இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளைக்குள்ளன் விண்மீன்களில் மிகச் சிறியதை அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்! பசடேனாவைச் சேர்ந்த இலாரியா கியாஸ்ஸோ தலைமையிலான வானவியலாளர்களால் இந்தச் சிறிய வெள்ளைக்குள்ளன் விண்மீன் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
ZTF J1901 1458 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெள்ளைக்குள்ளன் விண்மீன் பூமியிலிருந்து 130 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அதாவது ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் சென்றடைய சுமார் 130 ஆண்டுகள் ஆகும். அக்யூலா விண்மீன் தொகுதி இருக்கும் திசையில் இது இருக்கிறது.
கலிபோர்னியா பாலோமர் ஆய்வகத்தில் உள்ள சக்திவாய்ந்த Zwicky Transient Facility (ZTF) தொலைநோக்கி மூலம் இந்த ஆச்சரியமான வான்பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
சூரியனின் நிறையை ஒத்த நிறை கொண்ட விண்மீன்களின் முதுமை நிலைதான் வெள்ளைக்குள்ளன் விண்மீன். எல்லா விண்மீன்களைப் போலவே இவையும் விண்வெளியில் உள்ள மிகப் பெரிய வான்முகில்களில் உருவாகும். அப்போது இவற்றின் அளவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு போலச் சுமார் 25,000 மடங்கு இருக்கும். மெதுவாகச் சுருங்கி, திரண்டு சூரியனை ஒத்த விண்மீன் பிறக்கும். இதுதான் இந்த வகை விண்மீனின் பிள்ளைப் பருவம்.
அதன் பின்னர் மேலும் சுருங்கி சூரியன் அளவுக்குத் திரளும். இதுவே இந்த விண்மீனின் இளமைப் பருவம். இந்த நிலையில் சூரியனைப் போல ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து அதன் கருவில் ஹீலியம் உருவாகும். இந்த அணுக்கரு பிணைவு வழியே ஆற்றல் உருவாகி விண்மீன் ஜொலிக்கும். கருவில் உள்ள ஹைட்ரஜன் கையிருப்பு குறையும் நேரத்தில் இந்த விண்மீன் நடுத்தர வயதை அடையும். அப்போது இந்த விண்மீனின் உருவம் பெரிதாகும். நமது சூரியனும் சுமார் ஐநூறு கோடி ஆண்டுகள் கடந்த பிறகு, பூமியைத் தொடும் அளவுக்குப் பெரிதாக ஊதிவிடும். இந்தக் கட்டத்தைக் கடக்கும்போதுதான் சூப்பர் நோவா எனும் விண்மீன் வெடிப்பு ஏற்படும். அந்த வெடிப்புக்குப் பிறகு முதலில் இருந்த விண்மீனின் கரு சுருங்கி வெள்ளைக்குள்ளன் விண்மீனாக மாறும். இது விண்மீனின் முதுமைப் பருவம்.
பொதுவாக வெள்ளைக்குள்ளன் விண்மீன்களில் பெருமளவில் கார்பன் மட்டுமே இருக்கும் என்பதால், அது குளிரும்போது அதிக அழுத்தத்தில் விண்மீன் முழுவதுமே வைரமாக மாறிவிடும்! 1,100 கோடி வயதுடைய முதுமையான V886 சென்டாரி (லூஸி விண்மீன்) எனும் வெள்ளைக்குள்ளன் விண்மீன் முழு வைரமாக மாறியுள்ளது! ஆனால், ZTF J1901 1458 வெள்ளைக்குள்ளன் விண்மீன் உருவாகி சுமார் பத்து கோடி ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்னும் பல நூறு கோடி ஆண்டுகள் கடந்த பின்னரே இந்த வெள்ளைக்குள்ளன் விண்மீனும் வைரமாக மாறும்! இன்னும் ஆயிரம் கோடி ஆண்டுகளில் நமது சூரியனும் பூமியின் அளவை ஒத்த ஒரு வைரமாக மாறிவிடும்!
பொதுவாக வெள்ளைக்குள்ளன் விண்மீன்களின் அளவு பூமியின் அளவோடு ஒத்துப்போகும். ஆனால், ZTF J1901 1458 விட்டம் வெறும் 2,140 கி.மீ. தான். அதனால் நம் நிலாவோடு இந்த விண்மீன் அளவு ஒத்துப்போகிறது. நிலாவின் அளவே இந்த விண்மீன் இருந்தாலும் பூமியைப்போல 4,50,000 அதிக நிறை கொண்டது. அதாவது சூரியனின் நிறை போல இந்த விண்மீனில் 1.35 மடங்கு கூடுதல் நிறை உள்ளது! கூடுதல் நிறை காரணமாக அதிக வீச்சில் ஈர்ப்பு ஆற்றல் உருவாகி விண்மீன் அளவு சுருங்கும். பூமியைப் போல சுமார் 3,50,000 மடங்கு கூடுதல் ஈர்ப்பு விசை இருக்கும்.
பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் கைகளை விரித்து வைத்தால் மெதுவாகவும் கைகளை உடலோடு ஒட்டி வைத்தால் வேகமாகவும் சுழல்வார்கள். சாதாரணமாக வெள்ளைக்குள்ளன் விண்மீன் மணிக்கு ஒரு தடவை என்கிற வேகத்தில் சுழலும்போது, அளவில் சிறிய இந்த விண்மீன் 6.94 நிமிடத்துக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. இவ்வளவு வேகமாகச் சுழல்வதால் சூரியனின் காந்தப்புலத்தைப் போல சுமார் நூறு கோடி மடங்கு கூடுதல் காந்தப்புலத்தை ஏற்படுத்துகிறது.
விண்வெளியில் ஜோடி ஜோடியாக விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிவரும். சூரியனைப் போல தனித்து இருக்கும் விண்மீன்கள் குறைவு. ஜோடியாக இருந்த இரண்டு விண்மீன்கள் வெள்ளைக்குள்ளன் விண்மீன்களாக மாறி, அவை இரண்டும் பிணைந்து திரண்டு உருவானதுதான். ZTF J1901 1458 என்கிறார் கியாஸ்ஸோ.
கட்டுரையாளர், விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com