மாயா பஜார்

மண்ணுக்கு அடியில் தீ | கதை

கொ.மா.கோ.இளங்கோ

மலைக்காட்டுக்குள் வேலன் தாத்தாவுடன் நீலியும் கோதையும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றனர். காட்டில் பறவைகளின் கீச்சுக்குரலும் சிற்றோடையின் சலசலப்பும் உற்சாகத்தை அளித்தன. “நீலி, அந்தப் புல்வெளியைப் பாரு. கண்ணைப் பறிக்குது” என்று சொல்லிவிட்டு, கேமராவில் படங்களை எடுத்தாள் கோதை.

“தாத்தா, அங்கே போய்ப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் நீலி. “பார்க்கலாம்... ஆனா, பாதையை விட்டு விலகிடாதீங்க” என்று எச்சரித்தபடியே நடந்தார் தாத்தா. புல்வெளியை நெருங்க நெருங்க, ஏதோ வித்தியாசமான நெடி மூக்கைத் துளைத்தது.

“ஏதோ எரிவதுபோல் வாசனை வருது” என்றாள் கோதை. “ஆமா, ஆனால் இது வழக்கமான விறகு எரியும் வாசனை இல்லை” என்றார் தாத்தா. “ஐயோ, அங்கே பாருங்க... புகை வருது” என்று கத்தினாள் நீலி.

தாத்தா கூர்ந்து கவனித்தார். புல் எரியவில்லை. மரங்கள் தீப்பற்றவில்லை. ஆனால், புல்வெளிக்கு நடுவில் இருந்து புகை வெளியேறியது. “அடடே... நெருப்பே இல்லாமல், புல்லும் எரியாமல் தரையிலிருந்து எப்படிப் புகை வருது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் கோதை. அப்போது, “யாரும் அந்தப் பக்கமாகப் போகாதீர்கள்” என்று ஒரு குரல் கேட்டது.

எல்லாரும் வனக் காவலர் மதிவாணன் ஓடிவருவதைக் கண்டனர். “எனக்கு தகவல் வந்துச்சு. யாரும் பக்கத்தில் போகாதீங்க, ஆபத்து.” புகை வரும் இடத்தைச் சுற்றிலும் புல் பசுமையாக இருந்ததை அவரும் கவனித்தார். கருகிய அடையாளம் எதுவும் இல்லை.

“மாமா, நான் தூரத்திலிருந்து ஒளிப்படம் எடுக்கலாமா?” என்று கேட்டாள் கோதை. “சரி, ஆனால் பாதுகாப்பான இடத்திலிருந்து எடு” என்றார் மதிவாணன். கோதை புகை வெளிவரும் இடத்தைப் படம் எடுத்தாள். முதல் படத்தில் புகை எழும் இடம் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அடுத்த படத்தை எடுத்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

“அங்கே பாருங்க... இன்னொரு இடத்திலும் புகை வருது” என்று கோதை கத்தியதும் மூவரும் திரும்பிப் பார்த்தனர். படத்தைப் பார்த்துவிட்டுப் புல்வெளியை மதிவாணன் ஆராய்ந்தார். கொஞ்சம் தள்ளி இன்னோர் இடத்திலும் புகை. ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் புகை வெளியேறியது.

“காத்தே வீசல... எப்படி ஒரே நேரத்தில் மூணு இடங்கள்ல புகை வருது?” என்று குழப்பத்துடன் கேட்டாள் நீலி. மதிவாணனின் முகத்தில் கவலை தெரிந்தது. “இது சாதாரண விஷயமில்ல... தரைக்கு அடியில் எரிஞ்சுக்கிட்டு இருக்கு” என்று சொன்னவர், உடனே திறன்பேசியை எடுத்து வனச் சோதனைச் சாவடியைத் தொடர்புகொண்டார்.

“புரசம்பாறைச் சோலைக்காட்டு எல்லையில் உள்ள புல்வெளியில் தரையிலிருந்து புகை வெளியேறுவதைக் கவனித்தேன். தரைக்குள் தீ கனன்று கொண்டிருக்குமோன்னு சந்தேகமாக இருக்கு. உடனே வெப்பத்தை அளக்கும், தீயைக் கட்டுப்படுத்தும் கருவிகளோடு வாங்க.”

சிறிது நேரத்தில் வனப்பணியாளர்கள் வந்தனர். சுற்றிலும் எச்சரிக்கை அடையாளங்களை வைத்துவிட்டு, வெப்பத்தை அளக்கும் கருவியை வைத்துச் சோதித்தனர். கருவி காட்டிய அளவைப் பார்த்த பணியாளர் ஒருவர், “சார்,இந்த இடத்தில் தரையின் வெப்பம் அதிகமா இருக்கு” என்றார். “ஆனால் மேலே தீப்பிழம்பே இல்லையே, சார்?” என்று நீலி கேட்டாள்.

“நெருப்பு எப்போதும் தீப்பிழம்பாகத்தான் எரியணும்னு இல்ல. காட்டில் உதிரும் இலைகள், சருகுகள் எல்லாம் காலப்போக்கில் மட்கி மண்ணுக்கு அடியில் தடிமனான கரிம அடுக்காக மாறியிருக்கும்.

இதை நாங்கள் ‘பீட்’ (Peat) அடுக்குன்னு சொல்வோம். நல்லா காய்ஞ்சு போயிருக்கும்போது, தீயின் கனல் உள்ளே இறங்கிவிட்டால், யாருக்கும் தெரியாமல் தரைக்கு அடியில் புகைஞ்சுகிட்டே இருக்கும். அதற்கு ‘மண் அடித் தீ’ன்னு (Ground Fire) பேரு. இது காட்டுத் தீயாக மாறும் ஆபத்தும் இருக்கு” என்றார் மதிவாணன்.

“அப்படின்னா மண்ணுக்குள் நெருப்பு ஒளிஞ்சிருக்கா?” என்றாள் நீலி. “ஆமா, மின்னல் தாக்கினாலோ மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட தீயின் தணல் உள்ளே இறங்கினாலோ, இப்படிப் பல நாள்களாக எரியும்.”

உடனே பணியாளர்கள் மண்ணைக் கவனமாகத் தோண்டிப் பார்த்தனர். அங்கே கருகிய சருகுகளும் கனன்று கொண்டிருந்த தணலும் தெரிந்தன. தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருக்க, மண்ணில் வாய்க்கால் வெட்டி, அந்தப் பகுதியைச் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் தண்ணீரையும் மண்ணையும் கலந்து ஊற்றி, அடியில் இருந்த தணலை அணைத்தனர்.

“தரைக்குக் கீழே நெருப்பு இருந்தால், மேலே இருக்கிற புல்லும் எரிஞ்சிருக்கணுமே? ஆனால், புல் பச்சையாவே இருக்கே?” என்றாள் கோதை. “நல்ல கேள்வி. தரைக்குக் கீழே எல்லா இடங்களிலும் வெப்பம் ஒரே மாதிரியா இருக்காது.

மண்ணின் ஈரப்பதம், காற்றுப் போகும் வழி, கரிமப் பொருளின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து வெப்பம் மாறுபடும். அதனால் மேலே புல் பச்சையாக இருந்தால், உள்ளே ஆபத்து இல்லைன்னு நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.

நல்லவேளை, பெரிய காட்டுத் தீ உருவாகும் ஆபத்தைத் தடுத்துவிட்டோம்” என்றார் மதிவாணன். “காடு எவ்வளவு விஷயங்களை ஒளிச்சு வச்சிருக்கு! உங்களுக்கும் தாத்தாவுக்கும் நன்றி மாமா” என்று தான் எடுத்த ஒளிப்படங்களைப் பார்த்தபடியே சொன்னாள் கோதை.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT