மாயா பஜார்

மனு கொடுத்தேன்; மாற்றம் கண்டேன்!

செய்திப்பிரிவு

பெரிய விஷயம் ஒன்றைச் செய்து, ஊரெல்லாம் பேச வைத்துவிட்டு, தம்பியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் இளந்தென்றல். அரியலூரின் முக்கியமான பகுதியில் இருக்கிறது ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி. 12 ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்கு அருகே மதுபானக் கடை ஒன்று இயங்கி வந்தது.

வீட்டுப் பாடங்களை ஆசிரியரிடம் காட்டுவதற்காகப் பள்ளிக்குச் செல்லும்போது, பலரும் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள். சிலர் தரையில் உருண்டு கொண்டிருப்பார்கள். உடைந்த பாட்டில்கள் பள்ளி வாயிலில் சிதறிக் கிடக்கும்.

“நானும் என் பிரெண்ட்ஸும் ஸ்கூலுக்கு வர்றதுக்கே பயப்படுவோம். என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தேன். கலெக்டரிடம் மனு கொடுக்கும் ஐடியா வந்துச்சு. அப்பாகிட்ட சொன்னேன். அவர் மனுவை எழுதச் சொன்னார். எங்களோட பிரச்சினைகளை எல்லாம் எழுதி, கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டுக்கிட்டேன். மனு எழுதினாலும் உடனே அப்பா கலெக்டர் ஆபிசுக்கு அழைச்சிட்டுப் போகல. நவம்பரிலிருந்து பள்ளிக்குப் போகணுங்கிறதாலே அப்பாவை அவசரப்படுத்துனேன். கலெக்டர் ஆபிஸ் போனோம். ஆனா, கலெக்டரைப் பார்க்க முடியல. மனுவைக் கொடுத்துட்டு, கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்கிறார் இளந்தென்றல். மனு கொடுத்த நான்காம் நாள், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியின் உத்தரவால் மதுபானக் கடை மூடப்பட்டது.

“இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்கு. இனி நாங்க பயமில்லாம ஸ்கூலுக்குப் போகலாம். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு தேங்க்ஸ் சொன்னாங்க. ஸ்கூலயும் பாராட்டினாங்க. இந்த மாதிரி செய்யணும்னு உனக்கு எப்படித் தோணுச்சுன்னு கேட்கறாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் பலருக்கும் உதவி செய்வாங்க. ஏதாவது பிரச்சினைன்னா தட்டிக் கேட்பாங்க. அவங்களைப் பார்த்து எனக்கும் இப்படி எண்ணம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்” என்று சொல்லும் இளந்தென்றல் ஆறாம் வகுப்பு படிக்கிறார். இவர் தம்பி தமிழரசன் அதே பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறார்.

ஒரு பெரிய பிரச்சினையை எப்படிக் கையாள வேண்டும் என்பதை யோசித்து, செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்ற இளந்தென்றலுக்கும் தமிழரசனுக்கும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT