‘கடலைக் காப்பாற்ற வேண்டும்’ என்கிற நோக்கத்துக்காக கோவளம் முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கி.மீ. தொலைவை 6 மணி 14 நிமிடங்களில் நீந்திக் கடந்திருக்கிறார் எட்டு வயது தாரகை ஆராதனா.
மழையால் பிளாஸ்டிக் பொருட்கள் ஆற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கடலுக்குள் சென்றுவிடுகின்றன. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. ஸ்கூபா டைவர்கள் கடலுக்குள் சென்று, பிளாஸ்டிக் கழிவை அகற்றி, கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தாரகையின் அப்பா அரவிந்த் தருண்ஸ்ரீ ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராகவும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருக்கிறார். தாரகை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தே தண்ணீரை அறிமுகம் செய்துவிட்டார். அதனால், தண்ணீருக்கும் தாரகைக்கும் நல்ல புரிதல் உண்டாகிவிட்டது. ஒன்பது மாதங்களில் தண்ணீரில் மிதந்தவர், மூன்று வயதில் நீந்தவும் ஆரம்பித்துவிட்டார்.
ஐந்து வயதில் நீச்சல் குளம், கிணறு, ஆழம் குறைந்த கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங் பயிற்சியை மேற்கொண்டார். எட்டு வயதில் கடலில் மிக இயல்பாக இவரால் ஸ்கூபா டைவிங் செய்ய முடிகிறது.
“ஸ்கூபா டைவிங் மூலம் கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவை அப்பா சுத்தம் செய்வதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்தது. நானும் சுத்தம் செய்யும் பணியில் இறங்கினேன். ஆழ்கடல் மிகவும் சுவாரசியமாக இருக்கும். பல வகையான உயிரினங்களைப் பார்க்க முடியும். வண்ண மீன்களையும் ஜெல்லிமீனையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். என் தலையைச் சுற்றி நூற்றுக்கணக்கான மீன்கள் வட்டமிட்டதை என்னால் மறக்கவே முடியாது. பிளாஸ்டிக் பொருட்களை எடுப்பதோடு, வலையில் சிக்கியிருக்கும் உயிரினங்களையும் காப்பாற்றுகிறோம்” என்று சொல்லும் தாரகை, வாரம் ஒருமுறை கடற்கரையைச் சுத்தப்படுத்துகிறார். வாரம் இரு முறை அவர் வசிக்கும் பகுதியைச் சுத்தப்படுத்துகிறார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள காரப்பாக்கம் எலன் ஷர்மா ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் தாரகை, அழிந்துவரக்கூடிய ஆவுளியாவைக் காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். ஆவுளியா குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதால், அதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
“எங்கள் வீட்டில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில்லை. நீங்களும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். நான் என் பகுதியைச் சுத்தம் செய்வதுபோல் நீங்களும் உங்கள் பகுதியைச் சுத்தம் செய்யுங்கள். நான் ஆவுளியாவைக் (Dugong) காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருப்பது போல் நீங்களும் பனை மரம், சிட்டுக்குருவி, வரையாடு இப்படி ஏதோ ஒன்றைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கலாம். கடல் தினம், சுற்றுச்சூழல் தினம் போன்ற நாட்களில் மட்டும் சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்காமல், வருடம் முழுவதும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கியமானது என்பதை எல்லோரும் உணரும்போது கடல் மட்டுமல்ல, இந்த உலகமே சுத்தமாக மாறிவிடும்” என்று சொல்லும் தாரகை, ஸ்கூபா டைவிங் விதிகளின்படி பத்து வயதுக்குப் பிறகுதான் ஆழ்கடலுக்குள் செல்ல முடியும் என்பதால் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.