மாயா பஜார்

உலகின் குட்டிக் குரங்கு!

செய்திப்பிரிவு

குரங்கைக் கண்டாலே எல்லோருக்கும் குஷிதான். அது செய்யும் சேட்டைகள், குறும்புகளுமே இதற்குக் காரணம். குரங்களில் நிறைய இனங்கள் உண்டு. பெரிய பெரிய குரங்குகள் முதல் குட்டிக் குரங்குகள்வரை இதில் அடக்கம். இப்படி நிறைய குரங்குகள் இருந்தாலும் ‘மர்மோசெட்’ என்ற குரங்குக்கு மட்டும் தனி மரியாதைதான். ஏனென்றால், இதுதான் உலகின் குட்டி குரங்கு. அதுவும், அரியவகைக் குரங்கு!

தென் அமெரிக்கக் கண்டத்தில்தான் இந்தக் குரங்குகள் காணப்படுகின்றன. பொலிவியா, பெரு, பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளிலேயே இது காணப்படுகிறது. இந்தக் குட்டிக் குரங்குகள் சாவிக்கொத்துபோல உள்ளங்கையில் அடங்கிவிடுகின்றன. இந்தக் குரங்குகள் அதிகபட்சமே 20 செ.மீ. உயரம்தான் வளரும்.

காடுகளில் குண்டாகவும் உயரமாகவும் உள்ள மரங்களின் கிளைகளில் குடும்பம் குடும்பமாக வசிக்கும். அதிகபட்சமாக 15 குரங்குகள் ஒரு கூட்டத்தில் இருக்கும். ஒவ்வொரு கூட்டமும் தங்களுக்கென எல்லை நிர்ணயித்து வாழ்கின்றன. குட்டிகளை அப்பா, அம்மா குரங்குகள் சேர்ந்தே வளர்க்கின்றன. ஒரே வேளையில் அதிகபட்சம் 3 குட்டிகள்வரை போடும்!

தகவல் திரட்டியவர்: செ. மாதவன், 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஊத்துக்குளி.

SCROLL FOR NEXT