சர்க்கஸில் யானை, குரங்கு, சிங்கம்கூட சைக்கிளில் உள்ள பெடல்களை மிதிப்பதைப் பார்த்திருப்போம். தொட்டியில் வாழும் தங்கமீன்கள், அந்தத் தொட்டியைக் குறிப்பிட்ட இலக்கு நோக்கிச் செலுத்துகின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! இஸ்ரேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்தாம் மீன்களுக்கு இந்த வித்தையைக் கற்றுக்கொடுத்திருக்கின்றனர்.
மீன்களின் திசை அறியும் உணர்வு, தொட்டியில் வாழ்ந்தாலும் குறைந்துவிடவில்லை. திசை அறியும் உணர்வும் தம்மைச் சுற்றியுள்ள வெளி குறித்த உள் உணர்வும் மீன்களுக்கு உண்டு என்கிற கருத்தை இந்த ஆய்வு காட்டுகிறது.
மீனுக்குக் கை, கால்கள் இல்லை. நீரை விட்டு வெளியே வாழ முடியாது. எனவே, மீன் ஓட்டும் வாகனத்தைப் புது முறையில் தயார் செய்தார்கள். மீன்தொட்டியின் நான்கு பக்கச் சுவர்களிலும் உணர்விகளைப் பொருத்தினார்கள். தொட்டியின் நான்கு பகுதிகளிலும் மோட்டார் சக்கரங்களைப் பொருத்தினார்கள். சுவரில் உள்ள உணர்விகளையும் சக்கர மோட்டர்களையும் கணினி மூலம் இணைத்தார்கள்.
தொட்டியில் அங்கும் இங்கும் மீன்கள் நீந்தும். சில நேரம் மீன்கள் தொட்டியின் சுவரில் தலையை மோதுவது போல வரும். இதனை உணர்விகள் கண்டு, சக்கரங்களின் மோட்டரை இயக்கும். அப்போது தொட்டி நகரும். மீன் வெளிப்பக்கம் நோக்கித் தலையை வைத்தால் தொட்டி நகரும். உட்பக்கமாகத் தலையைத் திருப்பினால் தொட்டி நின்றுவிடும்.
பயிற்சியின் ஆரம்ப நிலையில் மீன்கள் சீரற்ற முறையில் சுற்றி வந்தன. தற்செயலாகச் சுவரின் அருகில் மீன்கள் வரும்போது, அந்தத் திசை நோக்கி மெல்ல தொட்டி நகர்வதை உணர்ந்துகொண்டன. தொட்டி நகர்ந்தால் மட்டுமே மீன்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதனையும் காலபோக்கில் மீன்கள் உணர்ந்துகொண்டன.
அடுத்த கட்டப் பயிற்சியில் தொட்டி வைக்கப்பட்ட அறையின் சுவரில் இளஞ்சிவப்பு தட்டியைப் பொருத்தினர். அதுதான் இலக்கு. முன்னும் பின்னும் இடமும் வலமும் இயங்கி, தொட்டியைத் தட்டி அருகே கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால் மீன்களுக்கு உணவு கிடைக்கும். ஆரம்பத்தில் தடுமாறினாலும் காலப்போக்கில் மீன்கள் சரியாகச் செயல்பட்டன. தொட்டி நகர ஆரம்பித்தது. வாரம் மூன்று முறை மீன்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் மீன்தொட்டி பல முறை மீன்களால் நகர்த்தப்படும். இளஞ்சிவப்பு தட்டி அருகே சென்றால் உணவு கிடைக்கும். வேறு வண்ணத் தட்டிகள் அருகே சென்றால் உணவு கிடைக்காது. ஆரம்பத்தில் ஒவ்வொரு பயிற்சியின்போதும் மூன்று பயணங்கள் மட்டுமே சரியான இலக்கை அடைந்தன. காலப்போக்கில் 18 பயணங்கள் சரியான இலக்கை அடைந்தன. அதேபோல ஆரம்பத்தில் தற்செயலாகத்தான் இலக்கை அடைந்தன. காலப்போக்கில் இலக்கை நோக்கிச் சரியாகச் சென்றன.
சோதனையில் மாற்றங்களைச் செய்து பார்த்தார்கள். அறையின் நடுவில் வைக்காமல் அறையின் எந்தப் பகுதியில் தொட்டியை வைத்தாலும் குறி தப்பாமல் இலக்கு நோக்கி, பயிற்சிபெற்ற மீன்கள் சென்றன. வீட்டில் உள்ள அறைகளின் அமைப்பு குறித்து, இந்த அறையின் சுவருக்கு அப்பால் குறிப்பிட்ட அறை உள்ளது. இந்த அறையிலிருந்து இப்படிச் சென்றால் அந்த அறையை அடையலாம் என்றெல்லாம் நம் மனம் யோசிக்கும். அதே மாதிரி தம்மைச் சுற்றியுள்ள உலகம் குறித்த உள் உருவமைப்பை விலங்குகளும் கொண்டுள்ளன என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com