மாயா பஜார்

வனக்குரல் - காட்டு நாளிதழ் | சிறார் நகைச்சுவைப் பகுதி

செய்திப்பிரிவு

எல். மீனாம்பிகா

வனக்குரல் - காட்டு நாளிதழ்

நம்பர் 1. காட்டு நாளிதழ்
நாள்: 8 மே 2022

கோடை விடுமுறையில் வெளியாகிறது சிங்கராஜனின் கிர்ர்

சிங்கபுரம் :

கோடை விடுமுறையைக் குறிவைத்து சிங்கராஜன் புதிதாக நடிக்கும் 'கிர்ர்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்துவருகிறது. இயக்குநர் வனநேசனின் கனவு திட்டமான 'கிர்ர்' படத்துக்காக, ராஜஸ்தான் பாலைவனத்தில் கலை இயக்குநர் ஒட்டகராஜன் 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான செட் அமைத்துள்ளார். சிங்கராஜனின் கர்ஜனை புகழ்பெற்றது என்பதால் படத்துக்கு 'கிர்ர்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கதாநாயகனாக நடிக்கும் சிங்கராஜனுக்கு இந்தப் படத்துக்குச் சம்பளம் 10 கோடி ரூபாய்! வனத் திரைப்பட உலகில் இதுவரை யாருமே பெறாத சம்பளம் சிங்கராஜன் பெற்றுள்ளதாக வனத் திரைப்படத்துறையினர் தெரிவித்தனர். மே மாதம் 15ஆம் தேதி சிங்கராஜனின் 'கிர்ர்' திரைப்படம் உலகம் முழுக்க உள்ள வனங்களில் வெளியாகும். இந்தக் கோடை விடுமுறை குட்டி விலங்குகளைக் குதூகலிக்க வைக்கும் என்று படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பச்சைக்கிளியான் தெரிவித்தார்.

விழுங்கிய மனிதனைத் துப்பிய திமிங்கிலம்

திமிங்கல் நகர்:

மனிதனை விழுங்க முயன்ற திமிங்கிலம் ஆச்சரியப்படும் விதத்தில் உயிர் தப்பியது. திமிங்கில் நகர் ஆழ்கடலில் கம்பீரமாக வலம்வந்த திமிங்கிலேஷ், உணவருந்தும்போது வாயில் ஏதோ விசித்திர விலங்கு உள்ளே சென்றதாக உணர்ந்தது. தொண்டையை அடைத்தபோதுதான் அது மனிதன் என்பதை உணர்ந்தது. கரோனா காரணமாக மனிதனைப் பார்ப்பதைக்கூட முழுவதுமாகத் தடை செய்திருந்தது நீர் விலங்கு சுகாதார அமைச்சகம். விழுங்கியது மனிதன் என்பதை உணர்ந்த அடுத்த நொடியே மனிதனைத் துப்பியது திமிங்கிலேஷ். வாயை சோடியம் குளோரைடு தண்ணீரில் நன்கு கழுவியது. மனிதன் மூலம் ஒருவேளை கரோனோ தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் சளிமாதிரி பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் நெகட்டிவ் எனத் தெரிந்தாலும் நான்கு நாட்கள் நீர் சுகாதாரத்துறை செவிலியர் சுறா ராணி தலைமையில் நான்கு செவிலியர்கள் கண்காணிப்பில் இருக்குமாறு திமிங்கிலேஷுக்கு அறிவுறுத்தப்பட்டது. விழுங்கிய மனிதனைத் திமிங்கிலம் துப்பிய சம்பவத்தால் திமிங்கல் நகரில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

அயலை மீன்கள் நாட்டின் பெருமை: ஆரோக்கிய மந்தி அறிவிப்பு

கடற்புரம்:

கரோனாவால் காடு மிகுந்த துயரத்தில் ஆழ்ந்த போது காட்டை ஒட்டிய கடற்பகுதியில் அதிக அளவில் அயலை மீன்கள் கிடைத்ததால்தான் வனவிலங்குகள் ஒரு நேரமாவது பட்டினியின்றி வாழ முடிந்தது எனக் கடல்மதி அரண்மனையைச் சேர்ந்த ஆரோக்கிய மந்தி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,"கரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் காட்டில் எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து குரங்குப்படைகள் தலைமையில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் அயலை மீன்களைப் பெருமளவில் பிடித்து விலங்குகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. அயலை மீன்கள் மட்டும் இல்லையேல் விலங்குகள் பலவும் பட்டினி கிடந்து மரணித்திருக்க வேண்டி வந்திருக்கும். ஆகவே அயலை மீன் கூட்டத் தலைவர்கள் தங்கள் உறவுகளின் உயிரைப் பொருட்படுத்தாமல், வன விலங்குகளின் உயிரைக் காப்பதற்காக உணவாக முன்வந்தது மிகுந்த நெகிழ்ச்சியான விஷயம். கரோனா முடிந்ததும் அயலை மீன்களுக்குத் தலைநகரில் சிலை வைக்கப்படும்” என்றார்.

டைனோசர்கள் அழியக் காரணம் சந்திரன் - பேரா. ஒட்டகச்சிவங்கி

தலை நீட்டிப் பாறை :

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வசித்து வந்த டைனோசர்கள் இன்று இல்லாமல் போனது ஏன் என விலங்குகள் உலகில் ஏற்பட்ட மாபெரும் கேள்விக்கு, பெரு நீளக்கழுத்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒட்டகச்சிவங்கி விடை கண்டுபிடிதுள்ளார். கடந்த இருபத்தி ஏழு ஆண்டுகளாக இது தொடர்பாக அவர் நடத்திய ஆய்வின் முடிவில் அறிந்தவை குறித்து 'ஜங்கிள் டிவி'க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியதாவது, "லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு சந்திரன் பூமிக்கு வெகு அருகில் இருந்தது. கழுத்து நீளம் மிகுந்த டைனோசர்கள் நடமாடிக்கொண்டிருக்கும்போது சுற்றிக்கொண்டிருந்த சந்திரன், டைனோசர்கள் தலையில் மோதியதில் சிறிது சிறிதாக மடிந்து விழுந்தன. மீண்டும் சந்திரன் பூமியை நெருங்கும் சூழல் உருவானால், ஒட்டகச்சிவிங்கிகள் முழுமையாகப் பாதிக்கும் சூழல் ஏற்படும்” என்றார். பேராசிரியர் ஒட்டகச்சிவிங்கியாரின் புது ஆய்வு குறித்து வனங்களில் பெரும் சர்ச்சையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT