கிரேக்க விஞ்ஞானிகளில் ஒருவரான ஹிப்பாகிரட்டீஸ் உலகின் முதல் நவீன மருத்துவர்களில் ஒருவர். நவீன மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுபவர். அவருடைய மருத்துவ முறைகள் அந்தக் காலம் முதல் தற்போதுவரை பின்பற்றப்படுவதே இதற்கு சாட்சி. இப்போதும் நவீன மருத்துவர்கள் அவர் பெயரில் ஓர் உறுதிமொழியை எடுத்துக்கொள்கின்றனர்.
பண்டைய கிரேக்க மக்கள் உடல்நலம் குன்றும்போது, அஸ்க்லபியான் என்ற இடத்துக்குச் செல்வது வழக்கம். அந்தக் காலத்தில் உடல்நலக் கோளாறுகளுக்குக் கடவுளே காரணம், முன்ஜென்ம தவறுகள் காரணம் என்றெல்லாம் நம்பப்பட்டுவந்தது. அதனால் நோயுற்றவர்கள், அஸ்க்லபியானுக்குச் சென்றால் உடல் குணமாகிவிடும் என்று கண்மூடித்தனமாக நம்பினர்.
ஆனால், கிரேக்கத் தத்துவவாதிகளும் மருத்துவர்களும் உடலை நோய் தாக்குவதற்கு இயற்கை அம்சங்களே காரணம் என்பதை உணர ஆரம்பித்தனர். இந்த முக்கியமான மாற்றத்தை முதலில் வலியுறுத்தியவராகக் கருதப்படுகிறார் மருத்துவரும் தத்துவவாதியுமான ஹிப்பாகிரட்டீஸ். அவர் வாழ்ந்த காலம் கி.மு. 460-375.
உடலை நலமாக்கலாம்
காஸ் தீவைச் சேர்ந்த அவர் கிரேக்க மருத்துவர்களில் மிகவும் பிரபலமானவர். “உடல்நலத்தைக் கடவுள் நமக்குக் கொடுக்கிறார் அல்லது உடல்நலத்தைக் குன்றச் செய்து அதைத் திரும்ப எடுத்துக்கொள்கிறார் என்று நினைப்பது தவறு. உடல்நலம் குன்றுவற்குக் காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், சிகிச்சை யையும் கண்டறிந்துவிடலாம்” என்று வலியுறுத்திய அவர், ஒரு மருத்துவப் பயிற்சிப் பள்ளியை நடத்தியதாக நம்பப்படுகிறது. மருத்துவத்தை ஒரு அறிவியல் துறையாக மாற்றியவர் என்று ஹிப்பாகிரட்டீஸைச் சொல்லலாம்.
அவரைத் தொடர்ந்து பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ அமைப்பை கிரேக்கர்கள் நிறுவினர். விரைவிலேயே தொழில்முறை மருத்துவத்திலும் சிகிச்சை அளிக்கும் திறமைகளையும் கிரேக்க மருத்துவர்கள் வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
உயர்ந்த நெறிமுறைகள்
ஹிப்பாகிரட்டீஸின் மருத்துவ சிகிச்சை, நோய் கணிப்புக்கு முக்கியத்துவம் தந்தது. நோயாளி கூறும் நோய் அறிகுறிகள், நோய் தாக்கப்பட்ட பிறகு நோயாளியின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவை கவனமாக உற்றுநோக்கப்பட்டன. உடலை முழுமையான ஒரு அமைப்பாகக் கருதி மருத்துவம் பார்க்கவே அவர் வலியுறுத்தினார்.
அவர் என்ன மருத்துவ சிகிச்சைகளைச் செய்தார் என்பது குறித்துத் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இருந்தபோதும், அவர் போற்றப்படுவதற்கும், அவர் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுவதற்கும் அடிப்படைக் காரணம், மருத்துவம் பார்ப்பதில் அவர் கடைப்பிடித்த நெறிமுறைகள்தான்.
‘நோயாளி-நோய் குறித்த ரகசியங்களை வெளியே சொல்லக் கூடாது, நல்லதொரு வாழ்க்கையை வாழ வழிவகை செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு விஷத்தைக் கொடுக்கக் கூடாது' என்பதே ஹிப்பாகிரடீஸ் பெயரில் எடுத்துக்கொள்ளப்படும் உறுதிமொழியின் சாராம்சம்.
அந்த உறுதிமொழி அவர் எழுதியது அல்ல என்று கருதப்பட்டாலும்கூட, அந்த உறுதிமொழியின் பெயர் மட்டும் மாற்றப்படவில்லை. நவீன மருத்துவம் படித்து முடிக்கும் ஒவ்வொரு மருத்துவரும் பட்டம் பெற்று மருத்துவம் பார்ப்பதற்கு முன், இந்த உறுதிமொழியை இப்போதும் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆங்கிலக் குழப்பம்
ஹிப்பாகிரட்டீஸ் (Hippocrates) என்ற பெயரும், ஹிப்போகிரிட்ஸ் (Hypocrites) என்ற சொல்லும் ஒரே உச்சரிப்பு போல வந்து ஆங்கிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். உச்சரிப்பு ஒன்றுபோலத் தோன்றினாலும், இரண்டின் அர்த்தமும் வேறு. ஹிப்போகிரிட்ஸ் என்ற சொல் ஹிப்போகிரஸி என்ற சொல்லிலிருந்து உருவானது. சொல்வது ஒன்று; செய்வது ஒன்றாக இருக்கும் நபர்களையும், கண்மூடித்தனமாகச் செயல்படுவதையும் இந்தச் சொல் குறிக்கிறது. எனவே, இதை மருத்துவத் தந்தை ஹிப்பாகிரட்டீஸையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.