நாள்தோறும் நான்கு மைல் நடை, யோகா, புல்லாங்குழல் வாசிப்பு, பேரனிடம் மென்பொருள் கற்பது என்றிருக்கும் டி.எஸ்.நாகராஜன் (90), குழந்தைகளுக்கு பாட்காஸ்ட் வழியாகக் கதையும் சொல்லிவருகிறார். ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் https://tinyurl.com/yctlkew4 என்கிற யூடியூப் அலைவரிசை மூலமும் கதைகளை வழங்கிவருகிறார். இதுவரை 100 கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
அவர் கூறிய ‘உப்பு’ என்கிற ரஷ்ய நாட்டுக் கதை வித்தியாசமானது. கடலில் புயல் வீசத் தொடங்கியதால், வழிதவறி ஒரு தீவை அடைகிறான் ஐவான். அங்கே அவனுக்கு ரஷ்ய உப்பு கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு, உப்பைப் பற்றியே கேள்விப்படாத நகரத்துக்குச் செல்கிறான்.
அந்த நாட்டு அரசரிடம், ரஷ்ய உப்பைப் பற்றிக் கூறுகிறான். உப்பின் சுவையை உணர்ந்த அரசர், ஐவானிடம் உப்பைப் பெற்றுக்கொண்டு, பொன்னும் பொருளும் அளிக்கிறார். அதன் பின்னர் ஐவான், இளவரசியை மணக்கிறான். அவனுடைய அண்ணன்கள் பொறாமைகொண்டு, அவனை அழிக்க நினைக்கிறார்கள். இடையில் ஒரு பூதம் ஐவானைக் காப்பாற்றுகிறது. கடைசியில் உண்மையான சந்தோஷம் எது என்பதை பூதம் உணர்வதுடன் கதை முடிகிறது. இதுபோல் பல கதைகளை நாகராஜன் கூறியிருக்கிறார்.