தென்னாப்பிரிக்காவின் காரூ என்கிற பகுதியில் 26 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் படிமத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது, உலகில் வாழ்ந்து அழிந்துபோன ஊர்வன இனத்தைச் சேர்ந்த ‘யூனோடோஸரஸ் ஆப்ரிகனஸ்’ என்ற உயிரினம்தான். தற்போதுள்ள ஆமையோட்டுடன் இதற்கு நிறைய தொடர்புகள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த உயிரினம் ஆமையின் மூதாதையாக இருக்குமா என்னும் ஆராய்ச்சி நடந்துவருகிறது.
ஏறக்குறைய 150 ஆண்டுகளாக இந்த வகையான பாறைப் படிமம் எங்கேயாவது கிடைக்காதா என்று ஒட்டுமொத்த அறிவியல் உலகமே காத்திருந்தது. இந்தப் படிமத்தைப் பார்க்கும்போது, ஆதிகாலத்தில் ஆமைகள் ஓடுகள் இல்லாமல் இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆய்வாளரான பெர்வர்.
யூனோடோஸரஸுக்குத் தற்போதுள்ள ஆமைகளைப் போல ஓடுகள் இல்லை. ஆனால், அதற்கு மிக அகலமான கடினமான நெஞ்செலும்பு இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். யூனோடோஸரஸின் மண்டை ஓட்டினுள் அதன் கண்ணுக்குப் பின்னால் இரண்டு ஓட்டைகள் இருக்கும். அதன் பெயர் டாய்ப்ஸிட். இது பல்லி, பாம்பு, முதலை போன்ற ஊர்வன உயிர்களிடம் காணப்படுவது. தற்போதுள்ள ஆமைகளின் உடலில் இத்தகைய ஓட்டைகள் இருக்காது. இப்போதுள்ள ஆமைகளுக்கு மண்டையோடு இருக்காது. ஆனால், கண்டெடுத்த யூனோடோஸரஸிடம் இத்தகைய ஓட்டை இருந்தது. அதுதான் தற்போதுள்ள ஆமைக்கும் அதன் மூதாதைகளாக அறியப்பட்டிருக்கும் யூனோடோஸரஸ்களுக்கும் உள்ள வித்தியாசம் என்கிறார் பெர்வர்.
இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்கள் `நேச்சர்’ஆங்கில இதழில் வெளியாகி இருக்கின்றன.
தகவல் திரட்டியவர்: த.ர. திருக்குமரன்,
9-ம் வகுப்பு, ஸ்பிரிங்ஃபீல்டு மெட்ரிகுலேஷன் பள்ளி,
சென்னை