மாயா பஜார்

முதல் பள்ளியும் விநோத நோட்டும்

ஆதி

ஜூன் மாதம் பிறந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் ஸ்கூல் ஆரம்பித்திருக்கும். எல்லாமே புதுசாக இருக்கும், ஆச்சரியமாகவும் இருக்கும். அது சரி, உலகின் முதல் பள்ளிக்கூடம் எங்கே இருந்தது? உங்களைப் போன்ற மாணவர்கள் எல்லாம் அங்கே எப்படிப் படித்தார்கள், தெரியுமா?

எழுத்துகள் முதலில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டனவோ, அங்கே தானே முதல் பள்ளி இருந்திருக்க முடியும். உலகின் முதல் பள்ளிக்கூடம் எங்கிருந்தது என்பதை, அங்குப் படித்த உங்களைப் போன்ற மாணவன் ஒருவன் எழுதிய குறிப்பை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது தெரியுமா? ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.

மெசபடோமியா

அந்தச் சிறுவன் வாழ்ந்த இடம் யூப்ரடீஸ், டைகரிஸ் நதிகளுக்கு இடையே இருந்த ‘நாகரிகத்தின் தொட்டில்' என்று அழைக்கப்பட்ட மெசபடோமிய நாகரிகம் (இன்றைய இராக்). அங்கு வாழ்ந்த மக்கள் சுமேரியர்கள் எனப்பட்டனர். உலகிலேயே முதல் நகர அமைப்பு உருவானதும், எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டதுமே அந்த நாகரிகம் புகழ்பெற்றதற்குக் காரணம். இதெல்லாமே கி.மு. 4-ம் நூற்றாண்டில் நடந்தன.

உலகில் முதல் பள்ளிகள் உருவானது மெசபடோமியாவில்தான். அந்தப் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள், களிமண் பலகையில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த பாடத்தைப் படித்திருக்கிறார்கள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு புதிய களிமண் பலகையை அவர்களே உருவாக்கி எழுதியிருக்கிறார்கள், சிலேட்டைப் போல. அதன் பிறகு வாய்ப்பாடம் படித்திருக்கிறார்கள்.

பெயர் தெரியாத ஒரு மாணவன் எழுதிய இந்தக் குறிப்புகளைக் கொண்ட களிமண் பலகை தொல் பொருள் ஆராய்ச்சியில் கிடைத்தி ருக்கிறது. ‘தி மம்மாத் புக் ஆஃப் ஹௌ இட் ஹேப்பன்ட்' என்ற புத்தகத்தில் இது பற்றி ஜான் இ. லூயி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியரின் வீட்டில்

நான்கு வயதிலேயே குழந்தைகள் படிக்கச் சென்றதாகவும், மதிய உணவுக்கு ரொட்டி எடுத்துச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆசிரியரின் வீட்டில்தான் அந்தப் பள்ளிக்கூடம் நடந்ததாம். மாணவிகளும் படித்ததாகத் தெரிகிறது. சர்கன் என்ற மன்னரின் ஆட்சிக் காலத்தில் பலரும் படித்திருக்கிறார்கள். மெசபடோமிய நாகரிகத்தில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களுக்குத்தான் நல்ல வேலை கிடைத்திருக்கிறது.

களிமண் பலகை

இப்போது இருப்பதைப் போன்று காகிதத்தால் ஆன புத்தகங்களோ, நோட்டுப் புத்தகங்களோ, பேனாவோ அப்போது இல்லை. ஈரமான களிமண் பலகையில், நாணல் குச்சிகளைக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். அந்த எழுத்தாணி முனைகள் முக்கோண வடிவத்தில் இருந்ததால், எழுத்துகள் ஆப்பு வடிவத்தில் இருந்திருக்கின்றன.

அந்தச் சித்திர எழுத்துகளுக்குக் கியூனிஃபார்ம் என்று பெயர். களிமண் பலகையை வெயிலில் காயவைத்தோ அல்லது செங்கல்லைச் சுட்டெடுப்பது போல நெருப்பில் சுட்டோ பதப்படுத்தி அடுத்தவர்கள் படிக்கப் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள். பழைய பாபிலோனிய பள்ளி ஒன்றில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் நிறைய களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இந்தக் களிமண் பலகைகள்தான் புத்தகங்களாக இருந்துள்ளன என்பதற்கு இதுவே ஆதாரம்.

கியூனிஃபார்ம்

இதிலிருந்து பள்ளி உருவாவதற்குக் கியூனிஃபார்ம் எழுத்துதான் அடிப்படை என்பது புரிகிறது. அந்த எழுத்து எப்படி உருவானது? விவசாயம் செய்ய ஆரம்பித்திருந்த சுமேரியர்கள், பிறகு கால்நடைகளையும் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் தொழில்களால் வர்த்தகமும், அதனால் கிடைத்த வருமானமும் பெருக நகரங்கள் பிறந்தன.

வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளைப் பராமரிக்கவும், பரவலாகத் தொடர்பு கொள்ளவும் எழுத்துகள் பிறந்திருக்கலாம். இப்படித்தான் கியூனிஃபார்ம் சித்திர எழுத்துகள் தோன்றின. அதுதான் உலகின் முதல் எழுத்து மொழி. அதுவே முதல் பள்ளி உருவாகவும் காரணமாக இருந்திருக்கிறது.

SCROLL FOR NEXT