மாயா பஜார்

விடுகதைப் பாடலுக்கு விடை என்ன? - அழ. வள்ளியப்பா

செய்திப்பிரிவு

தெரியுமா தம்பி?

நெட்டை யான காலுடனே

நீள மான கழுத்துடனே

சுட்டுப் பொசுக்கும் மணலில்கூடச்

சுமையைத் தூக்கிச் செல்லும் அது

என்ன தெரியுமா? - தம்பி

என்ன தெரியுமா?

முறத்தைப் போன்ற காதுடனே

முகத்தில் ஒற்றைக் கையுடனே

உரலைப் போன்ற காலுடனே

ஊர்வ லத்தில் வருமே அது

என்ன தெரியுமா? தம்பி

என்ன தெரியுமா?

பட்டுப் போன்ற உடலுடனே

பலநி றத்தில் இறகுடனே

கட்டை யான குரலுடனே

களித்து நடனம் ஆடும் அது

என்ன தெரியுமா? தம்பி

என்ன தெரியுமா?

வட்ட மான முகத்துடனே

வளைந்தி ருக்கும் மூக்குடனே

முட்டை போன்ற கண்ணுடனே

வேட்டை ஆடும் இரவில் அது

என்ன தெரியுமா? தம்பி

என்ன தெரியுமா?

விடைகள்:

1. ஒட்டகம்

2. யானை

3. மயில்

4. ஆந்தை

SCROLL FOR NEXT