டிஷ்யூம்… டிஷ்யூம்… என அப்பாவின் வயிற்றில் குத்துவிடுவது உங்களுக்கு அலாதி பிரியம்தானே? ஆனால், காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி தஜமுல் இஸ்லாமோ, இப்படி விளையாட்டாகக் குத்துவிடவில்லை. நிஜமாகவே குத்துச்சண்டை பழக ஆரம்பித்துவிட்டார். சிறு வயதிலிருந்து எடுத்த அந்தப் பயிற்சி, இன்று அவரை சர்வதேச இளம் குத்துச்சண்டை சாம்பியனாக அடையாளம் காட்டியிருக்கிறது.
தேசிய அளவில் தொடர்ந்து பல்வேறு ஜூனியர் பிரிவு குத்துச்சண்டையில் பங்கேற்று வந்த தஜமுல், அண்மையில் சர்வதேச ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிக்குத் தேர்வானார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற 8 வயதுக்குட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார் இந்தச் சிறுமி.
சுட்டித்தனம் செய்ய வேண்டிய இந்த வயதில், பெரிய சாதனையைப் படைத்த இந்தச் சிறுமி, அதை எளிதாகச் சாதித்துவிடவில்லை. எப்போதும் பதற்றமும், துப்பாக்கிச் சத்தமும் கேட்கும் காஷ்மீரில் அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவு என்றால் வீட்டை விட்டு யாரும் வெளியேகூட வர முடியாது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதே கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் வளர்ந்து, குத்துச்சண்டை பயிற்சி பெற்று சாதனை புரிந்திருக்கிறார் தஜமுல்.
இந்த மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீ நகருக்கு அருகே உள்ள பந்தி போராதான் தஜமுல்லின் சொந்த ஊர். இவரின் தந்தை வாகன ஓட்டுநர். தஜமுல்லுக்கு 6 வயதாகும்போது தினமும் பயிற்சி பெறத் தொடங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசியப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு, உலகக் கோப்பைப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வறுமையால் இத்தாலிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. கடைசியில் இந்திய ராணுவம்தான் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. 90 நாடுகளைச் சேர்ந்த குட்டி வீராங்கனைகள் பங்கேற்ற இந்தக் குத்துச்சண்டைப் போட்டியில் ஜெயித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் தஜமுல்.
குத்துச்சண்டையில் எதிர்காலம் பற்றி நிறைய கனவுகளுடன் உள்ளார் இந்தச் சிறுமி. “போட்டியில் ஓங்கி குத்துவிடும்போதுகூட எனக்கு பயமே வந்ததில்லை. ஆனால் விமானப் பயணம் என்றால் பயம். என்னுடைய போட்டியாளர்களுக்கு எப்போதுமே ஒரு குத்துவிட்டுத்தான் நான் வணக்கமே சொல்வேன். டாக்டராக வேண்டும் என்பதே என் கனவு. ஆனால், பெரியவளானதும் மேரி கோம்போல இந்தியாவுக்காக விளையாடி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும்” என்று தன் கனவுகளைச் சொல்கிறார் இந்த லிட்டில் ஸ்டார்.
எப்போதும் குண்டுகள் சத்தம் கேட்கும் ஒரு மாநிலத்தில் குத்துச்சண்டை சாம்பியன் தயார்!