மாயா பஜார்

ரீங்காரம் செய்யும் வண்டுகள்

மைதிலி

# பூச்சி இனத்தைச் சேர்ந்தவை வண்டுகள். பூச்சி இனங்களில் 40 சதவிகிதம் வண்டுகள்தான். 3,50,000 வகை வண்டு இனங்கள் உள்ளன. இன்னும் கண்டறியப்படாத வண்டு இனங்கள் ஏராளமாக இருக்கின்றன. பூமியில் தோன்றிய பழமையான உயிரினங்களில் வண்டுகளும் ஒன்று.

# 6 கால்களும் 4 இறக்கைகளும் வண்டுகளுக்கு உண்டு. முன் இறக்கைகள் கெட்டியானவை. பின் இறக்கைகள் மென்மையானவை. பின் இறக்கைகள் மூலமே வண்டு பறக்கிறது. பறக்காமல் இருக்கும்போது மெல்லிய பின் இறக்கைகளை மூடிப் பாதுக்காக்கின்றன முன் இறக்கைகள். தலையின் முன் பக்கத்தில் 2 உணர்கொம்புகள் இருக்கின்றன.

# வண்டுகள் பனி மிகுந்த வட, தென் துருவங்கள், கடல்களைத் தவிர மற்ற இடங்களில் வாழ்கின்றன. வண்டுகள் நிலத்திலும் வாழ்கின்றன. நீரிலும் வாழ்கின்றன. பெரும்பாலான வண்டுகள் மரம், செடி, காய், கனி, காளான் போன்றவற்றின் பகுதிகளை உணவாக உட்கொள்கின்றன. சில பெரிய வண்டுகள் சிறிய பறவைகளையும் விலங்குகளையும் சாப்பிடுகின்றன.

# வண்டுகள் சுற்றுச்சூழலியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாவரங்கள், விலங்குகளின் கழிவுகளைச் சாப்பிடுவதன் மூலம் சூழலுக்கு நன்மை விளைவிக்கின்றன.

# சாண வண்டுகள் விலங்குகளின் கழிவுகளைச் சாப்பிடுகின்றன. இதனால் கழிவு வேகமாக மறுசுழற்சி ஆகிறது. லேடிபேர்ட் என்ற வண்டு தாவரங்கள், காய்கறிகளை உண்ணும் பூச்சிகளை உணவாக்கிக்கொள்வதால் மனிதர்களுக்கு நன்மை விளைவிக்கின்றன.

# 1 மில்லிமீட்டர் நீளம் கொண்ட மிகச் சிறிய வண்டுகளும் உள்ளன. கோலியாத் போன்று மிகப் பெரிய வண்டுகளும் இருக்கின்றன. தென் அமெரிக்காவில் உள்ள டைடனஸ் வண்டு 20 செ.மீ. நீளம் இருக்கும்.

# சில வண்டுகள் அடர் நிறங்களில் காணப்படுகின்றன. சில வண்டுகள் பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு போன்ற கண்கவர் நிறங்களில் காட்சியளிக்கின்றன.

# எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வண்டுகள் பல வழிகளைக் கையாள்கின்றன. சூழலுக்கு ஏற்றவாறு உடலைப் பெற்றிருக்கின்றன, விஷத்தைச் செலுத்துகின்றன. தற்காப்புக்காகச் சண்டையிடுகின்றன. காய்ந்த இலைகளைப்போல் இருக்கும் இலை வண்டுகளை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது.

# உலகில் உள்ள உயிரினங்களில் வண்டுகளே மிகவும் வலிமையானவை. தங்கள் எடையைப்போல் 850 மடங்கு எடையைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் படைத்தவை!

# மனிதர்கள் 300 வகையான வண்டுகளைச் சாப்பிடுகிறார்கள்.

SCROLL FOR NEXT