மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: IX விமான நிலையம் எதைக் குறிக்கிறது?

செய்திப்பிரிவு

இந்தியாவில் நிறைய விமான நிலையங்கள் IX என்ற குறியீடுடன் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு மதுரை IXM என்று இருக்கிறது. இதில் 9 (IX) என்ற எண் எதைக் குறிக்கிறது, டிங்கு?

- எம். பரத் ராஜ், 7-ம் வகுப்பு, சின்மயா வித்யாலயா, அண்ணா நகர், சென்னை.

நல்ல கேள்வி. IX என்றால் நீங்கள் நினைப்பது போல் எண் 9 அல்ல, பரத் ராஜ். International Air Transport Association (IATA) என்பது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கம். இதுதான் உலகின் பெரும்பான்மையான வான்வழிப் போக்குவரத்தை வழிநடத்தி வருகிறது. வான்வழிப் போக்குவரத்தில் பிரச்சினைகள் நிகழாமல் இருப்பதற்காக, சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கம் குறியீடுகளை வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கும் தனித்தனியான குறியீடுகளை வழங்குவதன் மூலம், வான்வழிப் போக்குவரத்தில் சிக்கலோ விபத்தோ ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. IATA குறியீட்டைத் தவிர, ஒவ்வொரு விமான நிலையமும் தங்கள் வசதிக்கு ஏற்ப ICAO (International Civil Aviation Organization) குறியீட்டையும் உருவாக்கியிருக்கின்றன. இது விமான நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட அடையாளங்கள்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் குறியீடு IATA: MAA, ICAO: VOMM. இதில் MAA- Madras Airport Authority என்பதைக் குறிக்கிறது. IATA: DEL என்றால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தையும் IATA: BLR என்றால் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தையும் குறிக்கும்.

இந்தியாவில் சுமார் 20 விமான நிலையங்கள் IX என்று தொடங்கும் IATA குறியீட்டைக் கொண்டுள்ளன. இதில் I என்பது இந்தியாவைக் குறிக்கும். X என்பதற்குத் அர்த்தம் ஒன்றும் இல்லை. IXM என்றால், இந்தியாவில் மதுரை விமான நிலையம் என்பதைக் குறிக்கும். IXA என்றால் இந்தியாவில் அகர்தலா விமான நிலையம், IXC என்றால் இந்தியாவில் சண்டிகர் விமான நிலையம் என்பதைக் குறிக்கும். ஒருவேளை X தொடர் முடிந்துவிட்டால், அடுத்து IY அல்லது IZ என்று தொடங்கும் விமான நிலையக் குறியீடுகள் வரலாம், பரத் ராஜ்.

கானல் நீர் எவ்வாறு உருவாகிறது, டிங்கு?

- ஆர். சீனிவாசன், 7-ம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

கடுமையான கோடைக் காலத்தில் தார் சாலைகளிலும் பாலைவனங்களிலும் கானல் நீரைப் பார்க்க முடியும். தண்ணீர்தான் இருக்கிறது என்று அருகில் சென்றால், இன்னும் சற்றுத் தொலைவில் கானல் நீர் தெரியும். இது ஒரு மாயத் தோற்றம். நிலத்தில் இருந்து அதிகமான வெப்பம் மேலே வருகிறது. மேலே இருக்கும் காற்று சற்றுக் குளிர்ச்சியாகக் கீழ் நோக்கி வருகிறது. இவை இரண்டையும் ஊடுருவிக்கொண்டு சூரிய ஒளிக்கதிர்கள், வெப்பத்திலும் குளிர்ச்சியிலும் வெவ்வேறு வேகத்தில் நுழைகின்றன. அப்போது ஒளிக்கதிர்கள் வளைகின்றன. இதை நம் மூளை நிலத்திலிருந்து தண்ணீர் தோன்றுவதுபோல் எண்ணிக்கொள்கிறது, சீனிவாசன்.

உடலில் உள்ள எலும்பு முறிந்து விழுந்தால், மீண்டும் அந்த எலும்பு வளருமா, டிங்கு?

- குகன் சரவணன், 3-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

சாதாரணமாக எலும்பு முறிந்தால், சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் சேர்ந்துவிடும். ஆனால், ஏதோ விபத்தின் மூலம் துண்டாக எலும்பு முறிந்துவிட்டால், மீண்டும் வளராது, குகன் சரவணன்.

உனக்குப் பிடித்த பொன்மொழி ஒன்று சொல்ல முடியுமா, டிங்கு?

- கே. ரஞ்சனி, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர்.

’வெற்றிகரமான வாழ்க்கை என்பது தடைகள் அற்ற வாழ்க்கை அல்ல. தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை. ‘ஹெலன் கெல்லர் சொன்ன இந்தப் பொன்மொழி மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடித்திருக்கிறதா, ரஞ்சனி?

SCROLL FOR NEXT