மருந்துகளால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவது ஏன், டிங்கு?
- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
நாம் சாப்பிடும் மருந்துக்கான எதிர்வினையே ஒவ்வாமை (அலர்ஜி). நம் உடலில் நோய்க் கிருமிகள் நுழையும்போது நோய் எதிர்ப்பு அமைப்பு அவற்றை எதிர்த்துப் போராடும். மருந்துகளை உட்கொள்ளும்போதும் நோய் எதிர்ப்பு அமைப்பு இது ஏதோ உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எதிரி என்று நினைத்து, எதிர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதன் விளைவாக அரிப்பு, காய்ச்சல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகள் வெளிப்படுகின்றன. மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை என்பது 5-10 சதவீதம் மட்டுமே உண்டாகிறது. மற்றவை எல்லாம் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள். சிலருக்கு முதல்முறை ஒரு மருந்தை எடுத்துக்கொள்ளும்போது இப்படி ஒவ்வாமை ஏற்படலாம். அது உடலுக்குப் பழகிய பிறகு அந்த மருந்தால் ஒவ்வாமை ஏற்படாது. சிலருக்குத் தொடர்ந்து குறிப்பிட்ட மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக மருத்துவர் வேறு மருத்தைக் கொடுப்பார். மருத்துவரிடம் மருந்து ஒவ்வாமை இருப்பதை நாம் சொல்லிவிட்டால், அந்த மருந்தைக் கொடுக்க மாட்டார். நாம் சொல்லாவிட்டாலும் மருந்து ஒவ்வாமை இருக்கிறதா என்று மருத்துவர்களும் கேட்பார்கள், மஞ்சரி.
அகழாய்வு தேவையானதா, டிங்கு?
- வி. ஹேம வர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
கோடிக்கணக்கில் செலவு செய்து ஏன் அகழாய்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எதிர்காலம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல கடந்த காலமும் முக்கியம். கடந்த காலத்தை ஆராய்ச்சி செய்வதால்தான் பூமி எப்படி உருவானது, உயிர்கள் எப்படித் தோன்றின, ஆதிகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அன்றிலிருந்து இன்றைய மனிதன் எப்படி முன்னேறியிருக்கிறான் என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் நமக்குத் தெரிந்திருக்கின்றன. கடந்த கால விஷயங்களை வைத்து எதிர்காலத்துக்கு நாம் திட்டமிட்டுக்கொள்ளவும் முடியும். தமிழ்நாட்டில் அகழாய்வு செய்யும் பணிகளால்தான் பண்டைய தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எந்தெந்த விதங்களில் முன்னேறியிருந்தார்கள், அவர்களின் கலை, கலாச்சாரம் எப்படி இருந்தது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் தமிழர்கள் எவ்வளவு தொன்மையானவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இதுவரை நாம் நினைத்திருந்த கருத்துகள் மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும், ஹேம வர்ஷினி.