மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: சில தாவரங்கள் சிவப்பாகவும் நீலமாகவும் இருப்பது ஏன்?

செய்திப்பிரிவு

பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. நான் ஒரு ஹெலிகாப்டரில் வானில் பறக்காமல் இருந்துகொண்டால், அமெரிக்கா எனக்குக் கீழே வரும்போது, பாராசூட் மூலம் அங்கே இறங்கிவிடலாம்தானே, டிங்கு?

- என். நிரஞ்சன் பாரதி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்.

மிகவும் சுவாரசியமான கற்பனையாக இருக்கிறது நிரஞ்சன் பாரதி. நீங்கள் சொல்வது போலவே பூமி சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் ஹெலிகாப்டரில் வானில் ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்கிறீர்கள். இந்தியா நகர்ந்து,
சில மணி நேரத்துக்குப் பிறகு அமெரிக்கா அந்த இடத்துக்கு வரும்போது இறங்குவது உங்கள் திட்டம். ஆனால், குறிப்பிட்ட தூரம் வரை புவியின் ஈர்ப்பு சக்தி இருக்கும் அல்லவா! அப்படி என்றால் பூமி சுற்றும்போது (நீங்கள் பூமியில் இல்லாவிட்டாலும்)
நீங்களும் சேர்ந்துதான் சுற்றுவீர்கள். உங்களுக்குக் கீழே இந்தியாதான் இருக்கும்.
ஒருவேளை நீங்கள் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி, சென்றுவிட்டீர்கள் என்றால், அப்போது உங்களுக்குக் கீழே அமெரிக்கா வரும்போது, பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து இறங்கலாம். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

தாவரங்கள் உணவு தயாரிக்க பச்சையம் அவசியம். சில தாவரங்களின் இலைகள் மட்டும் சிவப்பு, அடர்நீல நிறங்களில் இருக்கின்றனவே ஏன், டிங்கு?

- ர. ஜெயலட்சுமி, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

இலைகளில் பல்வேறு வகையான நிறமிகள் இருப்பதால் வண்ணமயமாகக் காணப்படுகின்றன. தாவரங்களில் மூன்று முதன்மை நிறமிகள் உள்ளன. இலைகளில் அதிக அளவு குளோரோஃபில் (Chlorophyll) பச்சை நிறத்தையும், கரோட்டின் (Carotenoids) இலைகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு நிறத்தையும், ஆந்தோசயனின் (Anthocyanins) இலைகளுக்குச் சிவப்பு, ஊதா நிறத்தையும் தருகின்றன. குளோரோஃபில் மூலமே தாவரங்கள் உணவைத் தயாரிக்கின்றன. அடர் சிவப்பு, அடர் நீல நிறத் தாவரங்களிலும் அடியில் குளோரோஃபில் உண்டு. அதனால்தான் அவற்றால் உணவைத் தயாரிக்க முடிகிறது, ஜெயலட்சுமி.

SCROLL FOR NEXT