பொருட்களே இல்லாத அறையில் சத்தம் எழுப்பி, அதன் எதிரொலியைக் கேட்டு குதூகலித்திருக்கிறீர்களா? எதிரொலி எப்படி ஏற்படுகிறது? ஒலி அலைகள் ஏதேனும் ஒரு பொருள் மீது மோதி, திருப்பி அனுப்பப்படும்போதே எதிரொலி உண்டாகிறது. உலகில் சில இடங்களில் எழுப்பப்படும் சத்தங்கள் மிகவும் அதிசயத்தக்க வகையில் எதிரொலிக்கின்றன. அப்படிப்பட்ட சில எதிரொலித் தகவல்கள்:
# இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டுஷயர் என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் ஏதேனும் ஒரு சத்தம் எழுந்தால், அது 20 முறை திரும்பக் கேட்குமாம்.
# சிலித் தீவில் உள்ள குகையில் தகரத்தை அசைத்தால், அதனால் உண்டாகும் சிறிய சத்தம் பீரங்கியில் தோன்றும் வெடி சத்தத்தைப் போல அதிகமாகிவிடுமாம்.
# லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் ஆலயத்தின் ஒரு முனையில் நின்றுகொண்டு கிசுகிசுவென பேசினாலும், 30 மீட்டருக்கு அப்பால் உள்ள இன்னொரு முனையில் தெளிவாகக் கேட்குமாம்.
# மான்டோனா என்ற இடத்தில் ஆற்று வெள்ளத்தின் ஓசை, எதிரொலியால் சங்கு ஊதுவது போலவும், நரி ஊளையிடுவது போலவும் கேட்குமாம். பல ஆண்டுகளுக்கு முன்பு இதை பேய் பிசாசுகள் எழுப்பும் சத்தம் என்று நினைத்து அஞ்சினார்களாம்.
# வேல்ஸ் எனும் இடத்தில் உள்ள இரும்புப் பாலத்தை ஒரு முறை தட்டினால் அதிலிருந்து 576 சத்தங்கள் எழுமாம்.
# சிலி நாட்டில் 30 மீட்டர் உயரமுள்ள ஓர் கட்டிடத்தின் கீழ் அறையில் மூச்சுவிட்டாலும்கூட, அந்த ஓசை 36 மீட்டர் உயரத்தில் உள்ள மேல் மாடியில் தெளிவாகக் கேட்குமாம். டயோனீஷியஸ் என்ற அரசன் தன் பகைவர்களை இக்கட்டிடத்தில் அடைத்து வைப்பாராம். அவர்கள் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுவென பேசிக்கொள்வதை மேல் மாடியில் இருந்து கேட்பாராம்.
தகவல்: ஏ. ஹரிணி, 7-ம் வகுப்பு,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம்.