மாயா பஜார்

பசுமைப் பள்ளி 13: கழிவுக் கடல்

நக்கீரன்

வணக்கம் குழந்தைகளே! நான்தான் நெய்தல் மலர்.

நெய்தல் நிலமான கடற்கரையோரத்தில் வெகுநேரமாக நெய்தல் மலரைத் தேடி பசுமைப் பள்ளியின் குழந்தைகள் அலைந்தனர். கடற்கரை மணலெங்கும் அடப்பங்கொடி படர்ந்து மூடியிருந்தது. ஆங்காங்கே ராவணன் மீசை என்கிற முள்ளிச்செடியும் இருந்தது. ஆனால், நீரில் பூக்கும் நெய்தல் மலரை மட்டும் காணவில்லை.

கடலிலிருந்து பிரிந்து ஆறு போல் உட்செல்லும் உப்பங்கழியில் ஓரிடத்தில் நெய்தல் மலர்கள் பூத்திருப்பதைப் பார்த்தார்கள் குழந்தைகள். வெளிர் நீலத்தில் மலர்ந்திருந்த அந்த மலர்கள் தோற்றத்தில் அல்லி மலர்களைப் போல இருந்தன. அந்த மலரில் ஒன்றுதான் குழந்தைகளிடம் பேசியது.

உவர் நீர் எனப்படும் உப்புத் தன்மையுள்ள நீரில் மலர்ந்திருக்கும் நெய்தல் மலரைக் கண்டதும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இந்த மலரை அவர்கள் நன்னீரில் பார்த்திருக்கிறார்கள். “உவர் நீரில்கூட நீ வளர்வாயா?” என்று கேட்டாள் மைவிழி என்ற சிறுமி.

“கடல்நீரைவிட உப்புத்தன்மை குறைந்த உவர்நீர் நிறைந்த உப்பங்கழிகளிலும் காயலிலும் நான் வளர்வேன். அதனாலதான் இந்த நிலத்துக்கு நெய்தல் என்ற பெயரே வந்தது”.

“இப்போது ஏன் நிறைய இடங்களில் உவர் நீரில் நீ பூப்பதில்லை?” என்று கேட்டாள் மைவிழி.

“இப்போது உப்பங்கழியில் கடல்நீரைப் போலவே உப்புத்தன்மை அதிகமாகிவிட்டது. அதனால் எங்களால் இங்கு வளர முடியவில்லை. நெய்தல் நிலமே மறைந்து கொண்டிருக்கும்போது நெய்தல் மலருக்கு மட்டும் எங்கே இடம் இருக்கிறது?”

“ஏன் இது நெய்தல் நிலம் இல்லையா?”

“கடலிலிருந்து இரண்டு மூன்று கிலோமீட்டர் வரையுள்ள மணற்பாங்கான இடம் எல்லாமே நெய்தல் நிலம்தான். இந்த நிலம் முன்பு நெய்தல் நில மக்களான மீனவர்களிடம் இருந்தபோது, பல்லுயிர்ச் சூழலில் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போது கடற்கரையில் தொழிற்சாலைகளும் உல்லாச விடுதிகளும் பெருகிய பிறகு எல்லாமே அழிந்துவிட்டது”

“ஆமாம் கழிவுகளைக் கடலில்தானே கொட்டுகிறார்கள்” என்றாள் மைவிழி.

“அது மட்டுமா? கரையோரங்களில் நிறைய இறால் வளர்ப்புப் பண்ணைகள் உள்ளன. பண்ணைகளுள் கொட்டப்படும் வேதிப்பொருட்களும் நெய்தலின் உயிர்ச்சூழலை மாற்றிவிட்டன. இத்துடன் கடல்நீர் ஊடுருவி நிலத்தடி நீரையும் கெடுத்துவிட்டது. இதனால் அருகிலிருந்த வயல்களுக்கும் பாதிப்பு. குடிநீருக்கும் சிரமம்”.

“சில கடற்கரைப் பகுதிகளில் அமில மழையும் பெய்கிறதே?” என்றார்கள் குழந்தைகள்.

“கடற்கரைகளில் பெருகிவிட்ட தொழிற்சாலைகளே இதற்குக் காரணம். இவை வெளியிடுகிற புகையில் நச்சு வேதிப் பொருட்கள் இருப்பதுதான், அமில மழைக்குக் காரணம். ஆக, நிலமும் மாசு. நீரும் மாசு. தூய மழையும் மாசு. எதிர்காலத்தில் நீங்கள் எப்படித்தான் வாழப் போகிறீர்களோ பாவம்!” என்று சொல்லி சிரித்தது நெய்தல் பூ.

குழந்தைகளுக்குச் சிரிப்பு வரவில்லை. இப்போது நெய்தல் என்றால் அது கடலும் கடல் சார்ந்த இடமாக இல்லை. மாறாக கழிவும் கழிவைக் கொட்டும் இடமாக மாறிவிட்டது. இந்த நிலையை மாற்ற வேண்டும். நெய்தலுக்கான உறுதிமொழி இதுதான்.

‘நெய்தல் காப்போம். நம் கடலை மீட்போம்’.

(அடுத்த வாரம்: தாது மணல்)
கட்டுரையாளர்: குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

SCROLL FOR NEXT