ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 25 அன்று உலக டி.என்.ஏ. தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1953ஆம் ஆண்டு இதே நாளில் ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்சிஸ் க்ரிக், மெளரிஸ் வில்கின்ஸ் மற்றும் ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் ஆகியோர் ‘நேச்சர்’ இதழில் டி.என்.ஏ. குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர்.
2003ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 25 அன்று தேசிய டி.என்.ஏ. தினமாகக் கொண்டாடி வருகிறது, அமெரிக்கா. பின்னர் இந்தத் தினத்தை ‘உலக டி.என்.ஏ. தினம்’ என்று பல்வேறு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. மக்களிடம் டி.என்.ஏ. பற்றிய புரிதலை உண்டாக்கும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தத் தினத்தில் நடத்தப்படுகின்றன.
1962ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்சிஸ் க்ரிக், மெளரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு டி.என்.ஏ. கட்டமைப்பை உறுதி செய்ததற்காக மருத்துவத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு 37 வயதில் புற்றுநோய் காரணமாக ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் மறைந்துவிட்டார். இறந்தவருக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட மாட்டாது என்ற விதியின் காரணமாக, ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் நோபல் பரிசு பெறும் வாய்ப்பை இழந்தார். நோபல் கிடைக்காவிட்டாலும் டி.என்.ஏ. ஆராய்ச்சியில் ரோசலிண்ட் ஃப்ராங்க்ளினின் பங்களிப்பு மகத்தானது என்பதை அறிவியல் உலகம் அங்கீகரித்திருக்கிறது.