மாயா பஜார்

டிங்குவிடன் கேளுங்கள்: பாம்புகள் பார்ப்பவை எல்லாம் பச்சையாக இருக்குமா?

செய்திப்பிரிவு

பாசி எவ்வாறு உருவாகிறது, டிங்கு?

- அனஃபா ஜகபர், 10-ம் வகுப்பு, பொன்ஜஸ்லி பப்ளிக் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில், கன்னியாகுமரி.

சூரிய ஒளி, தண்ணீர், பச்சையம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை சரியான விகிதத்தில் இருக்கும் இடங்களில் பாசிகள் உருவாகிவிடும். பிறகு தாமே ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரித்து, வாழ ஆரம்பித்துவிடும். பாசிகள் ஆரம்ப காலத்திலேயே கடலில் தோன்றிய தாவரம். பிறகு சில வகை பாசிகள் நிலத்துக்கும் வந்திருக்கின்றன, அனஃபா ஜகபர்.

இந்த ஒலிம்பிக்கில் இளம் வயதுக்காரர்கள் கலந்துகொண்டிருக்கிறார்களா, டிங்கு?

- என். சுதாகர், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.

12 வயதான சிரியாவைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹெந்த் ஸாஸா ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட மிக இளம் வீராங்கனை. இந்த ஒலிம்பிக்கில் பெண்கள் ஸ்கேட் போர்டு விளையாட்டு முதன் முதலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதில் 13 வயது 10 மாதங்கள் ஆன ஜப்பானைச் சேர்ந்த நிஷியா மொமீஜி தங்கப் பதக்கம் வென்றார். மிக இளம் வயதில் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பானியர் என்கிற சிறப்பையும் பெற்றார். இவர்களைத் தவிர, இன்னும் சிலரும் 14, 15 வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

பாம்புகளுக்கு எதைப் பார்த்தாலும் பச்சை நிறத்தில்தான் தெரியும் என்பது உண்மையா, டிங்கு?

- ரா. அன்புமதி, 8-ம் வகுப்பு, லிட்ரசி மிஷன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சோமனூர், கோவை.

மனிதர்களுக்குப் பல வண்ணங் களைப் பார்க்க முடிகிறது. பூச்சிகளுக்கு மனிதர்களால் பார்க்க முடியாத வண்ணங் களையும் பார்க்க முடியும். அதே போல பாம்புகளுக்கு நீலம், பச்சை வண்ணங்களைக் காண முடியும். அதற்காகப் பாம்புகள் பார்ப்பது அனைத்தும் நீலமாகவோ பச்சையாகவோ இருக்கும் என்று அர்த்தமில்லை, அன்புமதி. பொதுவாகப் பாம்புகளுக்குப் பார்க்கும் சக்தி குறைவாக இருக்கும். அதனால்தான் நாக்கை வெளியில் நீட்டி, இரை, எதிரி போன்றவை ஏற்படுத்தும் அதிர்வுகளை உணர்ந்துகொள்கிறது.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடந்திருக்கிறதா, டிங்கு?

- ர. புத்த பிரவீன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

125 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதில்லை. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதி இருக்க வேண்டும். சுமார் 200 நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளைக் காண உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் வருவார்கள். அவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஜப்பான் பல நூறு கோடிகளைச் செலவு செய்திருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது மிகப் பெரிய செலவு. ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வருமானம் வரும் என்றாலும் செலவு செய்த அளவுக்கு வருமா என்பது சந்தேகம்தான். அதேபோல இந்தியாவில் கிரிக்கெட் போன்ற ஒருசில விளையாட்டுகளைத் தவிர, மற்ற விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. இவ்வளவு பிரச்சினைகளையும் சரிசெய்துகொண்டால், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தலாம், புத்த பிரவீன்.

SCROLL FOR NEXT