மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் ஏன்?

செய்திப்பிரிவு

ஏன் மரக்கட்டையில் மின்சாரம் பாய்வதில்லை, டிங்கு?

- மு. மாணிக்க வேல், 4-ம் வகுப்பு, வள்ளுவன் பயிற்சி மையம், நெய்வேலி வடபாதி, தஞ்சாவூர்.

மரக்கட்டை மின்சாரத்தைக் கடத்தாது என்று சொல்வதில் உண்மை இல்லை, மாணிக்க வேல். குறைந்த அளவு மின்சாரம் ஈரம் இல்லாத மரக்கட்டையில் பாயும்போது கடத்தப்படுவதில்லை. ஆனால், ஈரமான மரமாக இருக்கும்போதோ அதிக அளவு மின்சாரம் பாயும்போதோ மரம் மின்சாரத்தைக் கடத்தும். அதனால், மரம் மின்சாரத்தைக் கடத்தாது என்று கவனமின்றி இருந்துவிடக் கூடாது.

சூரியன், நிலாவைச் சுற்றி ஒளிவட்டம் தெரிவது ஏன், டிங்கு?

- த. லோகேஸ்வரி, 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

சூரியனையும் நிலாவையும் சுற்றி இருக்கும் ஒளிவட்டம் மெல்லிய கீற்று மேகங்களால் (cirrus clouds) ஏற்படுகிறது. குறிப்பிட்ட கோணத்தில் மேகங்களில் உள்ள பனிப்படிகங்களே பட்டகங்கள், கண்ணாடிகளைப் போல் செயல்பட்டு, ஒளியைப் பிரதிபலிக்கின்றன. அப்போது வெள்ளை அல்லது வண்ண ஒளிவட்டங்கள் தோன்றுகின்றன. சூரியன், நிலாவைச் சுற்றித் தெரியும் ஒளிவட்டங்கள் அரிதானவை அல்ல. இயல்பாக ஏற்படுபவைதான் லோகேஸ்வரி.

டார்ச் லைட் மீது உள்ளங்கையை வைத்தால், ஒளி சிவப்பாகத் தெரிவது ஏன், டிங்கு?

- என். ஐஸ்வர்யா, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

பல வண்ணங்களின் கலவைதான் வெள்ளை ஒளி. கண்ணாடி மாதிரி ஒளி ஊடுருவக்கூடிய பொருள்கள், எல்லா ஒளிகளையும் ஏறக்குறைய ஒரே அளவில் கடத்துகின்றன. வெள்ளை ஒளி கண்ணாடி வழியாக ஊடுருவும்போது வெள்ளை ஒளியாகவே வெளிப்படுகிறது. வேறு சில பொருட்களில் ஒளி ஊடுருவும்போது, அந்தப் பொருட்களில் உள்ள சில வண்ணங்களை வெளிப்படுத்துவதும் உண்டு. நாம் உள்ளங்கை மீது டார்ச் லைட்டை அடிக்கும்போது, ஒளி தோலுக்குள் ஊடுருவி, அங்கிருக்கும் பொருட்களில் பட்டுச் சிதறி, வெளியே வருகிறது. அப்படி வரும்போது சிவப்பைத் தவிர, மற்ற வண்ணங்களைத் தோல் கவர்ந்துவிடுகிறது. அதனால், ஒளி சிவப்பாக வெளிப்படுகிறது, ஐஸ்வர்யா.

SCROLL FOR NEXT