பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவரை ‘சரியான பச்சோந்தி’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள், டிங்கு?
- டி. நந்தன், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு.
பச்சோந்தி எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இயற்கை அதற்குச் சிறப்பான அம்சத்தை வழங்கியிருக்கிறது. பச்சோந்தி புல்வெளியில் இருந்தால் பச்சை நிறத்திலும் மரத்தின் மீது இருந்தால் பழுப்பு வண்ணத்திலும் மண் மீது இருந்தால் மண் நிறத்திலும் உடலின் நிறம் மாறும். அதாவது இடத்துக்கு ஏற்ற மாதிரி பச்சோந்தியின் உடல் வண்ணமும் மாறும். இதனால், எதிரிகளின் கண்களுக்குப் பச்சோந்தி எளிதில் புலப்படாது. நிறம் மாறும் இயல்பு பச்சோந்திக்குச் சாதகமான அம்சமாக இருக்கிறது.
ஆனால், மனிதர்களை பற்றிச் சொல்லும்போது நிறம் மாறும் பண்பு எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது சூழலுக்கு ஏற்ப, மனிதர்களுக்கு ஏற்ப நம் எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல், எந்தச் சூழ்நிலையிலும் நியாயமாக நடந்துகொள்வது மனிதர்களின் மாண்பாகக் கருதப்படுகிறது. அப்படி இல்லாமல் சூழலுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு, சுயநலத்தோடு செயல்படுபவர்களை, ‘பச்சோந்தி’ என்று அழைக்கிறார்கள், நந்தன். அப்படிச் சொல்லாமல் தவிர்ப்பது நல்லது.
ஆண் குயில் கோடைக்காலத்தில் மட்டும் பாடுவது ஏன், டிங்கு?
- அ. ஷமீதா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
குயில்களில் ஆணும் பெண்ணும் குரல் கொடுக்கக்கூடியவையே. நாம் பெரும்பாலும் குயில்களைப் பார்ப்பதில்லை, குயில்களின் குரல்களைத்தான் கேட்கிறோம். ஆண் குயில் ‘குக்கூ... குக்கூ...’ என்று ராகத்துடன் உரக்கக் குரல் கொடுக்கும். பெண் குயில் ‘க்விக்... க்விக்... க்விக்...’ என வேகமாகக் குரல் கொடுக்கும்.
குயில்கள் கோடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. அதனால், ஆண் குயில் குரல் மூலம் பெண் குயிலைக் குடும்பம் நடத்த அழைக்கிறது. இரண்டும் சேர்ந்து குடும்பம் நடத்தி, பெண் குயில் முட்டைகளை இட்டு, அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன ஷமீதா.