பாம்பு நம்மைப் போல் போட்டோவோ வீடியோவோ எடுப்பதில்லை. பிறகு ஏன் பாம்பு படம் எடுக்கிறது என்று சொல்கிறார்கள், டிங்கு? - ர. தக் ஷ்ணா, 7-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
நீங்கள் சொல்வது சரிதான், பாம்பு நம்மைப் போல் படம் எடுப்பதில்லை. நாகம் தலையை விரித்து இப்படியும் அப்படியும் அசைவதைப் படம் காட்டுகிறது என்று சொல்லி, பின்னர் அது படம் எடுக்கிறது என்று வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன், தக் ஷ்ணா. நாகம் தனக்கு ஆபத்து ஏற்படும்போது, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தலைப்பகுதியை விரித்து, எதிராளிக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சாதாரணமாகச் சென்றுகொண்டிருந்த பாம்பு திடீரென்று தலையை உயர்த்தி, விரித்துக் காட்டும்போது எதிராளி பயந்துவிடும். அந்த நேரத்தைப் பயன்படுத்தி பாம்பு தப்பிவிடும். எதிராளி அதற்கும் பயப்படவில்லை என்றால், இப்படியும் அப்படியும் தலையை அசைத்து, நெருங்கினால் கடித்துவிடுவேன் என்று எச்சரிக்கும். வேறு வழியில்லாதபோது மட்டுமே கடிக்கும்.
மழை பெய்யும்போது தேன்கூடுகள் கலைந்துவிடுமா, டிங்கு? – ஜெ. காவியன், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருத்துறைப்பூண்டி.
இயற்கை ஒவ்வோர் உயிரினத்துக்கும் அது பாதுகாப்புடன் வாழ்வதற்கான வழிமுறையை உருவாக்கி வைத்திருக்கிறது. தேன்கூடுகள் மழையில் சேதம் அடையாமல் இருப்பதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்படுகின்றன. மேலிருந்து விழும் மழைநீர் தேன் கூட்டுக்குள் சென்று சேமித்துள்ள தேனையும் புழுக்களையும் சேதப்படுத்தாமல் வழிந்து ஓடிவிடுகிறது. மழை மட்டுமல்ல, கடினமான காற்று, உயிரினங்கள்கூட அவ்வளவு எளிதாகத் தேன்கூட்டைச் சேதப்படுத்திவிட முடியாது, காவியன்.