மாயா பஜார்

வந்தது வரலாறு: அகிம்சை அரசன்!

செய்திப்பிரிவு

அரசர்கள் அழகாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், பேரரசர் அசோகர் சின்ன வயதிலேயே தோல் நோயால் அவதிப்பட்டார். அதனால், அவர் அவ்வளவு அழகாக இல்லை. அதேநேரம், ஆட்சியின் தொடக்கக் காலத்தில் போரிலும் நிர்வாகத்திலும், பிற்காலத்தில் குடிமக்கள் மீதான பரிவிலும் அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. அதன் காரணமாகவே மகத்தான அரசராக அசோகர் கருதப்படுகிறார்.

மௌரிய வம்சத்தைச் சேர்ந்த பேரரசர் அசோகர் - பிந்துசாரரின் மகன், சந்திரகுப்த மௌரியரின் பேரன். அசோகர் ஒரு கட்டத்துக்குப் பிறகு போரைத் துறந்தாலும், ஆரம்பக் காலத்தில் மற்ற அரசர்களைப் போலவே இருந்தார். அவருடைய ஆட்சியில் எதிரிகளும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களும் கடுமையான தண்டனைகளை எதிர்கொண்டனர். சித்திரவதைக்கும் ஆளானார்கள்.

எது வெற்றி, எது தோல்வி?

சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர் காலத்திலேயே கலிங்கப் பகுதி (இன்றைய ஒடிசா) மட்டுமே மௌரிய ஆட்சிக்கு உட்படாமல் இருந்தது. அரசராக அசோகர் பதவியேற்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.மு. 261-ல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்துச் சென்றார். இந்தப் போரில் ஒரு லட்சம் பேர் இறந்தார்கள். அந்தக் காலத்தில் ஒரு லட்சம் பேர் மடிவது என்பது எவ்வளவு பெரிய எண்ணிக்கை.

போர்க்களத்துக்கு அருகே இருந்த தயா நதியில் தண்ணீருக்குப் பதிலாக ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் முதல்முறையாக வெற்றிபெற்ற ஒரு அரசர், வெற்றியைக் கொண்டாடுவதற்கு மாறாக அன்று கண்ணீர் வடித்தார். ‘இது வெற்றியா, தோல்வியா?' என்று அசோகர் தனக்குத் தானே கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பிறகு அரசர்களின் வழக்கமாக இருந்த நாடு பிடிக்கும் ஆசையையும், போரையும் அசோகர் கைவிட்டார். புத்த மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்த அவர், அதன் தர்மத்தைப் பரவலாக்க ஆரம்பித்தார். அகிம்சையைப் பின்பற்றினார்; வேட்டைக்குத் தடை விதித்தார்; தண்டனைகளின் கடுமைகள் குறைக்கப்பட்டன.

தேசியச் சின்னமும் தேசியக் கொடியும்

அசோகர் தான் பரப்ப நினைத்த கருத்துகளைப் பாறைகளிலும் தூண்களிலும் பொறித்துவைத்தார். வாழ்க்கையில் மக்கள் பின்பற்றப்பட வேண்டிய கோட்பாடுகளை அவை கூறின. புத்தரின் புனிதப் பொருட்களைப் பாதுகாப்பதற்காக 84,000 தூண்கள் (ஸ்தூபிகள்) அசோகரால் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றில் சாஞ்சி ஸ்தூபி உலகப் புகழ்பெற்றது. புத்த விஹாரங்கள் (கோயில்கள்), குகைக் கோயில்களையும் அசோகர் அமைத்தார். இவை மௌரியர் காலத்தின் அழகான கட்டிடக் கலையை இன்றைக்கும் வெளிப்படுத்துகின்றன.

அசோகரின் போதனைகள் பொறிக்கப்பட்ட தூண்கள் அசோகர் தூண்கள் எனப்பட்டன. சாரநாத்தில் உள்ள தூண் புகழ்பெற்றது. புத்தர் முதன்முதலில் 5 துறவிகளுக்கு இந்த இடத்தில்தான் தர்மத்தைப் போதித்தார். அதைச் சிறப்பிக்கும் வகையிலேயே சாரநாத் தூண் எழுப்பப்பட்டது. இந்தத் தூணின் உச்சியில் 4 சிங்கங்கள் ஒன்றன் முதுகில் மற்றொன்று ஒட்டி நிற்பதுபோல இருக்கும்.

இந்த நான்கு சிங்கச் சின்னமே நம் நாட்டின் அதிகாரபூர்வச் சின்னம் - அரச முத்திரை, நாணயங்களிலும் ரூபாய் நோட்டுகளிலும் இதுவே பொறிக்கப்படுகிறது. அதேபோல அந்தத் தூணின் சட்டத்தில் காணப்படும் 24 ஆரக்கால்கள் கொண்ட அசோகச் சக்கரமே, நமது தேசியக் கொடியின் மத்தியில் இடம்பெற்றுள்ளது.

அசோகர் மொத்தம் 37 ஆண்டுகள்தான் ஆண்டார். அவருடைய வாழ்நாளின் கடைசிவரை அகிம்சையைக் கைவிடவில்லை. கலிங்கப் போருக்குப் பிறகு போரை வெறுத்தார். ஆனால், அவருடைய வம்சாவளியினரும் அதேபோல ஆட்சியைத் தொடர முடியவில்லை. அசோகரின் இறப்புக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு மௌரிய வம்சம் அரசாட்சியை இழந்தது.

# அசோகர் ஆண்ட காலம் கி.மு. 269-ல் இருந்து கி.மு. 232 வரை.

# அசோகர் புத்த மதத்தைப் பின்பற்றி, அதைப் பரவலாக்க முற்பட்டாலும், மற்ற மதத்தினரையும் மதித்தார்.

# இலங்கையில் புத்த மதத்தைப் பரப்புவதற்காகத் தன் மகன் மகேந்திரனை, அசோகர் அங்கே அனுப்பிவைத்தார்.

# அசோகருக்குப் பிறகு அவருடைய மற்றொரு மகன் குணாலா ஆட்சியைத் தொடர்ந்தார்.

SCROLL FOR NEXT