில கேபிள்கள் பதிச்சிருக்காங்க. அது மூலமாதான் தகவல்கள் மின்னல் வேகத்துல பகிர்ந்துகொள்ளப்படுது” என்றாள் ஜிமா.
நீலி சட்டென்று மண்ணைத் தடவிப் பார்த்து, “அப்போ காட்டுக்கு அடியிலயும் இதுபோல கேபிள் இருக்குமா என்ன? ” என்று ஆச்சரியமாகக் கேட்டாள். “இங்க ஏது நீலி கேபிள்? ” என்றாள் ஜிமா. அங்கு வந்த நீலியின் தாத்தா வேலன், அவர்களின் பேச்சைக் கேட்டுச் சிரித்தார்.
“ஏன் ஜிமா, காட்டுக்கு அடியில கேபிள் இல்லன்னு சொல்லிட்ட? மனுஷங்க கேபிள்களைக் கண்டுபிடிக் கிறதுக்கு முன்னாடியே காடு தனக்குன்னு இணைய வசதிய வச்சிருக்கு தெரியுமா? ” என்றார். மூவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
“இந்த மரங்கள் எல்லாம் சும்மா ஒண்ணுக்கு இன்னொண்ணு சம்பந்தம் இல்லாம நிக்கல. மண்ணுக்கு அடியில வேரோடு வேரா கைகோத்து ஒண்ணோடு இன்னொண்ணு பேசிட்டு இருக்கு” என்றார். தாத்தா சொன்னதை மூவரும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த வன அதிகாரி, “வேலன் சொல்வது உண்மை.
அவர் தன் அனுபவத்தில் சொல்வதை நாங்கள் அறிவியல்ரீதியாக'வுட் வைடு வெப்' அதாவது ‘காட்டின் இணைய வலை’ன்னு சொல்வோம்” என்றார். ஜிமா ஆர்வத்துடன், “அப்படின்னா நிஜமாவே மண்ணுக்கு அடியில கேபிள் இருக்குமா சார்?” என்று கேட்டாள். “ஜிமா, இது இயற்கை போட்ட கேபிள்.
மரத்தோட வேர்கள்ல ‘பூஞ்சை' இழைப் படர்ந்திருக்கும். இது வெறும் பூஞ்சை இல்ல. காட்டோட தகவல் தொடர்பு கேபிள். மரம் தன்கிட்ட இருக்குற சர்க்கரையை இந்தப் பூஞ்சைக்குக் கொடுக்கும். பதிலுக்கு இந்தப் பூஞ்சை மண்ணுல இருக்குற தாதுக்களை மரங்கள் உறிஞ்ச உதவும். இப்படித்தான் காடு முழுக்க ஒரு வலைப்பின்னல் ஓடுது” என்றார் வன அதிகாரி.
உடனே தாத்தா, “இந்த இணைய வசதி எவ்வளவு பெருசு தெரியுமா? உங்க பாதங்களுக்கு அடியில பல நூறு கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த வலைப்பின்னல் படர்ந்திருக்குது”என்றார். ஜிமா தன் அலைபேசியைக் காட்டி, “அப்போ நாங்க மெசேஜ் அனுப்புற மாதிரி மரங்களும் செய்தி அனுப்பிக்கொள்ளுமா?” என்று கேட்டாள்.
“ஆமாம்! யாராவது ஒரு மரத்தை வெட்டுனா, அந்த மரம் படுற வலியை இந்தத் தகவல் தொடர்பு மூலமா மத்த மரங்களுக்குச் சொல்லிடும். உடனே மத்த மரங்கள் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கும்” என்றார் தாத்தா.
வன அதிகாரி, “பூச்சிகள் தாக்கினால்கூட அந்த எச்சரிக்கை செய்தி மத்த மரங்களுக்குப் பரவும். அதுமட்டுமல்ல ஜிமா, ஏதோ ஒரு மரம் பலவீனமா இருந்துச்சுன்னா, பக்கத்துல இருக்குற மரங்கள் தங்களோட உணவை வேர் வழியா அந்த மரத்துக்கு அனுப்பி, காப்பாத்தும். அதாவது, காடுங்கிறது வெறும் மரங்களின் கூட்டம் இல்ல. அது நம்ம குடும்பம் மாதிரி” என்று விளக்கினார்.
சாபிரா அந்தப் பெரிய வன்னி மரத்தைக் காட்டி, “அப்போ இந்த மரத்துக்கும் மத்த மரங்களுக்கும் பேசும் வசதி இருக்குமா சார்?” என்றாள். “நிச்சயமா. காட்டுல இருக்குற வயதான மரங் களைத் ‘தாய் மரங்கள்’ன்னு சொல்வோம். இந்தத் தாய் மரம் தன்னைச் சுத்தி இருக்குற சின்னசின்ன மரக்கன்றுகளைப் பிள்ளைகளா நெனச்சு, தேவை யான சத்துகளை வலைப்பின்னல் வழியா அனுப்பிப் பத்திரமாப் பார்த்துக்கும்” என்றார் வன அதிகாரி.
தாத்தா மெதுவாக வன்னி மரத்தின் பட்டையைத் தடவிக் கொடுத்தபடி சொன்னார், “இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா? ஒரு தாய் மரம், தான் இறக்கப் போறோம்னு தெரிஞ்சுட்டா, தன்கிட்ட மிச்சம் இருக்குற எல்லாச் சத்துகளையும், வேதி சமிக்ஞைகளையும் இந்த வேர் வழியா இளைய மரங்களுக்குக் கடத்திவிடும். அதுதான் தாய்மரத்தோட தியாகம்” என்றார்.
ஜிமா வியப்புடன் தன் அலைபேசியை அணைத்துவிட்டு மண்ணைத் தொட்டுப் பார்த்தாள். “நிஜமாவே காடு ஒரு பெரிய குடும்பம்தான் தாத்தா. மரங்கள் இப்படி உதவியும் தியாகமும் செய்யுறது ஆச்சரியமா இருக்கு” என்றாள். சாபிராவும் ஜிமாவும் அந்த வன்னி மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.