மாயா பஜார்

புதிய கண்டுபிடிப்புகள்: மென்மையான ரோபாட் கை

த.வி.வெங்கடேஸ்வரன்

கார் தொழிற்சாலைகள் முதல் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் வரை ரோபாட்களைப் பயன்படுத்துகின்றன. இயந்திர கைகளைக் கொண்டு பாகங்களை நேர்த்தியாகப் பொருத்தி, விரைவாகப் பொருள்களைத் தயார் செய்ய ரோபோக்கள் உதவுகின்றன.

ரோபாட்டின் இரும்புக்கரம் கொண்டு எளிதில் உடையக்கூடிய பொருட்களைக் கையாள முடிவதில்லை. மனிதர்களின் மென்மையான கரங்கள்தாம் நளினமான வேலைகளைச் செய்கின்றன.

நைட்ரஜன் தேவைக்காகப் பூச்சிகளைப் பிடித்து உண்ணும் வீனஸ் ஃப்ளைட்ராப் செடியின் உத்தியைப் பயன்படுத்தி, மென்மையான ரோபாட் கரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் சிங்கப்பூர் விஞ்ஞானிகள். நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வென் லாங் லீ தலைமையில் இயங்கிய ஆய்வுக்குழு இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

வீனஸ் ஃப்ளைட்ராப் செடியின் இலைகள் இரண்டு மடல்களைக் கொண்டவை. ஒவ்வொரு தாவரத்திலும் ஐந்து முதல் ஏழு இலைகள் வரை இருக்கும். மேல் மடலில் சுமார் ஆறு முட்கள் (உணர்விகள்) காணப்படும். வாயைத் திறப்பதுபோல் இலைகளை விரித்துக் காத்திருக்கும். சிவப்பு நிறத்தால் ஈர்க்கப்பட்ட பூச்சி, இலைகளுக்குள் வரும்போது முட்களைத் தொட்டுவிடும். உடனே இலையின் மேல் மடலும் கீழ் மடலும் 'டப்' என்று மூடிவிடும். உள்ளே சிக்கிய பூச்சியைச் செடி ஜீரணம் செய்துவிடும். இலையின் மேல் மடல் முட்களைத் தொட்டால் மின்சாரத் துடிப்பு உற்பத்தியாகி, இயக்கச் செல்கள் தூண்டப்பட்டு, இரண்டு மடல்களும் மூடிக்கொள்கின்றன.

வீனஸ் ஃப்ளைட்ராப் செடியைச் செயற்கையாக இயக்க முடிவு செய்தனர். ஒட்டிப் பிணையும் தன்மை கொண்ட ஹைட்ரோஜெல்லை இலை மீது பூசி, அதன் மீது வெள்ளி நானோ துகள்களால் ஆன மெல்லிய விரிப்பை விரித்து, அதன் மீது மின்சாரம் பாயக்கூடிய மின் முனையை உருவாக்கி ஆராய்ச்சி செய்தனர். மிக நுணுக்கமான அளவு மின்சாரத்தைப் பாய்ச்சும்போது ‘டப்' என்று இலையை மூட முடிந்தது. அதாவது வெளியிலிருந்து இலையின் இயக்கத்தைக் கட்டுபடுத்த முடிந்தது.

இலையைத் தாவரத்திலிருந்து வெட்டி எடுத்த பிறகும் ஒரு நாள்வரை செயற்கையாக அதனை இயக்கவும் முடிந்தது. வெட்டி எடுத்த இலையை ரோபோ கரத்தில் பொருத்தி, அலைபேசி செயலிமூலம் இயக்கி சோதனை செய்தனர். அரை மில்லிமீட்டர் அளவே உள்ள நுண்கம்பியை இலை பொருத்திய ரோபாட் கரம் மென்மையாகப் பற்றி, எடுத்தது. ஒரு கிராம் கொண்ட பொருளைப் பிடிக்கவும் முடிந்தது.

ரோபாட் கை உருவாக்கத்தில் இந்தத் தொழில்நுட்பச் சாதனை முக்கிய மைல்கல். எனினும் ஒரு தடவை மூடிக்கொண்ட இலையைத் திறக்க, பல மணிநேரம் ஆகிறது. செயலி மூலம் இலையை மூட முடிகிறது. ஆனால், திறக்க முடியவில்லை. வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரத்தின் செயல்பாட்டை மேலும் நுணுக்கமாக அறிந்துகொண்டு, செயற்கையாக உருவாக்க ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

அமெரிக்காவின் மேய்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், செயற்கை ரோபாட் வீனஸ் ஃப்ளைட்ராப் செடியை உருவாக்கியுள்ளனர். அயானிக் பாலிமரிக் மெட்டல் காம்போசிட் (Ionic Polymeric Metal Composite) எனும் நானோ பொருள் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது நம் திசுக்கள்போல் செயல்படும். செயற்கை இலையைத் தொட்டால், இரண்டு மடல்களும் மூடிக்கொள்ளும். தொடும்போது நுண் அளவில் மின்னழுத்தம் உருவாகும். இதன் மூலம் எதிர்கால ரோபாட்களுக்குத் தொடு உணர்ச்சியை ஏற்படுத்தலாம். பக்கவாதத்தில் திசுக்களை இயக்க முடியாதவர்களுக்குச் செயற்கைத் திசுவை உருவாக்கி, சிகிச்சை அளிக்கவும் முடியும்.

SCROLL FOR NEXT