ஆ
ரக்கிள் என்பது ஓர் இடத்தின் பெயர். அதே நேரம், ஒரு மனிதரின் பெயரும்கூட. பண்டைய கிரேக்கர்களிடம் சென்று ஆரக்கிள் என்று மெலிதாக உச்சரித்துப் பாருங்கள். என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அப்படியே கீழே போட்டுவிட்டு மரியாதையுடன் ஒரு வணக்கம் போடுவார்கள். ஆரக்கிள் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை இல்லை.
ஆரக்கிள் என்பது லத்தீன் மொழிப் பெயர். இதன் பொருள் பேசுதல். அதிசய சக்திகளைக் கொண்டிருக்கும் ஒருவரின் பேச்சு ஆரக்கிள் என்று அழைக்கப்படும். இந்த அதிசய சக்தி கொண்டிருப்பவருக்கு நடந்தது, நடந்துகொண்டிருப்பது, நடக்கப்போவது மூன்றும் தெரியும். எனக்குப் பிடித்த பழம் என்ன என்று ஆரக்கிளிடம் சென்று கேட்டால், நீங்கள் கேட்டு முடிப்பதற்குள் அவர் பதில் சொல்லிவிடுவார். போன வாரம் நான் ஒரு பொய் சொன்னேன், அது என்ன என்று கேட்டுப் பாருங்கள், நீங்கள் கேட்டு முடிப்பதற்குள் பதில் வந்துவிடும்.
ஆனால் நம் கடந்த காலமும் நிகழ் காலமும்தான் நமக்கே தெரியுமே! தெரியாதது எதிர்காலம் மட்டும்தான், இல்லையா? நான் படித்து முடித்ததும் என்னவாக மாறுவேன்? அடுத்த மாதம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் யாருக்குப் பரிசு கிடைக்கும்? அப்பாவும் அம்மாவும் என்னை ஆப்பிரிக்காவுக்குக் கூட்டிப் போவார்களா? எனக்கும் கணக்குப் பாடத்துக்கும் நடைபெற்றுவரும் உலகப் போர் எப்போது முடியும்? இப்படி ஒவ்வொருவருக்கும் பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். எல்லோருக்கும் விடைகள் தேவை. ஆனால் யாரிடம் கேட்பது?
கிரேக்கர்களுக்கு இந்தச் சிக்கலே இல்லை.நேராக அவர்கள் ஆரக்கிளிடம் ஓடிவிடுவார்கள். என்ன தொழில் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்? படிக்க மாட்டேன், படம்தான் வரைவேன் என்கிறாள் என் மகள்; என்ன செய்வது? என்னால் அரசன் ஆகமுடியுமா? அதிசய சக்தி கொண்ட ஆரக்கிள் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் டக் டக் என்று பதில் சொல்லிவிடுவார். நீ ஆடு மேய்க்கலாம், அதுதான் நல்ல தொழில். படிக்கவில்லை என்றால் பரவாயில்லை, படம் வரையச் சொல். உன்னால் அரசன் ஆகமுடியாது. ஆனால் உன் மகள் வரையும் படத்தை விற்று பெரும் பணக்காரன் ஆகலாம்.
நன்றி ஆரக்கிள் என்று மகிழ்ச்சியுடன் எல்லோரும் வீடு திரும்புவார்கள். ஆரக்கிள் சொல்லிவிட்டால் மறுபேச்சு கிடையாது. அவர் என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் நடக்கும். எந்த இடத்தில் அமர்ந்து ஆரக்கிள் இப்படிக் கணிக்கிறாரோ அந்த இடத்துக்குப் பெயரும் ஆரக்கிள்தான். ஆரக்கிளால் கடவுளுடன் நேரடியாகப் பேசமுடியும். நம் கேள்விகளை கடவுளிடம் எழுப்பி, அவரிடமிருந்து பதில்களைப் பெற்று மீண்டும் நமக்குச் சொல்வதுதான் ஆரக்கிளின் பணி. ஒரு புறாவைப் போல் செய்தியை அவர் சுமந்துவந்து நமக்குத் தருவார்.
கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் முழுக்க பல ஆரக்கிள்கள் இருந்தனர். ஆனால் இருப்பதிலேயே புகழ்பெற்ற ஆரக்கிள் டெல்ஃபி என்னும் இடத்தில் அமைந்திருந்தது. அங்குள்ள அப்போலோ என்னும் கிரேக்கக் கடவுளின் கோயிலில் தங்க சிம்மாசனத்தில் இந்த ஆரக்கிள் அமர்ந்திருப்பார். எல்லா ஆரக்கிள்களும் ஆண் என்றால் இவர் மட்டும் பெண். அதனால்தான் கூடுதல் சிறப்பு, கூடுதல் புகழ்.
டெல்ஃபி ஆரக்கிள் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம், வாருங்கள். ஒருவர் பணிவுடன் உள்ளே நுழைகிறார். மிகுந்த மரியாதையுடன் ஆரக்கிளைப் பார்த்து கேட்கிறார். ‘என்னுடைய ஆடு காணாமல் போய்விட்டது, அது இப்போது எங்கே இருக்கிறது என்று தயவு செய்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.’ உடனே ஆரக்கிள் கண்களை மூடிக்கொள்வார். கட கடா குடு குடு என்று ஏதோ சத்தம் போடுவார். அவரைச் சுற்றி சில பூசாரிகள் பயபக்தியுடன் நின்றுகொண்டிருப்பார்கள். எல்லோருடைய கவனமும் ஆரக்கிளிடம்தான் இருக்கும்.
சில நிமிடங்களில் தங்க சிம்மாசனத்தில் இருந்து உஷ்ஷென்று பெரும் புகை கிளம்பி வரும். மேலும் சில விநோதமான சத்தங்கள் ஆரக்கிளிடம் இருந்து வரும். புகை அடங்கிய பிறகு ஆரக்கிள் மெதுவாகக் கண்களைத் திறப்பார். இதுவரை யாருமே கேட்டிராத புதிர் மொழியில் சில விநாடிகள் பேசுவார். அது மொழியா அல்லது பாத்திரம் உருண்டு போகும் சத்தமா என்று குழம்பும் அளவுக்கு என்னென்னவோ வார்த்தைகள் உருண்டு உருண்டு வரும். ஆரக்கிள் என்ன சொன்னார் என்பதை அருகிலிருந்த மற்ற பூசாரிகள் விளக்குவார்கள். “உன் வீட்டிலிருந்து கிழக்கு பக்கமாக மதியம் முழுக்க நட. அங்கிருந்து மேற்கே திரும்பி ஒரு மணி நேரம் ஓடு. பிறகு வடக்கில் திரும்பி கண்களை மூடிக்கொள். தெற்கு பகுதியில் இருந்து உன் ஆடு மே மே என்று கத்தியபடி உன்னைத் தேடி ஓடிவரும்!”
இப்போது கிரேக்கம் சென்றால்கூட டெல்ஃபியில் ஆரக்கிள் அமர்ந்திருந்த இடத்தைப் பார்க்கமுடியும். ஆனால் ஆரக்கிளையோ தங்க சிம்மாசனத்தையோ பார்க்கமுடியாது. இடிந்துபோன பகுதிகளை மட்டும் பார்க்கலாம். இது அறிவியல் யுகம் என்பதால் கிரேக்கர்கள் அதிசயங்களைத் தேடி ஆரக்கிளிடம் செல்வதில்லை. ஆடு தொலைந்துவிட்டால் அவர்களே போய்த் தேடிக்கொள்கிறார்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com