மாயா பஜார்

அணில் கடித்த பழம் | கதை

கீர்த்தி

நல்லூர் வயல்களும் தோட்டங்களும் நிறைந்த கிராமம். அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளி இருந்தது. பள்ளிக்கு அருகில் ஓர் அழகிய தோட்டமும் இருந்தது. அதில் கொய்யா, மா, சப்போட்டா, நாவல் போன்ற மரங்கள் நிறையவே இருந்தன. அதனால் அந்தத் தோட்டத்தில் பறவைகளும் அணில், வெளவால் போன்ற சிறு விலங்குகளும் வசித்தன.

அந்தத் தோட்டத்தை நாடி பள்ளி மாணவர்களும் வருவார்கள். மரங்களில் பழுத்துக் கிடக்கும் பழங்களைப் பறித்து, மகிழ்ச்சியாக உண்பார்கள். ஒருநாள் அந்தத் தோட்டத்திற்குள் காகம் ஒன்று நுழைந்தது. அது ஒவ்வொரு மரத்தின் கிளைகளுக்கும் சென்று அமர்ந்தது. பிறகு அங்கு இருக்கும் பறவைகளையும் விலங்குகளையும் அழைத்தது.

“நண்பர்களே, எல்லாரும் இங்கே வாருங்கள். உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.” காகத்தின் அழைப்பைக் கேட்டு பறவைகளும் வெளவால்களும் அணில்களும் வந்து சேர்ந்தன. “இந்தத் தோட்டத்தின் உரிமையாளர் நல்ல மனிதர்.

அதனால் இங்குள்ள மரத்தில் பழுக்கின்ற பழங்களை நாம் உண்ணத் தடையேதும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் நாம் பிறருக்குத் துன்பம் விளைவிக்காதபடி நடந்துகொள்ள வேண்டும்” என்றது காகம்.

“பிறருக்கு நாங்கள் அப்படி என்ன துன்பம் செய்கிறோம்? இங்குள்ள கனிகளை உண்கிறோம். இந்த மரத்தில் வசிக்கிறோம். அவ்வளவுதானே?” என்று கேட்டன அணில்களும் பறவைகளும். அதைக் கேட்ட வெளவால்கள், “பறவைகளும் அணில்களும் பகல் வேளையில் மரங்களிலுள்ள பழங்களை உண்கின்றன. நாங்கள் இரவுப் பொழுதில் பழங்களை உண்கிறோம். இதில் யாருக்கு என்ன தொந்தரவு வந்துவிடப் போகிறது?” என்று கேட்டன.

“நான் இங்குள்ள மரங்களில் பழுத்துக் கிடக்கும் கொய்யா, மா, சப்போட்டா பழங்களைப் பார்த்தேன். பழங்களை எல்லாம் முழுதாகச் சாப்பிடாமல், கொஞ்சம் கடித்துவிட்டு மிச்சத்தை அப்படியே மரங்களில் விட்டு வைத்திருக்கிறீர்கள். அதை யார் யார் செய்தது?” என்று கேட்டது காகம்.

“நாங்கள்தான் அவ்வாறு செய்கிறோம். அணில் கடித்த கொய்யாப் பழங்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்று எல்லாரும் சொல்கிறார்களே. அதனால்தான் அப்படிச் செய்கிறோம். இதற்காக எங்களை ஏன் குற்றம் சொல்கிறாய்?” என்று கேட்டது அணில்.

“நாங்கள் பொதுவாக மாம்பழங்களையும் பப்பாளிப் பழங்களையும் அவ்வாறு உண்கிறோம். அதனால் எங்களை முழுவதுமாகக் குற்றம் சொல்லக் கூடாது” என்றன பறவைகள். “நாங்கள் சப்போட்டா, வாழைப் பழங்களை மட்டும் உண்கிறோம். அதனால் எங்களையும் முழுதாகக் குற்றம் சொல்லக் கூடாது” என்றன வெளவால்கள்.

“அணிலாரே, முன்பு யாரோ சொல்லி வைத்ததை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், நன்றாகப் பழுத்த கொய்யாப்பழம் இனிக்கவே செய்யும். எல்லாப் பழங்களும் அப்படித்தான். நீங்கள் இவ்வாறு எல்லாப் பழங்களிலும் கொஞ்சத்தை மட்டும் உண்டுவிட்டு மிச்சத்தை அப்படியே மரங்களில் விட்டு வைப்பதால் என்ன நடந்தது என்று அறிவீர்களா?” என்று கேட்டது காகம்.

“என்ன நடந்தது?” என்று கேட்டன பறவைகளும் அணில்களும். “கடந்த ஒரு வாரமாகப் பள்ளி மாணவர்கள் பழங்களைப் பறித்து உண்ண இந்தத் தோட்டத்திற்கு வந்தார்களா?” பறவைகளும் அணில்களும் வெளவால்களும் யோசித்துப் பார்த்தன.

“நீ சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு வாரமாகக் குழந்தைகள் இங்கே வரவில்லை. என்ன காரணம்?” என்று கேட்டது கிளி. “சுற்று வட்டாரத்திலுள்ள குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லையாம். ஏதோ உணவின் வழியாக நச்சுப் பொருள் கலந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சொன்னதாகப் பல வீடுகளில் பேசிக் கொண்டதைக் கேட்டேன்” என்றது காகம்.

“ஐயோ, நச்சுப் பொருள் குழந்தைகளின் உடலுக்குள் எப்படிக் கலந்திருக்கும்?” என்று கேட்டது அணில். “அணில் கடித்த கொய்யாப்பழம் ருசிக்கும், கிளி கடித்த பப்பாளி இனிக்கும் என்று நினைத்து நீங்கள் தோட்டத்தில் உள்ள பழங்களைக் கொஞ்சம் கடித்துத் தின்றுவிட்டு மிச்சத்தை அப்படியே மரங்களில் விட்டுச் செல்கிறீர்கள்.

தோட்டத்திற்கு வரும் குழந்தைகள் அந்தப் பழங்களைப் பறித்து, கழுவாமல் உண்டுவிடுகிறார்கள். நம் பற்களிலும் அலகுகளிலும் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் இருக்கலாம். அவை அந்தப் பழங்களில் நுழைந்து பல்கிப் பெருகிவிடும். குழந்தைகள் அவற்றை உண்ணும்போது பல்வேறு நோய்களை உண்டாக்கிவிடும்” என்றது காகம்.

“பாவம் குழந்தைகள். நாம் இனி என்ன செய்ய வேண்டும்? பழங்களையே உண்ணக் கூடாதா?” என்று காகத்திடம் கேட்டது ஒரு வெளவால். “நான் அப்படிச் சொல்ல வில்லை. உங்களைப் போன்றவர் களுக்குப் பழங்களும் உணவுதானே... நான் சொல்ல வந்தது, பழங்களை முழுவதுமாகச் சாப்பிட்டு விடுங்கள். எதையும் அரை குறையாக மிச்சம் வைக்காதீர்கள் ” என்றது காகம்.

“இனி பழங்களை முழுமையாகச் சாப்பிட்டு விடுகிறோம்” என்றது அணில். கிளிகளும் வெளவால்களும் அணில் சொல்வதை ஆமோதித்தன. காகம் மகிழ்ச்சியாக அங்கிருந்து பறந்து சென்றது.

SCROLL FOR NEXT