மாயா பஜார்

பறவை ராஜா பராக் 6 - யாரந்த மடையன்!

ஆசை

உலாவுக்கு இடையே சற்று ஓய்வெடுத்தார் மன்னர். அப்போது விக்குவது போல சத்தம் கேட்டது. தளபதியார்தான் விக்குகிறார் என நினைத்த மன்னர், “தளபதியார் குக்குக் என்று விக்குவதுபோல் இருக்கிறதே, பணிப்பெண்ணே தண்ணீர் தா, கொடுப்போம்” என்றார் மன்னர்.

ஆனால், தளபதி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். சுற்றுமுற்றும் பார்த்த பணிப்பெண்ணின் பார்வை மரத்தின் உச்சிக் கிளையொன்றில் உட்கார்ந்திருந்த ஒருத்தன் மேல் பதிந்தது.

“அரசே தளபதியார் விக்கவில்லை. குக்குறுவான்”.

“என்னது குக்குறுவானா?”

“ஆம் அரசே, குக்குறுவான்தான். அவனுக்கொன்றும் விக்கல் வரவில்லை. அவன் சத்தமே ‘குக் குக்’ என்றுதான் இருக்கும். அதனால்தான் அவனுக்குக் குக்குறுவான் என்ற பெயர் மன்னா” என்றாள் பணிப்பெண்.

“அவன் ‘குக்’ செய்வதுக்கு உச்சிக்கிளைதானா கிடைத்தது?” என்று சொல்லிய மன்னர், உலாவைத் தொடங்கினார். சோழ வள நாட்டின் வயல்களின் ஓரம் ரதம் நகர்ந்தது. வயல்களில் வெள்ளைவெள்ளையாக இருந்த ஏழெட்டுப் பேரைப் பார்த்துவிட்டுக் கேட்டார் மன்னர்,

“உழுத வயலையே இவர்கள் ஏன் திரும்பவும் உழுதுகொண்டிருக்கிறார்கள்?”

“அவர்கள் கொக்குக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மன்னா. வயல்களில் உள்ள புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் சிப்பாய்.

“அவர்களின் கழுத்து ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறது? விழுங்கும் உணவு வயிற்றுக்கு போய்ச் சேர வாரக்கணக்கில் ஆகும் போலிருக்கிறதே! ஹே…” என்றார் மன்னர்.

“நல்ல நகைச்சுவை மன்னா!” என்று தளபதி உடனே பாராட்டினார். மன்னரின் பார்வை வரப்பின் ஓரமாகப் போனது.

“யாரந்த மடையன்? வெகு நேரமாக ஆடாமல் அசையாமல் பூச்சியையும் பிடிக்காமல் நின்றுகொண்டிருக்கிறான்?” என்று மன்னர் கேட்க,

“மன்னா அவன் மடையன் அல்ல, மடையான். இவனும் கொக்கு இனத்தைச் சேர்ந்தவன்தான்” என்றார் தளபதி.

இவர்களின் சத்தம் கேட்டு மடையான் பறக்க ஆரம்பித்தது. “பாரேன், எவ்வளவு ஏமாற்று வேலை செய்கிறான். தரையில் இருந்தபோது தவிட்டு நிறத்தில் இருந்தவன் பறக்கும்போது வெள்ளையாகி விட்டானே. மாறுவேடத்தில் வந்த எதிரி நாட்டு ஒற்றனோ” என்று மன்னர் கேட்டார்.

“அப்படி இல்லை மன்னா. அவனுக்கு இறக்கையின் உட்பக்கமும் வயிற்றுப் பக்கமும் வெள்ளை நிறம். இறக்கையின் வெளிப்புறம் தவிட்டு நிறம். தரையில் நிற்கும்போது இறக்கை மூடிவிடுவதால் வெள்ளை தெரிவதில்லை” என்று விளக்கம் சொன்னார் தளபதி.

“எதிரி நாட்டை வேவு பார்க்க இவன்தான் சரி. இன்றுமுதல் இவனை ஒற்றனாக நியமியுங்கள்” என்று மன்னர் ஆணையிட்டு ரதத்தை நகர்த்தினார்.

கொஞ்சம் தூரம்கூட நடந்திருக்க மாட்டார். “நில்லுங்கள் நில்லுங்கள்! யாரந்தப் பேரழகி, ஆகா என்ன சிங்காரம்! என்ன ஒய்யாரம்! விசிறிக்கொண்டை வேறு! யாரிவள்?” என்று பக்கத்தில் தெரிந்த திடலைச் சுட்டிக் காட்டினார்.

“மன்னா அவள் பெயர் கொண்டலாத்தி”

“ஆகா பேருக்குத் தகுந்தாற்போல கொண்டையை லாத்திக்கொண்டுதான் இருக்கிறாள். ஆமாம் தரையில் என்ன செய்துகொண்டிருக்கிறாள்” என்று மன்னர் கேட்டார்.

“புழுபூச்சிகளைக் கொத்தித் தின்றுகொண்டிருக்கிறாள் மன்னா” என்றார் தளபதி.

“பேரழகி செய்யும் காரியமா இது? சேச்சேச்சே. நம் நாட்டு ஆடை அலங்கார நிபுணர்கள் இவள் கொண்டையைப் பார்த்தால் கொத்திக்கொண்டு போய்விடுவார்களே. அதற்கு முன் இவளை நாம் கொத்திக்கொண்டு போய், அரண்மனையை அலங்கரிக்க வேண்டும் தளபதி” என்று ஆணையிட்டார் மன்னர்.

தளபதி கொண்டலாத்தியைப் பிடித்துவர, ரதம் அரண்மனைக்குச் சென்றது.

(உலா முடிந்தது)

SCROLL FOR NEXT