மாயா பஜார்

தைல மரத்தின் கதை!

செய்திப்பிரிவு

யூகலிப்டஸ் தைலம் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது யூகலிப்டஸ் மரம்தான். உயரமான மரங்களில் யூகலிப்டஸ் மரமும் ஒன்று. மருத்துவக் குணங்கள் உள்ள யூகலிப்டஸ் மரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

யூகலிப்டஸ் ‘மிர்டேஷியே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. யூகலிப்டஸில் சுமார் 700 இனங்கள் உள்ளன. யூகலிப்டஸ் என்ற வார்த்தை, ‘யூகலிப்டோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு ‘நன்றாக மூடிய’ என்று அர்த்தம். யூகலிப்டஸ் மரத்தின் மலர் மொட்டுகளைக் கிண்ணம் போன்ற மெல்லிய தோல் மூடியிருப்பதால், இந்தப் பெயர்.

பெரும்பாலான யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை. பப்புவா நியூகினியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சில வகை யூகலிப்டஸ் மரங்கள் தோன்றின. இங்கிருந்துதான் உலகின் மற்ற நாடுகளுக்கு யூகலிப்டஸ் மரங்கள் கொண்டு செல்லப்பட்டு, பயிரிடப்பட்டன.

வெப்ப மண்டல நாடுகளில் 15 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் யூகலிப்டஸ் மரம் நன்றாக வளரும். யூகலிப்டஸ் மரங்கள் மிகவும் உயரமாக வளரக்கூடியவை. சராசரியாக 33 அடியிலிருந்து 200 அடிவரை உள்ள யூகலிப்டஸ் மரங்கள்கூட உள்ளன. ‘யூகலிப்டஸ் அமிக்டாலினா’ (Eucalyptus amygdalina) என்ற வகையைச் சேர்ந்த மரம் 480 அடி உயரம் வரைகூட வளருமாம். இதுவே உலகின் உயரமான மரம் என்றும் சொல்கிறார்கள்.

இம்மரத்தில் உள்ள இலைகளைப் பிரித்துச் சாறு எடுக்கிறார்கள். அதை ஆவியாக்கி யூகலிப்டஸ் எண்ணெய் தயாரிக்கிறார்கள். இந்த எண்ணெயில் மருத்துவத் தைலம், தொழிற்சாலை எண்ணெய், வாசனைத் திரவியம் என்று மூன்று பல தரங்கள் உள்ளன. யூகலிப்டஸ் மரம் ஓர் இடத்தில் இருந்தால், தண்ணீரை வேகமாக உறிஞ்சுவிடும். மற்றெந்த வகை தாவரத்தையும் வளர விடாது. கூட்டமாக யூகலிப்டஸ் மரங்கள் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் ரொம்பக் குறைவாக இருக்கும்.

தகவல் திரட்டியவர்: இ. தமிழழகன், 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, துவரங்குறிச்சி.

SCROLL FOR NEXT