ஆறு இலக்கங்கள் கொண்ட அஞ்சலகக் குறியீட்டு எண்ணின் முதல் எண் எதைக் குறிக்கிறது, டிங்கு?
- கா. நனி இளங்கதிர், 5-ம் வகுப்பு, ஓ.எம்.ஜி.எஸ் உயர்நிலைப் பள்ளி, காளையார்கோவில்.
இந்திய அஞ்சலகக் குறியீடுகள் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆறு இலக்க எண்களில் முதல் எண் இந்த மண்டலங்களில் ஒன்றைக் குறிக்கிறது. இரண்டாவது எண் துணை மண்டலத்தைக் குறிக்கிறது. மூன்றாவது எண் அந்த மண்டலத்தில் உள்ள மாவட்டத்தைக் குறிக்கிறது. இறுதி மூன்று எண்கள் அந்த மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களைக் குறிக்கின்றன. உங்கள் பள்ளியின் அஞ்சலகக் குறியீட்டு எண் 630 551. அதாவது, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அஞ்சலகத்தைக் குறிக்கிறது.
630 606 என்றால், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அஞ்சலகத்தைக் குறிக்கிறது. 600 002 என்ற அஞ்சலக எண், சென்னையில் அண்ணாசாலையில் உள்ள அஞ்சலகத்தைக் குறிக்கிறது. முதல் எண் 1 என்கிற மண்டலத்தில் டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக், சண்டிகர் ஆகியவை வருகின்றன. முதல் எண் 6 என்கிற மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, லட்சத்தீவுகள் வருகின்றன. அதனால்தான் தமிழ்நாட்டின் அஞ்சலகக் குறியீட்டு எண் 6 என்று ஆரம்பிக்கிறது. 9 என்கிற மண்டலத்தில் ராணுவ அஞ்சலகச் சேவை இருக்கிறது, நனி இளங்கதிர்.
வெளிநாடு செல்வதற்கு விமான டிக்கெட் இருந்தால் மட்டும் போதாது, பாஸ்போர்ட், விசா வேண்டும் என்று சொன்னார் ஆசிரியர். பாஸ்போர்ட், விசாவைப் பற்றிச் சொல்ல முடியுமா, டிங்கு?
- ஜெப் ஈவான், 6-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) என்பது ஒருவரின் அடையாளத்துக்கும் நாட்டுக்கும் சான்று அளிக்கும் அரசு ஆவணம். இதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஊர், பெற்றோர் பெயர், கடவுச் சீட்டு வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் போன்ற தகவல்கள் இருக்கும். இந்தக் கடவுச் சீட்டு இல்லாமல், வெளிநாடுகளுக்குச் செல்ல இயலாது. நுழைவு ஆணை (விசா) என்பது ஒருவர் ஒரு நாட்டுக்குச் செல்வதையும் அங்கிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் வெளியேறுவதையும் அனுமதிக்கும் ஆவணம். நுழைவு ஆணை எந்த நாட்டுக்குச் செல்கிறோமோ அந்த நாடு கொடுக்கும் ஆவணம்.
பெரும்பாலான நாடுகள் நுழைவு ஆணை இன்றித் தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை. ஆனால், நுழைவு ஆணை இன்றியும் சில நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கின்றன. கடவுச் சீட்டைக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும். நுழைவு ஆணை சில நாட்களிலிருந்து சில ஆண்டுகள் வரை, அந்தந்த நாடுகளின் கொள்கையைப் பொறுத்து அனுமதி வழங்குகின்றன, ஜெப் ஈவான்.
ஏரி நீர் மட்டும் ஏன் உப்புக் கரிப்பதில்லை, டிங்கு?
- வி.ஆர். தர்சனா, 5-ம் வகுப்பு, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பூலுவப்பட்டி, திருப்பூர்.
ஏரி நீரிலும் உப்பு உண்டு. ஆனால், மிகவும் குறைவாக இருப்பதால் கடல்நீர் அளவுக்கு உப்புக் கரிப்பதில்லை. ஏரிகளில் தண்ணீர் அதிகமாகும்போது அவற்றை வெளியேற்றும் அமைப்பு இருந்தால், அதிகப்படியாகத் தங்கும் உப்பு வெளியேறிவிடுகிறது. அடிக்கடி மழை பொழியும் இடமாக இருந்தாலும் குவிந்துள்ள உப்பைக் கரைத்துக்கொண்டு ஏரியிலிருந்து நீர் வெளியேறிவிடும். இதனால் ஏரி நீரில் உப்பு அதிகரிப்பதில்லை. சில பெரிய ஏரிகளிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்குமானால், உப்புப் படிய ஆரம்பித்து, காலப்போக்கில் உப்பு ஏரிகளாக மாறிவிடுகினறன, தர்சனா.