குழந்தை சாதனையாளர்களை ஊக்குவிக்க டெல்லியில் தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் தினத்தையொட்டி இந்த விருதைக் குடியரசுத் தலைவர் வழங்குவார். இந்த ஆண்டு மட்டும் 36 குழந்தைகளுக்கு இந்த விருதைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதில் சிறுவன் சுபேந்து குமார் சாஹூவின் சாதனை பலரையும் கவர்ந்தது.
அப்படி என்ன சாதனையைச் செய்தான் இந்தச் சிறுவன்? ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் சோமாபூர் திட்டம் நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறான் இந்தச் சிறுவன். ‘விவசாயிகளுக்கான பரிசு’ என்ற பெயரில் ஒரு கருவியை உருவாக்கினான் இவன். இந்தக் கருவி மூலம் விவசாயிகள் மண்ணை உழுது விதைக்கலாம், பூச்சிக்கொல்லியைத் தூவலாம், நெல்லை அறுவடையும் செய்யலாமாம்.
போன வருடம் கொல்கத்தாவில் நடந்த அறிவியல் போட்டியில், இந்தக் கருவியை எப்படி உருவாக்குவது என எழுதி வெற்றி பெற்றான் சுபேந்து குமார் சாஹு. இந்த ஆண்டு அந்தக் கருவியை உருவாக்கி விவசாயிகளுக்குப் பரிசாக வழங்கிவிட்டான். இதற்காகத்தான் குடியரசுத் தலைவர் விருதையும் ஜெயிச்சிருக்கார் இந்தக் குட்டி விஞ்ஞானி சாஹூ.
சாஹூவின் சாதனையைப் பாராட்டி ஒரு வெள்ளிப் பதக்கம், 10,000 ரூபாய் பரிசு, 3000 ரூபாய்க்கான புத்தகப் பரிசுக் கூப்பனும் வழங்கிப் பாராட்டினார் குடியரசுத் தலைவர்! நாமும் சாஹூவைப் பாராட்டுவோமா?