கட்டைவிரலின் கதை, l உதயசங்கர், வானம் பதிப்பகம், தொடர்புக்கு: 91765 49991
பழங்குடி மாணவன் ஏகலைவன், தொலைவிலிருந்து பார்த்தே துரோணரிடம் வில் வித்தை கற்றதற்காக அறியப்பட்டவன். அம்பை எய்வதற்கு அடிப்படையாக இருக்கும் அவனுடைய கட்டை விரலை குரு தட்சிணையாக துரோணர் கேட்டார் என்பது மகாபாரதக் கதை. ‘கட்டைவிரலின் கதை’யில் வரும் கேப்டன் பாலு கதாபாத்திரத்துக்கு ஓர் அதிசயப் புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தில் ஏகலைவன் என்ன அவதாரம் எடுத்தான் என்பது மாறுபட்ட சிந்தனையுடன் இளையோர் நாவலாக விரிந்திருக்கிறது.
விடுதலைக் கிளிகள், l வெற்றிச்செழியன், மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை, தொடர்புக்கு: 98409 77343
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படாத பிரிவு சிறார் பாடல்கள். அந்தக் குறையைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. வெற்றிச்செழியன் எழுதியுள்ள இந்த நூலில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை பாடக்கூடிய துளிர்களுக்கு, மொட்டுகளுக்கு, பிஞ்சுகளுக்கு எனப் பாடல்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. அத்துடன் கதைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், இசைப் பாடல்கள் போன்ற பல்வேறு வகைப் பாடல்கள் உள்ளன.
டுஜக்.. டுஜக்.., l தேனி சுந்தர், புக்ஸ் ஃபார்சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2424
சின்னஞ்சிறு குழந்தைகள் பேசுவதை அர்த்தமற்றது என்றுதான் நம்மில் பெரும்பாலோர் கருதுகிறோம். அது எவ்வளவு தவறு என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும். ‘குழந்தை மொழியைக் கொண்டாடும் வீடுகள் கொஞ்சம் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீட்டில் புறப்பட்ட உரையாடல்கள் இவை!’ என்று பேராசிரியர் ச. மாடசாமி பாராட்டியிருக்கும் இந்த நூல், தமிழ்ச் சூழலில் முற்றிலும் புதிய வரவு.
மண்ணின் நண்பன் மண்புழு, l சுல்தான் அகமது இஸ்மாயில், இயல்வாகை பதிப்பகம், தொடர்புக்கு: 99421 18080
குழந்தைகள் மண்ணிலும் திறந்த வெளிகளிலும் விளையாடிய காலத்தில் மண்புழு அவர்களுடைய நெருக்கமான நண்பர்களில் ஒன்றாக இருந்தது. இன்றைக்குக் குழந்தைகள் ஈரமண்ணில் கால் வைப்பதையே பல பெற்றோர் அனுமதிப்பதில்லை. இந்தப் பின்னணியில் மண்ணுக்கு உயிர்தரும் மண்புழுக்கள் பற்றித் தன் வாழ்நாள் முழுக்க ஆராய்ந்துவரும் பேராசிரியர் சுல்தான் எளிமையான, வண்ண ஓவியங்களுடன் கூடிய இந்த நூலை எழுதியிருக்கிறார்.
மந்திரக்குடை, l ஞா. கலையரசி, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924
மாயாஜாலக் கதைகள் பிடிக்காத குழந்தை உண்டா? இந்தக் கதையிலும் அப்படிப்பட்ட மந்திரக்குடை ஒன்று வருகிறது. இயற்கை, காடு, உயிரினங்களைப் பற்றிக் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த நெடுங்கதை எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் எழுத வந்துள்ள சிறார் எழுத்தாளர்களிடையே தொடர்ச்சியாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் இயங்கிவரும் இந்த நூல் ஆசிரியர், தொடர்ந்து பல நெடுங்கதைகளைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.