மாயா பஜார்

கோழியும் முட்டைகளும் | கதை

ஜி.சுந்தரராஜன்

மிதிலாபுரத்தில் மல்லையா என்கிற பணக்காரர் வாழ்ந்து வந்தார். அவர் வயலில் விளைந்த நெல் மூட்டைகளை வியாபாரம் செய்வதற்காக வண்டியில் ஏற்றச் சொன்னார். நெல் மூட்டை ஒன்றை ஏற்றும்போது ராமு கால் இடறி மூட்டையைக் கீழே போட்டுவிட்டார். மூட்டையை எடுக்கும்போதுதான் ஒரு கோழி மீது விழுந்துவிட்டது என்று தெரிந்தது.

“அநியாயமா கோழியைக் கொன்னுட்டியே... அது இப்பதான் முட்டை போட ஆரம்பிச்சது. இன்னும் ஒரு வருஷத்துக்கு முட்டை போடும். நீ அதோட ஆயுளையே முடிச்சுட்டியே... மரியாதையா கோழிக்கான விலையும் ஒரு வருஷம் அது போடும் முட்டைக்கான விலையும் சேர்த்து எனக்குக் கொடுத்துவிடு” என்று மிரட்டினார் மல்லையா.

          

அப்போது அந்த வழியாகப் பஞ்சாயத்து தலைவர் விநாயகம் வந்துகொண்டிருந்தார். ஊரில் எந்தப் பிரச்சினை என்றாலும் வழக்கு அவரிடம்தான் வரும். நியாயமாகத் தீர்ப்பு வழங்குவார். “உங்களுக்குள் என்ன பிரச்சினை?” என்று கேட்டார் விநாயகம்.

மல்லையா நடந்ததைச் சொன்னார். “ஐயா, இது நான் அறியாமல் நடந்த தவறு. வேண்டுமென்றால் கோழிக்கான விலையைக் கொடுத்து விடுகிறேன். இவர் அது போட இருந்த ஒரு வருஷத்துக்கான முட்டைகளுக்கும் பணம் கேட்கிறார். என்னால் முடியாது” என்றார் ராமு.

“அவர் கேட்பது நியாயம்தானே? அதற்கான விலையை ராமு கொடுத்துதான் ஆகவேண்டும்” என்றார் விநாயகம். “நீங்க எப்போதும் நியாயமாக நடந்துகொள்வீர்கள்” என்றார் மல்லையா மகிழ்ச்சியாக. “மல்லையா, கோழிக்கும் ஒரு வருஷம் போட இருந்த முட்டைக்கும் பணத்தை ராமு கொடுத்துவிடுவார். ஆனால், நீங்க ஒரு வருஷத்துக்குக் கோழிக்குத் தீனியாக எவ்வளவு நெல் போடுவீங்க?” என்று கேட்டார் விநாயகம்.

“ஒரு மூட்டையில் இருந்து ஒன்றரை மூட்டை வரை ஆகும்...” “அப்படின்னா, நீங்க ஒன்றரை மூட்டை நெல்லை ராமுவுக்குக் கொடுத்துட்டு, அவர் கிட்ட நீங்க கேட்ட பணத்தை வாங்கிக்குங்க.” மல்லையா கணக்கு போட்டுப் பார்த்தார். கோழிக்கும் முட்டைக்கும் வரும் பணத்தைவிட நெல் மூட்டையின் மதிப்பு அதிகமாகத் தோன்றியது.

“ஐயா, ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது. ராமுவும் எனக்குப் பணம் தர வேண்டாம். நானும் அவருக்கு எதுவும் தர வேண்டாம்” என்றார் மல்லையா. “மல்லையா, அறியாமல் நடக்கும் தவறுகளுக்கு எல்லாம் தண்டனை வழங்கினால் நல்லா இருக்குமா? வசதியான உங்களால் இந்த இழப்பைச் சமாளிக்க முடியும். ராமுவால் முடியுமா? பெருந்தன்மை வேண்டும்” என்றார் விநாயகம். வருத்தம் தெரிவித்தார் மல்லையா.

SCROLL FOR NEXT