மாயா பஜார்

எதிரிகள் இல்லாத பட்டாம்பூச்சிகள்!

எஸ்.கண்ணன்

பட்டாம்பூச்சி என்றாலே குழந்தைகளுக்குக் குஷிதான். பட்டாம்பூச்சியைப் பிடித்து விளையாடுவது, அதன் வண்ணங்களைப் பார்த்துப் பிரமிப்பது எனப் பட்டாம்பூச்சி மீதான குழந்தைகளின் ஈர்ப்புக்குப் பல காரணங்கள் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் உள்ளன.

பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் ஒரே கொத்தில் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுவிடும். பட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலும், அந்த ஆசை பறவைகளுக்கு வரும். ஆனால், சாப்பிட முடியாது. ஏன் தெரியுமா?

இயற்கை அளித்திருக்கும் பாதுகாப்பு வளையம்தான் அதற்குக் காரணம். பட்டாம்பூச்சிகளின் முதல் எதிரி பறவைகள்தான். ஆனால், அதிக வண்ணங்களோடு பளிச்சென்று இருக்கும் உயிரினங்கள் ஆபத்தானது எனப் பறவைகளின் மூளையில் பதிவாகி இருக்கிறது. சாலையில் சிவப்பு சிக்னலைப் பார்த்தால் அபாயம் என நாம் நினைக்கிறோம் அல்லவா? அதுபோலப் பறவைகள் பட்டாம்பூச்சியை சீந்துவதேயில்லை.

பட்டாம்பூச்சிகள் பெரும் பாலும் விஷச்செடிகளின் இலைகளில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த முட்டையிலிருந்து வெளிவரும் இளம் கம்பளிப்புழு, அந்த விஷ இலைகளைத் தின்றே வளர்கிறது. இதனால், அதன் உடலிலேயே விஷம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்துவிடுகிறது. பட்டாம்பூச்சியாக உருவெடுத்த பிறகும் இந்த விஷத்தன்மை நீடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தெரியாமல் பறவைகள் பட்டாம்பூச்சியைக் கொத்தி விழுங்கினால், அவ்ளோதான். மனிதர்களுக்கு ஏற்படுவதுபோல ‘ஃபுட் அலர்ஜி’ ஆகிவிடுமாம். அதனால்தான் பட்டாம்பூச்சி பக்கமே பெரும் பாலான பறவைகள் தலை வைப்பதில்லை.

அதேசமயம் வயதான பிறகு பட்டாம்பூச்சியின் உடலில் விஷத்தன்மை குறைந்துவிடுமாம். அப்போது அதன் நிறமும் மங்கிவிடும். இதைப் புரிந்து கொள்ளும் சில புத்திசாலிப் பறவைகள், பட்டாம்பூச்சியைக் கொத்தி வீழ்த்திவிடுகின்றன.

எவ்ளோ உஷார் பார்த்தீங்களா?!

தகவல் திரட்டியவர்: எஸ். கண்ணன், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரவக்குறிச்சி, கரூர்.

SCROLL FOR NEXT