அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை பகுதிகளில் வாழும் மான்டிஸ் இறால் நவீன ரோபாட் நடைபயில உதவுகிறது.
சீனாவின் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியாளராக இருக்கிறார் வென்-போ லீ. 1979ஆம் ஆண்டில் சூழலியல் ஆய்வாளர் ராய் கால்டுவெல் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரை இவர் கண்ணில் பட்டது. பார்ப்பதற்குக் கம்பளிப் பூச்சி போல இருக்கும் இறால், நீருக்கு அடியில் மற்ற இறால்களைப் போலவே நடக்கிறது, நீந்துகிறது. தற்செயலாகக் கரையில் ஒதுங்கினால், 20 -23 மில்லிமீட்டர் நீளமே உடைய மான்டிஸ் இறால் ஆச்சரியப்படும் விதத்தில் இடம் விட்டு இடம் நகர்கிறது என்று அந்தக் கட்டுரையில் இருந்தது.
சர்க்கஸில் கோமாளி வித்தைக்காரர்கள் குட்டிக்கரணம் போட்டு, வேடிக்கை காட்டுவார்கள். அதே மாதிரி நிலத்துக்கு வரும் மான்டிஸ் இறால் குட்டிக்கரணம் போட்டு நகர்கிறது.
ஈரமான மண்ணில் இந்த இறால் கால்களைப் பயன்படுத்துவதில்லை. பின்புறமாகக் குட்டிக்கரணம் போடுகிறது. நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது. வழியில் கல் போன்ற தடைகள் ஏற்பட்டாலோ நீரை எதிர்கொண்டாலோ தவிர, நிற்பதில்லை. பின்புறமாகக் குட்டிக்கரணம் அடிப்பதால் வழியில் தடை ஏதும் இல்லை என்றால் இறுதியில் எங்கிருந்து வந்ததோ அதே நீர்நிலையை அடைந்துவிடுகிறது என்று கண்டார் ராய்.
இந்த இறால் குறித்துத் தேடிப் படித்த லீ, வியந்து போனார். சுமார் இரண்டு மீட்டர் வரைகூட இந்த இறாலால் பின்னோக்கிக் குட்டிக்கரணம் போட்டுச் செல்ல முடியும். வழியில் 20 - 40 குட்டிக்கரணம் அடிக்கிறது. வழியில் பாதை சாய்ந்து இருந்தாலும் அதிலும் குட்டிக்கரணம் அடித்துச் செல்கிறது.
லீயும் சக ஆய்வாளர்களும் இந்த இறாலின் இடப்பெயர்வு செயலைப் போல ரோபாட்களை வடிவமைக்க முயன்றனர். பல கண்டங்கள் சேர்ந்த உடலமைப்பைக் கொண்டது இறால். இதே வடிவில் 11 கண்டங்கள் கொண்ட உருளை வடிவில் ரோபாட்டைத் தயாரித்தனர். ரயில் பெட்டிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது போல இந்தத் துண்டுகள் ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்டன. எலாஸ்டமோர் என்கிற பாலிமர் பொருளை வைத்து இந்த ரோபாட் தயாரிக்கப்பட்டது.
பொதுவாகக் குட்டிக்கரணம் போடுவதற்கு முன்னர் தரையில் இரு கைகளையும் வைத்து, உடலை வில்லாக வளைத்து, கால்களைத் தலைக்கு மேலே உயர்த்துவர். தலைக்கு மேலே உயரும் கால்கள், அதன் விசை காரணமாக மேலே உயர்ந்து நிற்காமல் கீழே விழும். இதன் காரணமாகச் சுழற்சிவிசை ஏற்படும். எனவேதான் அவரால் குட்டிக்கரணம் போட முடிகிறது. மான்டிஸ் இறாலும் இப்படித்தான் குட்டிக்கரணம் போடுகிறது.
சோம்பாட் (SomBot) என்று பெயரிடப்பட்ட இந்த ரோபாட் முதலில் தரையில் நேர்கோடு போல் கிடக்கும். அதன் தலைப்பகுதியில் உள்ள கிண்ணம் போன்ற பகுதி காற்றை உறிஞ்சும். அதனால் அங்கே வெற்றிடம் உருவாகி, அந்தக் ‘கிண்ணம்’ போன்ற பகுதி தரையோடு தரையாக ஒட்டிக்கொள்ளும். மெல்லிய குழாய் வழியே காற்றைச் செலுத்தும்போது, வெற்றிடம் விலகிக் கிண்ணப் பகுதி விடுபடும். இதன் காரணமாக ஏற்படும் விசையில் ரோபாட்டின் வால் பகுதி மேலே உயர்ந்து, வளைந்து வட்ட வடிவமாக மாறும். சக்கரம் போன்ற வடிவத்தை அடையும் ரோபாட் சற்றே பின்னோக்கி உருளும்.
ஒரு நொடியில் அதன் நீளத்தைப் போலச் சுமார் ஒன்பது மடங்குத் தொலைவு நகரும். நிலைநிறுத்தத்தை மேலும் உறுதி செய்தால் கூடுதல் வேகத்தில் இந்தச் சோம்பாட்டைச் செலுத்த முடியும் என்கிறார் லீ. ஆயினும் இரண்டு முக்கியச் சவால்கள் தம் முன் உள்ளதாக இவர் கூறுகிறார். முதலாவதாக வழவழப்பான தரைப்பரப்பில் மட்டுமே உறிஞ்சு அமைப்பு முறையான வெற்றிடத்தை ஏற்படுத்தி, பிடிப்பைத் தருகிறது. நடைமுறையில் வழுவழுப்பான தரைப்பரப்பு எல்லா இடங்களிலும் கிடைக்காது. மேலும் சக்கரம் போன்ற வடிவில் செங்குத்தாக சோம்பாட் நிற்கும்போது அது பக்கவாட்டில் விழுந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
கட்டுரையாளர், விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com