மாயா பஜார்

புதிய கண்டுபிடிப்புகள்: ருசியான உணவா, சத்தான உணவா?

த.வி.வெங்கடேஸ்வரன்

ஒருபக்கம் பழம், பால், முட்டை, இறைச்சி போன்ற சத்தான உணவு வகைகள். மறுபக்கம் கூடுதல் இனிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த ருசியான உணவு வகைகள். இவை இரண்டும் நம் முன்னால் இருந்தால், ருசியான உணவைக் கண்டுதான் இயல்பாக நாக்கில் எச்சில் ஊறும். உண்ணும் ஆசை ஏற்படும். உடலுக்குத் தீங்கு என்றாலும் ஏன் குறிப்பிட்ட உணவை நாம் விரும்புகிறோம்? சத்தானது என்றாலும் ஏன் சிலவற்றை விரும்புவதில்லை?

யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ப்ரீத்தி சரீன், லி யான் மெக்கர்டி, மைக்கேல், என். நிதாபாச் ஆகியோர் ட்ரோசோபிலா எனும் ஒருவகை பழஈக்களில் நடத்திய ஆய்வு இந்தக் கேள்விக்கு விடை தருகிறது.

நமக்கு நாக்கில் மட்டும்தான் சுவை உணரும் செல்கள் உள்ளன. பழங்கள், ஈஸ்ட், இறந்த பூச்சிகள் ஆகியவற்றை உண்ணும் பழஈக்களின் வாய்ப் பகுதியில் மட்டுமல்லாமல், கால்கள், இறக்கை நுனி, உறிஞ்சுகுழல் ஆகிய இடங்களிலும் சுவை உணரும் செல்கள் இருக்கின்றன.

பொதுவாக ஆற்றல் தரும் உணவுப் பொருள்கள் இனிப்பாகவும், நச்சுத்தன்மை வாய்ந்த உணவுப் பொருள்கள் கசப்பாகவும் இருக்கும். கசப்பை விலக்கி, இனிப்புப் பொருளைத்தான் பழஈ தேர்வு செய்ய வேண்டும்.

முதல் பரிசோதனையில் சில குப்பிகளில் சர்க்கரைக் கரைசலும் சில குப்பிகளில் கசக்கும் குயினோனை சர்க்கரையுடன் கலந்தும் வைத்தார்கள். சர்க்கரைக் கரைசலில் சிவப்பு நிறமியையும் குயினோன் சர்க்கரைக் கரைசலில் நீல நிறமியையும் சேர்த்தனர்.

கூண்டில் இருந்த பழஈக்களை சர்க்கரைக் கரைசல் இருக்கும் பகுதிக்குத் திறந்துவிட்டனர். அவை குப்பியைத் தேர்ந்தெடுத்து உண்பதற்கு ஐந்து நிமிடங்கள் கொடுத்தனர். பிறகு மயக்க மருந்து செலுத்தி, அவற்றை பரிசோதனை செய்தனர்.

பழஈக்களின் வயிறு கண்ணாடி போலத் தெளிவாகத் தெரியும். எனவே குப்பிகளின் மீது அமர்ந்த பழஈ எதை அருந்தியது என அதன் வயிற்று பகுதியைப் பார்த்தாலே தெரிந்துவிடும். சர்க்கரைக் கரைசலை அருந்திய பூச்சியின் வயிறு சிவப்பாகவும், குயினோன் கரைசலை அருந்திய பூச்சியின் வயிறு நீலமாகவும், இரண்டையும் அருந்திய பூச்சியின் வயிறு சிவப்பும் நீலமும் கலந்தும், இரண்டையும் அருந்தாத பூச்சியின் வயிறு அதன் இயல்பு நிறத்திலும் காட்சி தரும். சாதாரண நிலையில் பூச்சி சர்க்கரைக் கரைசலை மட்டுமே நாடியது. குயினோன் கலந்த கரைசலைக் கண்டு முகம் சுளித்தது என இந்த ஆய்வில் அறிந்துகொண்டனர்.

அடுத்த ஆய்வில் கூடுதல் இனிப்பைத் தேடித் தேர்வு செய்கிறதா என்று பார்த்தனர். பல்வேறு அளவுகளில் சர்க்கரைக் கரைசலைத் தயார் செய்து குப்பிகளில் வைத்தனர். பூச்சிகள் அதிக இனிப்பை நாடின.

மூன்றாம் பரிசோதனையில் ஒருபுறம் குறைவான இனிப்பு கொண்ட சர்க்கரைக் கரைசல், மறுபுறம் கசப்பு கலந்த இனிப்பு அதிகமான சர்க்கரைக் கரைசல். இதில் எதைப் பூச்சிகள் தேர்ந்தெடுக்கும் என்று ஆய்வு செய்தனர். வயிறு நிறைய உண்டாலும் வெறும் இனிப்புக் கரைசல் குறைவான கலோரிதான் தரும். கசப்பு கலந்த மிகு இனிப்புக் கரைசல் கூடுதல் கலோரி தரும். கசப்பைச் சகித்துக்கொண்டு கலோரியைப் பூச்சி நாடுமா? இதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

குறைவான இனிப்பு கொண்ட கரைசலுக்கும் கசப்பு கலந்த கூடுதல் இனிப்பு கொண்ட கரைசலுக்கும் இடையே இனிப்பில் என்ன வேறுபாடு என்பதைப் பொறுத்துப் பூச்சிகளின் தேர்வு அமைந்தது. இரண்டுக்கும் இடையே குறைவான வித்தியாசத்தில் இனிப்பு இருந்தபோது, பூச்சிகள் கசப்பு கலந்த கூடுதல் இனிப்பை நாடவில்லை. ஆனால், பத்து மடங்கு அதிகமான இனிப்புடன் இருந்த கசப்புக் கலவையை வைத்தபோது, கசப்பைப் பொருட்படுத்தாமல், அதிக கலோரி கொண்ட இனிப்பை நாடின.

தமக்கு முன் உள்ள இரண்டு கரைசல்களில் எது இனிப்பானது என்பதை மட்டும் வைத்து பூச்சிகள் தமது தேர்வை மேற்கொள்ளவில்லை. இரண்டுக்கும் இடையே கணிசமான வேறுபாடு இருக்கும் சூழலில் மட்டுமே கசப்பு கலந்த கூடுதல் இனிப்பைப் பூச்சிகள் தேர்வு செய்தன. அதாவது இனிப்பில் கிடைக்கும் கலோரி, கசப்பு ஏற்படுத்தும் நச்சு ஆபத்து இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, பூச்சிகள் தமது உணவைத் தேர்வு செய்கின்றன என்பது விளங்கியது.

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். பூச்சிகளைப் பட்டினிப் போட்டு அடுத்த பரிசோதனைகளை மேற்கொண்டனர். நான்காம் பரிசோதனையில் 2, 6, 21, 48 மணிநேரம் எனக் கால இடைவெளியில் பட்டினி போட்டுப் பரிசோதனை செய்தனர். கூடுதல் நேரம் பட்டினியாக இருந்தால் இயல்பு நிலை அடைய கூடுதல் கலோரி தேவை. எனவே கூடுதல் நேரம் பட்டினி கிடக்கும்போது கலோரி தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகக் குறைவான இனிப்பு வேறுபாடு இருந்தாலும் கசப்பு கலந்த இனிப்பை நாடுமா என அறிவதே இந்த ஆய்வின் நோக்கம்.

வெகுநேரம் பட்டினியில் கிடந்த பூச்சி கூடுதல் கலோரி பெற கசப்பு கலந்த கூடுதல் இனிப்புக் கரைசலைத் தேர்வு செய்தது. குறைவான காலம் மட்டுமே பட்டினியாக வைக்கப்பட்ட பூச்சியிடம் கலோரி பற்றாக்குறை குறைவு என்பதால் வெறும் இனிப்புக் கரைசலை மட்டுமே தேர்வு செய்தது.

கசப்பு, இனிப்பு, கலோரி, சுவை என எளிமையாகப் பூச்சிகள் உணவைத் தேர்வு செய்வதில்லை. பூச்சிகளின் மூளை பசி நிலை, கலோரி பற்றாக்குறை நிலை, அதன் முன் உள்ள வாய்ப்புகள் எனப் பல தகவல்களைச் சீர்தூக்கி, சிக்கலான முறையில் தேர்வு செய்கிறது.

பூச்சியின் மூளை இயக்கத்திலும் மனித மூளை இயக்கத்திலும் ஒரேவிதமான நியூரோடிரான்ஸ்மீட்டர் வேதிப் பொருள்கள் சுரந்துதான் இயங்குகின்றன. எனவே பூச்சியின் ஆய்வு மனித உணவுத் தேர்வு குறித்த தெளிவை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

SCROLL FOR NEXT