மழைக் காலத்தில் தேங்கிய தண்ணீரில் வாழும் தவளையின் சத்தத்தைக் கேட்டிருப்பீர்கள். தவளைகள் ஏதோ சும்மா சத்தம் எழுப்புகின்றன என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. தவளைகள் தங்கள் மொழியில் பேசிக்கொள்கின்றன.
தவளைகளும் தேரைகளும் சத்தம் எழுப்பி பிரத்யேக மொழியில் தொடர்புகொள்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் ஆய்வாளர் ஆபிரகாம் என்பவர் இதைக் கண்டறிந்தார். இனப்பெருக்கத்துக்காகவே தவளைகள் இப்படிப் பேசுகின்றன என்றும் அவர் சொல்கிறார்.
அது மட்டுமல்ல, பாம்பு போன்ற எதிரிகளால் ஆபத்துக்கு ஆளாகி இரையாகும் தவளை எழுப்பும் சத்தத்தை, மற்ற தவளைகள் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுமாம். தவளைகள் தங்களுக்குரிய இரை எங்கு அதிகமாகக் கிடைக்கும் என்பது குறித்தும், எது பாதுகாப்பான பகுதி என்பதையும் தவளைகள் தங்களுக்குள்ளே பேசி முடிவு செய்கின்றனவாம். இப்படி 20 வகையான செய்திகளைத் தவளைகள் தங்கள் மொழி மூலம் பரிமாறிக் கொள்கின்றனவாம்.
‘தவளை தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. ஆனால், அந்தப் பழமொழி உண்மையில்லை என்று இதிலிருந்து தெரிகிறதல்லவா?
தகவல் திரட்டியவர்: கே. ஆனந்த், 9ம் வகுப்பு,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
தென்காசி.