மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள் - மின்சாரக் கம்பியில் உட்காரும் பறவைகளுக்கு ஷாக் அடிப்பதில்லையா?

செய்திப்பிரிவு

மின்சாரக் கம்பியில் கை வைத்தால் ஷாக் அடிக்கிறது. ஆனால், கம்பியில் உட்காரும் பறவைகளுக்கு ஷாக் அடிப்பதில்லையே ஏன், டிங்கு?

- சு. யாழினி, 9-ம் வகுப்பு, ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா, திருச்சி.

நல்ல கேள்வி. பறவைகள் மின்கம்பிகளில் அமரும்போது மின்சாரம் தாக்குவதில்லை. மின்கம்பியில் உட்கார்ந்து நிலத்திலோ கம்பத்திலோ மரத்திலோ உடல் படும்போதுதான் மின் அதிர்ச்சி ஏற்படும். பறவைகள் மின்கம்பிகளில் உட்கார்ந்திருக்கும்போது, தரையுடன் தொடர்புடைய பொருட்களைத் தொடுவதில்லை. அதனால் பறவைகள் மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிவிடுகின்றன. ஒரு பெரிய பறவை மின்கம்பியில் அமர்ந்துகொண்டு மரத்தையோ, கம்பத்தையோ தொடும்போது மின் அதிர்ச்சியில் இறந்துவிடும். எப்போதாவது இப்படிச் சில பறவைகள் இறந்து போனதைப் பார்த்திருக்கலாம். பறவைகள் பொதுவாக ஒரு கம்பியில்தான் அமர்கின்றன. இரு கம்பிகளில் அமரும்போது மின்சாரம் தாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும், யாழினி.

நல்ல காரியம் செய்வதற்கு முன்பு நல்ல நேரம் பார்க்க வேண்டுமா, டிங்கு?

- ஜெ. ராஜபாரதி, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, வத்தலக்குண்டு.

நாம் நல்லது செய்தால் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். அதனால் நேரம், காலம் பார்க்காமல் நல்லது செய்யலாம் ராஜபாரதி.

எனக்குப் பாம்பு பயம் அதிகம். எங்கள் பரம்பரையில் யாரோ ஒருவர் பாம்புக்கு உதவி செய்ததால், எங்களைப் பாம்பு கடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறது; அதனால், பாம்பு கடிக்காது என்கிறார் பாட்டி. உண்மையா, டிங்கு?

- எம். கவிநிலா, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

ஒவ்வொரு பரம்பரையிலும் பாம்பு பயத்தைப் போக்குவதற்காக ஒரு பாட்டி இப்படி ஒரு கதையைச் சொல்கிறார் போலிருக்கிறது. என் பாட்டியும் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். இது வெறும் கதைதான் கவிநிலா. பாம்புகளுக்கு உதவி செய்தவர்களையும் தெரியாது. அவர்கள் பரம்பரையில் யாரையும் கடிக்கக் கூடாது என்றும் தெரியாது. பாம்புகளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். தனக்கு ஆபத்து வரும்போது, தற்காத்துக்கொள்வதற்காகக் கடிக்கும். பாம்புகளுக்குத் தொந்தரவு கொடுக்காத வரை, பாம்புகளும் நமக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. நமக்கு எப்படிப் பாம்புகள் மீது பயம் இருக்கிறதோ, அதேபோல் பாம்புகளுக்கும் மனிதர்கள் மீது பயம் இருக்கிறது. அதனால், பாம்பு நடமாடும் இடங்களில் கவனமாக, ஒதுங்கியிருந்தால் போதும். பயப்படத் தேவையில்லை. நம்மைப் போல் இந்தப் பூமியில் வசிக்கும் இன்னோர் உயிரினம்தான் பாம்பு.

கட்டெறும்புகள் கடித்தால் வலிக்கிறது. கறுப்பு எறும்புகள் கடித்தால் வலிப்பதில்லையே ஏன், டிங்கு?

- மெல்பின், 9-ம் வகுப்பு, விக்னேஷ் வித்யாலயா, கூத்தூர், திருச்சி.

எறும்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான எறும்புகள் கடிக்கக்கூடியவைதாம். ஆனால், அவை கடிக்கும்போது வெளிவிடும் ஃபார்மிக் அமிலத்தின் அளவைப் பொருத்தே நமக்கு வலியும் வீக்கமும் ஏற்படுகின்றன. சிவப்பு எறும்புகள் அதிக அளவில் ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுகின்றன. அதனால் வலி, எரிச்சல், வீக்கம் எல்லாம் அதிகமாக இருக்கின்றன. கறுப்பு எறும்புகள் குறைவான அளவே ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுவதால், நமக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை, மெல்வின்.

SCROLL FOR NEXT