உடம்பில் கொசு கடித்துத் தடித்த இடத்தில் மீண்டும் கொசு கடிக்குமா, கடிக்காதா?
- பி. அஷ்வின், 2-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, மானோஜிப்பட்டி, தஞ்சாவூர்.
பெண் கொசுக்கள்தாம் தமக்குத் தேவையான சத்துகளைப் பெறுவதற்கு, மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்காகக் கடிக்கின்றன. ஒரு முறை மனித உடலில் அமர்ந்து, ரத்தத்தை உறிஞ்சும்போது எந்தத் தொந்தரவும் இல்லையென்றால், வயிறு நிறைந்தவுடன் பறந்து சென்றுவிடும்.
சில நேரம் துணிகளுக்கு மேலே சரியாகக் கடிக்க இயலாமல் போகலாம், மனிதர்கள் அடிக்க வரலாம், சில இடங்களில் ரத்தம் சரியாகக் கிடைக்காமல் போகலாம்... இதுபோன்ற காரணங்களால் கொசு நினைத்ததுபோல் ரத்தத்தைக் குடிக்க இயலாமல் போய்விடும். அப்போது மீண்டும் வேறு இடங்களில் அமர்ந்து, ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பிக்கும். வெகு சில நேரத்தில் மட்டுமே கடித்த இடத்தில் மீண்டும் கடிக்கும், அஷ்வின்.
மீன்கள் தூங்குமா, எப்போது தூங்கும், எப்படித் தூங்கும் டிங்கு?
- எம். நிரஞ்சனா தேவி, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.
பொதுவாக உயிரினங்களுக்குத் தூக்கம் அவசியம். ஆனால், மீன்கள் நம்மைப்போல் தூங்குவது இல்லை. ஓய்வு தேவைப்படும்போது, இயக்கத்தை மிக மெதுவாக மாற்றிக்கொள்கின்றன. சில மீன்கள் தரைக்கு அருகிலோ பாறைகளுக்கு அருகிலோ சென்று பாதுகாப்பாக ஓய்வெடுக்கின்றன. ஓய்வெடுக்கும்போதும் ஏதாவது ஆபத்து வருகிறதா என்கிற எச்சரிக்கையுடனே இருக்கின்றன. நம்மைப்போல் நீண்ட நேர உறக்கத்தை அவை மேற்கொள்வதில்லை, நிரஞ்சனா தேவி.
பனிப்பிரதேசங்களில் உணவுப் பொருள்கள் எளிதாகக் கெட்டுவிடாது. அப்படி இருந்தும் அங்கு வசிப்பவர்கள்கூட ஏன் குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்துகிறார்கள், டிங்கு?
- எல். சதீஷ்குமார், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.
நல்ல கேள்வி. நீங்கள் சொல்வதுபோல் பனிப்பிரதேசங்களில் உணவுப் பொருள்கள் எளிதில் கெட்டுவிடாதுதான். அதே நேரம் அந்தப் பொருள்கள் அளவுக்கு அதிகமாக உறைந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறதல்லவா? அப்படி உறைந்துவிட்டால், அவற்றைப் பயன்படுத்துவது கடினமாகிவிடும். எனவே, பொருள்கள் அளவான குளிரில் இருந்தால்தான் கெட்டுப் போகாமலும் இருக்கும். எளிதில் பயன்படுத்தவும் முடியும். அதனால்தான் குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்துகிறார்கள், சதீஷ்குமார்.