மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க பூமியின் எடை கூடுமா, டிங்கு?
- சா. மகிழ் வேந்தன், 8-ம் வகுப்பு, தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.
சுவாரசியமான கேள்வி, மகிழ்வேந்தன். பூமியில் 71 சதவீதம் நீர் சூழ்ந்திருக்கிறது. மீதியிருக்கும் 29 சதவீத நிலத்தில் பெரும் மலைகளும் பாலைவனங்களும் குறிப்பிட்ட அளவு இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. எஞ்சியுள்ள இடத்தில்தான் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எல்லாம் வாழ்கின்றனர். பூமியில் மனிதர்கள் உள்பட உயிரினங்கள் எங்கோ வேற்றுக் கோள்களில் இருந்து பூமிக்கு வருவதில்லை.
பூமியில் இருக்கும் வளங்களைக் கொண்டே உயிரினங்கள் உருவாகி, வளர்ந்து, வாழ்ந்து, மடிந்து போகின்றன. பூமியில் மக்கள்தொகை அதிகரிப்பதால் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் சிக்கல் ஏற்படலாம். உணவு, நீர், தங்கும் இடம் போன்றவற்றுக்குப் பற்றாக்குறை வரலாம். ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பதால் பூமியின் எடை அதிகரித்து, என்ன ஆகும் என்று கவலைப்பட வேண்டியதில்லை.
ஒருபக்கம் பிறப்பு விகிதம் அதிகரித்தாலும் இன்னொரு பக்கம் இறப்பு விகிதமும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், பூமியின் எடை விண்வெளியிலிருந்து விழும் தூசுகளால் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே நேரம் பூமியிலிருந்து வாயுக்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.