மாயா பஜார்

நாட்டுக்கொரு பாட்டு 7 - இலங்கை தேசிய கீதமும் தாகூரும்!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? ரவீந்திரநாத் தாகூர் இல்லையா? சரி, இலங்கை, பங்களாதேஷ் தேசிய கீதங்களை இயற்றியது யார்? அதுவும் தாகூர்தான்!

நெருங்கிய உறவு

இலங்கை நம் பக்கத்து நாடு மட்டுமல்ல; நம் கலாச்சாரத்தோடு நெருங்கிய நாடு. நமக்கு சுதந்திரம் கிடைத்து ஆறு மாதங்கள் கழித்து, 1948 பிப்ரவரி 4 அன்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையின் தேசிய கீதம் இயற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதுதான் இலங்கையின் தேசிய கீதமாகப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.

குரு - சிஷ்யன்

இலங்கையைச் சேர்ந்தவர் கவிஞர் சமரகூன். கவிஞர் தாகூரின் மாணவர். இந்தியாவில் தாகூருடன் தங்கிப் பாடம் படித்தவர். சமரகூன், 1939-ல் இலங்கை திரும்பினார். 1940-ம் ஆண்டு ஒரு கல்லூரியில் அவர் வேலை பார்த்தார். அப்போது, இலங்கை தெற்கு பிராந்தியத்தின் பள்ளி அதிகாரி ஜெயசூரியா, ஒரு பாடல் எழுதித் தருமாறு கவிஞரைக் கேட்டார்.

குருவின் கைவண்ணம்

உடனே சமரகூன் தாகூரை அணுகினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 'பெங்காலி' மொழியில் ஒரு பாடல் எழுதி இசையமைத்துக் கொடுத்தார் தாகூர். சமரகூன் அதை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். இதை எந்த ஆண்டு எழுதினார் என்ற தகவல் இல்லை. ஆனால், பாடலை இயற்றியவர்கள் தாகூர், சமரகூன்தான். கல்லூரி நிக்ழ்ச்சி ஒன்றில் 'கோரஸ்' ஆக இப்பாடல் பாடப்பட்டது. எல்லோருக்கும் பிடித்துப்போனது.

போட்டி - தேர்வு

விடுதலைக்கு முன்பாக, ‘லங்கா கந்தர்வ சபா' என்ற அமைப்பு, தேசிய கீதத்துக்காக ஒரு போட்டி வைத்தது. போட்டிக்கு வந்தவைகளில், சமரகூனின் ‘நமோ நமோ மாதா' வும், லங்கசிங்கே & லேனல் இதிரிசின்கே இயற்றிய ‘ லங்கா மாதா' வும் இருந்தன. இரண்டாவது பாடல் தேர்வானது. 1948 பிப் 4, சுதந்திர நாளன்று சிலோன் ரேடியோவில் இது ஒலிபரப்பானது. ஆனால், இப்பாடல் பற்றி சர்ச்சை எழுந்ததால் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பாடப்படவில்லை.

கோரிக்கை

1950-ல், இலங்கையின் நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜயவர்தனே, கவிஞர் சமரகூன் எழுதிய ‘நமோ நமோ..' பாடலை அதிகாரபூர்வ தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதன் பிறகு, தேசிய கீதத்தைத் தேர்வு செய்து பரிந்துரைக்க, ஒரு குழு அமைக்கப்பட்டது. பல பாடல்கள் பரிசீலனைக்கு வந்தன. இறுதியில், சில மாற்றங்கள் செய்து, ‘நமோ நமோ...' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. 1951 நவம்பர் 22 அன்று இலங்கை அரசு இதை ஏற்றுக்கொண்டது.

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் எம். நல்லத்தம்பி, இப்பாடலைத் தமிழில் மொழி பெயர்த்தார். 1952 சுதந்திர நாளன்று, 'தேசிய கீதம்' என்ற அந்தஸ்துடன் முதன் முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டது. இந்த வரலாறு இத்துடன் முடிந்துவிடவில்லை.

சோகம்

இலங்கையில் இரண்டு பிரதமர்கள் அகால மரணம் அடைந்ததற்கு, தேசிய கீதத்தின் முதல் வரியே காரணம் என்று சிலர் கருதினர். அதனால், பாடல் வரிகளை மாற்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், மாற்றத்துக்கு சமரகூன் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அதையும் மீறி 1961 பிப்ரவரியில் பாடலில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டது. தனது பாடல் சிதைக்கப் பட்டுவிட்டது என்று எழுதி வைத்து விட்டு, 1962 ஏப்ரல் மாதம், கவிஞர் சமரகூன் தற்கொலை செய்துகொண்டது தனிக்கதை.

சரி, என்ன சொல்கிறது இலங்கையின் தேசிய கீதம்?

ஸ்ரீ லங்கா மாதா அப் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ மாதா

சுந்தர சிரி பரணி

சுரேந்தி அதி சோபமான லங்கா

தான்ய தன யாலேக மல்பலதுரு பிரி,

ஜய பூமி ய ரம்யா

அப் ஹத் சப் சிரி சேத் சதனா

ஜீவ் நயி மாதா!

பிலிஹனு மெனு அபு

பக்தி பூஜா

நமோ நமோ மாதா

அபு ஸ்ரீலங்கா

நமோ நமோ நமோ நமோ மாதா.

ஒபவே அபு வித்யா

ஒபுமய அபு சத்யா

ஒபுவே அபு ஷக்தி

அபு ஹூட துல பக்தி

ஒப அபு ஆலூகே

அபுகே அனு ப்ரானே

ஒபு அபு ஜீவன வே

அபு முக்தய பேவே

நவ ஜீவன டெமினே

நிந்தின அப

புபுடு கரன் மாதா

ஞான வீர்ய வதவமினா

ரகெனா யனு மென ஜய பூமி

எகமவ குகடரு கலா பாவினா

யாமு யாமு வீ நொபமா

ப்ரேம வதா சம பேத

துராரா தா

நமோ நமோ மாதா

அபு ஸ்ரீலங்கா

நமோ நமோ நமோ நமோ மாதா.

தமிழாக்கம்

ஸ்ரீ லங்கா தாயே - நம ஸ்ரீ லங்கா.

நமோ நமோ நமோ நமோ தாயே.

நல்லெழில் பொலி சீரணி

நலங்கள் யாவும்

நிறைவாய் மணி லங்கா

ஞாலம் புகழ் வளவயல்

நதிமலை மலர்நறுஞ்

சோலைகொள் லங்கா

நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்.

நமதுதி ஏல் தாயே

நமதலை நினதடி மேல் வைத்தோமே

நமதுயிரே தாயே - நம ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே.

நமதாரருள் ஆனாய்

நவை தவிர் உணர்வானாய்.

நமதேர் வலியானாய்.

நவில் சுதந்திரம் ஆனாய்.

நமதிளமையை நாட்டே

நகுமடி தனையோட்டே

அமைவுறும் அறிவுடனே

அடல்செறி துணைவருளே.

நமதோர் ஒளிவளமே

நறியமலர் என

நிலவும் தாயே.

யாமெலாம் ஓருயிர் கருணை

அனை பயந்த

எழில்கொள் சேய்கள் எனவே

இயலுறு பிளவுகள் தமை அறவே

இழிவென நீக்கிடுவோம்.

ஈழ சிரோண்மணி வாழ்வுறு பூமணி

நமோ நமோ தாயே - நம் ஸ்ரீலங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே.

(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)

SCROLL FOR NEXT