மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: உலகின் நீண்ட ரயில் பயணம் எது?

செய்திப்பிரிவு

மிக நீண்ட தொலைவு செல்லக்கூடிய ரயில் பயணம் எது, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

உலகிலேயே மிக நீண்ட தொலைவு செல்லக்கூடிய ரயில் ரஷ்யாவில்தான் இருக்கிறது. டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே நீண்ட தூரம் செல்லக்கூடிய இந்த ரயிலை இயக்குகிறது. மாஸ்கோ, யூரல் மலைகள், சைபீரியக் காடுகள், பைக்கால் ஏரி போன்றவற்றைக் கடந்து, 9,259 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. இந்த ரயிலில் ஏறினால், ஆறு நாட்கள் கழித்துத்தான் கடைசி ரயில் நிலையத்தில் இறங்க முடியும்! இரண்டாவது நீண்ட தொலைவு ரயில் பயணத்தை வைத்திருக்கும் நாடு கனடா.

டொரண்டோவிலிருந்து வான்கூவர் வரை 4,466 கி.மீ. தொலைவு இந்த ரயில் செல்கிறது. மூன்றாவது நீண்ட தொலைவு செல்லும் ரயில், சீனாவில் இருக்கிறது. ஷாங்காயிலிருந்து லாசாவுக்குச் செல்கிறது. 4,373 கி.மீ. தொலைவு இந்த ரயில் பயணிக்கிறது. நான்காவது இடம் ஆஸ்திரேலியாவுக்கு. சிட்னிலியிருந்து பெர்த் நகரத்துக்கு 4,352 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. இந்தியாவுக்கு ஐந்தாம் இடம். அசாம் மாநிலத்திலுள்ள திப்ருகரிலிருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்குச் செல்லும் ரயில், 4,237 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. இப்படி ஒரு ரயிலில் ஏறி நாள் கணக்கில் பயணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், மஞ்சரி!

14 நாட்களை ஆங்கிலத்தில் Fortnight என்கிறார்கள். இது எப்படி வந்தது, டிங்கு?

- சி. நகுல், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

ஃபோர்ட்நைட் என்பது இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் ஆங்கில மொழி பேச ஆரம்பித்தபோது தோன்றிய வார்த்தை. இதற்கு 14 இரவுகள் என்று அர்த்தம். அதை பின்னர் இரண்டு வாரங்கள் அல்லது 14 நாட்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டனர். வட அமெரிக்காவில் ஃபோர்ட்நைட்டுக்குப் பதில் Biweekly என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள், நகுல்.

அசைவ உணவைக் கொண்டு செல்லும்போது ஒரு கரித்துண்டு அல்லது ஆணியைப் பையில் போட்டுக் கொடுக்கிறார் அம்மா. இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா, டிங்கு?

- அ.ச. தியாஸ்ரீ, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

இன்னுமா இதுபோன்ற நம்பிக்கைகள் இருக்கின்றன! அசைவ உணவை எடுத்துச் செல்லும்போது, ‘இல்லாத’ பேய் அந்த உணவுக்காக நம்மை அடித்துவிடும் என்றும் ஒரு கரித்துண்டு அல்லது ஆணியைப் பார்த்தால் அது பயந்து ஓடிவிடும் என்றும் சொல்வார்கள். நம் வழக்கத்தில் இருக்கும் எத்தனையோ நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. இதற்கு அறிவியல்ரீதியான காரணம் எதுவும் இல்லை. ஆணியோ கரித்துண்டோ இல்லாமல் எவ்வளவு பேர் வாகனங்களில் வைத்து அசைவ உணவுகளை டெலிவரி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள், தியாஸ்ரீ.

SCROLL FOR NEXT