மாயா பஜார்

சின்னுவும் மொபைல் போனும் - கதை

செய்திப்பிரிவு

ப. தனஞ்ஜெயன்

அதிகாலை எப்படி இருக்கும் என்றே அந்தச் சின்னு கரடிக்குத் தெரியாது. அன்று அதிசயமாக அதிகாலையில் கண்விழித்த சின்னு, ‘அடடா! அதிகாலையில் இந்த உலகம் இவ்வளவு அழகாக இருக்குமா!’ என்று ஆச்சரியப்பட்டது.

தினமும் இரவு பன்னிரண்டு மணி வரை விழித்து, மொபைல் போனில் ஏதாவது விளையாடிவிட்டுத் தூங்குவதால், சின்னுவுக்கு அதிகாலையில் கண்விழிக்க இயலாது. இந்தப் பழக்கத்தை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று சின்னுவின் அம்மா எவ்வளவோ முயன்றது. ஆனால், முடியவில்லை. இன்றுதான் அதிசயமாகக் கண்விழித்து, அம்மாவுடன் நடக்க ஆரம்பித்தது சின்னு.

அதிகாலைப் பனி தாவரங்கள் மீது படர்ந்திருந்தது. லேசான சூரிய வெளிச்சம் பட்டு, பனி உருகும் காட்சி மனத்தைக் கொள்ளைகொண்டது.

பறவைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடிக் கிளம்பிய காட்சி அற்புதமாக இருந்தது. வயதான மான்கள் சில குளிருக்கு இதமாகச் சுள்ளிகளை எரித்து, குளிர்காய்ந்துகொண்டிருந்தன.

அம்மா கரடி, “இப்படிச் சுள்ளிகளைக் கண்ட இடங்களிலும் எரிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காங்களே, கவனமா எரிங்க. இல்லைனா காட்டில் தீப்பிடிச்சிடும்” என்று சொல்லிக்கொண்டே நடந்தது.

“எங்களுக்குப் போர்வை இருந்தால், நாங்கள் ஏன் சுள்ளிகளை எரிக்கப் போகிறோம்?” என்றது வயதான மான் ஒன்று.

“அம்மா, எப்படியாவது இவர்களுக்குப் போர்வை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.”

“செய்யறேன் சின்னு.”

“நாளைக்கு உங்களைப் போர்வையுடன் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவுடன் மகிழ்ச்சியாக நடந்தது சின்னு.

வழியில் சின்னுவின் நண்பனான அணில், கொய்யா மரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டது. சின்னுவைப் பார்த்த அணில், கொய்யாப் பழங்களைப் பறித்துப் போட்டது.

சின்னுவும் அம்மாவும் பழங்களைச் சுவைத்துவிட்டு, அணிலுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
சின்னுவுக்கு இந்தக் காலைச் சூழல் மிகவும் பிடித்துவிட்டது. வழியில் ஏராளமான விதைகள் நிலத்தில் சிதறிக் கிடந்ததைக் கண்டது.

“அம்மா, ஏன் இவ்வளவு விதைகள் இப்படிக் கொட்டிக் கிடக்கின்றன?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது சின்னு.

“மரங்கள் இன்றி காடு இல்லை. காடு இன்றி விலங்குகள், பறவைகள், பூச்சிகள் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் வயதான மரங்கள் பட்டுப்போய்விடும். அவற்றுக்குப் பதிலாக இப்போதே புதிய மரங்களை உருவாக்கினால்தான், நமக்கெல்லாம் நல்லது. அதனால் தான் காடு முழுவதும் விதைகளை நடும் பணியை ஆரம்பித்திருக்கிறோம். இந்த விதைகள் முளைத்து, மரங்களாக வந்தால் நமக்குப் பிரச்சினை இருக்காது” என்று பொறுமையாகச் சொன்னது அம்மா கரடி.

“இவ்வளவு விஷயங்கள் இந்தக் காட்டுக்குள் இருக்கின்றனவா! எனக்கு ஏன் எந்த விஷயமும் தெரியவில்லை?” என்று வருத்தப்பட்டது சின்னு.

“நீ எப்பொழுதும் மொபைல் போனில் விளையாடிக்கொண்டே இருந்தால், நம் வீட்டு விஷயங்கள்கூடத் தெரியாது. உனக்கு எப்படிக் காட்டில் நடைபெறும் விஷயங்கள் எல்லாம் தெரியும்?”

“என்னம்மா சொல்றீங்க?”

“எல்லோரும் அவசரத் தேவைக்கு, அறிவுத் தேவைக்கு, பொழுதுபோக்குக்கு மொபைல் போனைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நீ பொழுது புலர்வதே இந்த போனைப் பயன்படுத்துவதற்காகத்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய். எவ்வளவு சொன்னாலும் நீ கேட்பது இல்லை. அதனால் உனக்கு நிஜ வாழ்க்கையைப் பற்றி ஒரு விஷயமும் தெரியாமல் போய்விட்டது.”

“ஐயோ… இப்பொழுதான் எனக்குப் புரிகிறது. இனிமேல் தேவைக்கு மட்டுமே மொபைல் போனைப் பயன்படுத்துவேன்” என்றது சின்னு.

“இறந்து போன விலங்குகளின் தோல்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இவற்றை எடுத்துச் சென்று, அந்த மான்களுக்குக் கொடுத்துவிடுகிறாயா?” என்று கேட்டது அம்மா கரடி.

“அட, அதற்குள் போர்வை கொடுத்துவிட்டீர்களே, இப்பொழுதே மான்களைப் பார்த்துக் கொடுத்துவிடுகிறேன்” என்றது சின்னு.

“சின்னு, நானும் உன்னோடு வருகிறேன்” என்று அணிலும் சேர்ந்துகொண்டது.

குளிருக்கு இதமாகப் போர்வைகளை வழங்கிய சின்னுவையும் அணிலையும் மான்கள் பாராட்டின!

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

SCROLL FOR NEXT