மாயா பஜார்

இந்தியாவின் குளோனிங் ஆடு!

செய்திப்பிரிவு

காஷ்மீர் கம்பளங்கள் மென்மைக்குப் புகழ் பெற்றவை. இந்தக் கம்பளங்கள் மென்மையாக இருக்கப் பாஷ்மினா ஆடுகளே காரணம். இந்த ஆடுகளின் ரோமங்களிலிருந்துதான் புகழ்பெற்ற காஷ்மீர் கம்பளங்களும் சால்வைகளும் செய்யப்படுகின்றன.

இமயமலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளில் இந்த ஆடுகள் வாழ்கின்றன. குளிரைத் தாங்குவதற்கு ஏற்ப மென்மையான அடர் ரோமங்கள் இந்த ஆடுகளுக்கு உள்ளன. தற்போது இந்த ஆடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த இன ஆடுகள் அழியாமல் இருப்பதற்கான முயற்சியைக் காஷ்மீரின் ஷெர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை எடுத்தது.

குளோனிங் முறையில் பாஷ்மினா ஆட்டை இந்தப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அன்று இதே நாளில் குளோனிங் முறையில் இந்த ஆடு உருவாக்கப்பட்டது. (குளோனிங் என்பது உயிரியலில் படியெடுப்பு (cloning). அதாவது, ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியில் அப்படியே உருவாக்குவது. உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள் போன்றவற்றை மூதாதையிலிருந்து உருவாக்கும் செயல்முறையே குளோனிங்). இந்த ஆட்டுக்கு ‘நூரி’ எனப் பெயர் வைத்துள்ளார்கள்.

ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டில் ‘கரிமா’ என்ற எருமைக் கன்றுக்குட்டியை ஹரியாணாவில் குளோனிங் முறையில் உருவாக்கினார்கள். அதன் பின்னர் இந்தியாவில் இரண்டாவது குளோனிங் முறையில் உருவான ஆடு இதுவாகும்!

தகவல் திரட்டியவர்: பி.மதுமிதா, 7-ம் வகுப்பு,
வித்யவிகாஷ் மெட்ரிக். பள்ளி, காரமடை

SCROLL FOR NEXT