வெளவாலுக்குப் பார்க்கும் திறன் கிடையாதா, டிங்கு?
- ஜெ.பி. ஆதிரா, 6-ம் வகுப்பு, சாரதா மெட்ரிக். பள்ளி, சேலம்.
வெளவாலுக்குப் பார்க்கும் திறன் உண்டு. வெளவாலின் கண்கள் இரவு நேரத்தில் பார்க்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. அந்தப் பார்வையும் நாம் பார்ப்பதுபோல் வண்ணமயமான காட்சியாக இருக்காது. பூச்சி உண்ணும் வௌவாலுக்கு பார்வைத் திறன் குறைவாக இருப்பதால், மீயொலிகளை (அல்ட்ராசவுண்ட்) எழுப்பும். அந்த ஒலிகள் பொருள் மீது பட்டு எதிரொலிப்பதை வைத்து, அந்தப் பொருளுக்கும் தனக்குமான இடைவெளியை உணர்ந்து, மோதாமல் பறக்கிறது, ஆதிரா.
நல்லது செய்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறாயா டிங்கு?
- பி. நவீன்குமார், 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
நல்லது செய்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகளும் கெட்ட நிகழ்வுகளும் தவிர்க்க முடியாதவை. அதேநேரம் ‘நல்லதை நினைப்பதும் நல்லதைச் செய்வதும் உயர்ந்த பண்புகள்’ என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் நல்லது செய்தால் பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில்லாமல், யாராக இருந்தாலும் சரி, அவர் எனக்குக் கேடு செய்தாலும் சரி, நான் நல்லபடியே நடந்துகொள்வேன்; இதுவே என் இயல்பு என்று இருப்பதே நம்மை மனிதர்களாக மாற்றுகிறது. அதனால், நாம் நல்லதைத்தானே நினைக்க வேண்டும் நவீன்குமார்!
மரவட்டை சுருள்வதால் என்ன பயன், டிங்கு?
- எஸ். அன்பரசி, 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
மரவட்டையின் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓடால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும், இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. அதனால் ஆபத்து ஏற்படும்போது உணர்வு செல்கள் மூலம் அதை உணர்ந்து, உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கின்றன. சுருண்டிருக்கும் மரவட்டைகளை எதிரியால் எதுவும் செய்ய இயலாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பு, அன்பரசி.