மாயா பஜார்

கி.ரா. எனும் கதைச் சுரங்கம்

ஆதி

‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்று கொண்டாடப்படுபவர் எழுத்தாளர் கி.ரா. எனும் கி. ராஜநாராயணன். கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கறுப்பு நிற மண்ணை அதிகம் கொண்ட நிலப்பகுதியே கரிசல் எனப்படுகிறது. சிறந்த வட்டார வழக்கு எழுத்தாளர்களில் ஒருவராக தமிழ் இலக்கிய உலகம் அவரைக் கொண்டாடுகிறது. குறிப்பிட்ட பகுதியில் மக்களிடையே புழங்கும் பேச்சு மொழிநடையே வட்டார வழக்கு. அந்த மொழிநடையில் எழுதப்பட்ட கதைகள், அந்தப் பகுதி மனிதர்களின் வாழ்க்கையைக் கூறியதற்காக அவர் போற்றப்படுகிறார்.

கதைசொல்லித் தாத்தா

சிறந்த இலக்கியவாதியாக அவர் கொண்டாடப்படும் அதேநேரம், குழந்தைகளுக்கு அவர் ஒரு கதைசொல்லித் தாத்தாவாக இருந்தார். கிராமங்களில் சாதாரண மக்கள் கூறும் கதைகளைச் சேகரித்து, தொகுத்து பல புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார். அவருக்கு முன்பாகவும் இதுபோல் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன என்றாலும், கிராம மக்களிடையே புழங்கும் கதைகளை ஓர் இயக்கம்போல் சேகரித்து பதிவுசெய்யக் காரணமாக இருந்ததில் கி.ரா. தாத்தாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
குழந்தைகளுக்காக அவர் எழுதிய ‘பெருவிரல் குள்ளன்’ கதை புகழ்பெற்றது. அதைத் தவிர ‘குழந்தைப் பருவக் கதைகள்’, ‘தாத்தா சொன்ன கதைகள்’, ‘சிறுவர் நாடோடிக் கதைகள்’, ‘கி.ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்’ (தொகுப்பு: கழனியூரான்), ‘கிராமிய விளையாட்டுகள்’ ஆகிய நூல்களை அவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

குழந்தைக் கதாபாத்திரங்கள்

பெரியவர்களுக்காக அவர் எழுதிய கதைகளிலும் குழந்தைகள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அவருடைய புகழ்பெற்ற கதைகளில் ஒன்று ‘கதவு’. அந்தக் கால கிராமத்து வீடுகளில் குழந்தைகளின் விளையாட்டுக்கு உதவுவதாகவும் அவர்களிடமிருந்து பிரிக்க முடியாததாகவும் கதவு எப்படி இருந்தது என்பதை, இந்தக் கதை உணர்த்துகிறது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கதை அது.

அவர் எழுதிய ‘பிஞ்சுகள்’ குறுநாவல் சிறந்த இயற்கை சார்ந்த இலக்கியமாகவும், சிறுவர் வேட்டை இலக்கியமாகவும் கருதப்படுகிறது. அந்தக் காலக் குழந்தைகள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள், எப்படி இயற்கையை அவதானித்தார்கள், எப்படி இயற்கையிலிருந்து அறிவைப் பெற்றார்கள் என்பதை எல்லாம் அந்தக் குறுநாவலில் இருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கதைகளைப் பதின்பருவக் குழந்தைகள் வாசிக்கலாம்.

- ஆதி

SCROLL FOR NEXT