மாயா பஜார்

மேஜிக்... மேஜிக்... - பலூனுக்குள் போகும் காசு!

க.ஸ்வேதா

இந்த வாரம் உங்களுக்குப் பிடித்த பலூனையும், நாணயத்தையும் வைத்து சுலபமான ஒரு மேஜிக் வித்தையைச் செய்வோமா?

என்னென்ன தேவை?

பலூன், சில நாணயங்கள், பசை, காந்தம் (குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் மிகச் சிறிய மெல்லிய காந்தம்), விளக்கு (தேவைப்பட்டால்).

மேஜிக் எப்படிச் செய்வது?

# நன்றாக ஊதிய பலூனின் மேல் இரண்டு நாணயங்களை வைத்து, அதை விளக்குக்கு முன்னால் பிடிக்கவும் (அப்போதுதான் பலூன் உள்ளே நாணயம் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்).

# பலூனின் மேல் இருக்கும் இரண்டு நாணயங்களிலிருந்து ஒன்றை எடுத்து, மூன்று முறை மேஜிக் மந்திரம் சொல்லிக்கொண்டே மேலே தட்டுங்கள்.

# மூன்றாவது முறை தட்டியவுடன், பலூன் வெடிக்காமல் அதனுள் நாணயம் போய்விடும்.

# பலூன் முன்பு இருந்ததைப் போலவே எந்தச் சேதமும் இல்லாமல் இருக்கும்.

# பின்பு பலூனிலிருந்து காற்றை விட்டவுடன், நாணயத்தை வெளியே எடுத்துவிடலாம்.

மேஜிக் ரகசியம்

# மேஜிக் வித்தையைத் தொடங்குவதற்கு முன், ஒரு சிறிய மெல்லிய காந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாணயத்தின் மேல் பசை போட்டு காந்தத்தை ஒட்டிக்கொள்ளுங்கள்.

# இன்னொரு நாணயத்தை எடுத்து, அதை பலூனுக்குள் நுழைத்து, பலூனை ஊதுங்கள்.

# பலூனை ஊதியவுடன், காந்தம் இணைத்த நாணயத்தை பலூனுக்குள் இருக்கும் நாணயத்தின் அருகே கொண்டு செல்லுங்கள்.

# காந்தம் இணைத்த நாணயமும், பலூனுக்குள் இருக்கும் நாணயமும் ஒன்றாக ஒட்டிக்கொள்ளும்.

# இப்போது நாணயங்கள் ஒட்டிய பலூனின் பக்கத்தை மேலேகொண்டு வந்து, அதன் அருகில் இன்னொரு நாணயத்தையும் வைக்கவேண்டும்.

# இது பார்ப்பவரின் கண்களுக்கு, சாதாரணமாக இரண்டு நாணயங்கள் பலூனின் மேல் வைக்கப்பட்டிருப்பது போல தெரிய வேண்டும்.

# காந்தத்தால் ஒட்டாத, கடைசியாக பலூனின் மேல் வைத்த நாணயத்தை எடுத்து, மூன்று முறை பலூனின் மேல் தட்டுவது போல பாவனை செய்ய வேண்டும். ஆனால், பலூனுக்குள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு ஒட்டியிருக்கும் நாணயத்தை உள்ளே விழவைக்க வேண்டும். அதேநேரம் கையில் பிடித்திருக்கும் நாணயத்தையும் ஒளித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இது பார்வையாளர்களுக்குக் கையில் பிடித்திருந்த நாணயம் பலூனுள் சென்றது போல தெரியும். இதுதான் பலூனுள் நாணயத்தை நுழைக்கும் மேஜிக்.

SCROLL FOR NEXT